Published:Updated:

`சொத்துக்குவிப்பு வழக்கு டு ஆவின் முறைகேடு... இறுகும் பிடி!' - பாஜக-வில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாஜக-வில் இணைகிறார் ராஜேந்திர பாலாஜி?
பாஜக-வில் இணைகிறார் ராஜேந்திர பாலாஜி?

ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாலா பக்கமும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரின் திடீர் டெல்லி விஜயம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பாக சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு, தொடர் வெற்றி கண்ட ராஜேந்திர பாலாஜி, 2021 தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தங்கபாண்டியனிடம் தோல்வியடைந்தார். சர்ச்சைப் பேச்சுக்குப் பேர்போன ராஜேந்திர பாலாஜி, சித்தாந்தத்தின் அடிப்படையில் மோடியின் மிகப்பெரிய அபிமானி என்று பொதுவெளியில் தன்னைக் காட்டிக்கொண்டு, பாஜக-வுடன் மிகவும் இணக்கமாக இருந்துவந்தார்.

குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு `மோடி எங்கள் டாடி', 'மோடி இருக்கும் வரை யாரும் எங்களை மிரட்ட முடியாது!' என்றெல்லாம் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் அரசியல் கூட்டங்களில் ராஜேந்திர பாலாஜி பேசிவந்தார். முன்னதாக, 2020-ல் சிறுபான்மையினத்தவருக்கு எதிராகப் பேசியதாலும், மூத்த அமைச்சர்களை மதிக்காமல் அதிமுக-வின் கொள்கைகள் குறித்துப் பேட்டி அளித்துவந்ததாலும் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியை அதிமுக தலைமை பறித்தது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இருப்பினும், தலைமையின் உத்தரவை மீறி தனது சர்ச்சைப் பேச்சுக்கு பிரேக் போடாமல், ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பொதுவெளியில் தடாலடியாகப் பேசிவந்தார். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையிலும் பிரஸ் மீட் மற்றும் கட்சிக் கூட்டங்களில் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தவர், தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஆள் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு அமைதியாகிவிட்டார். தற்போது தமிழக அரசியல் குறித்தும், கட்சி விஷயங்கள் குறித்தும் பொதுவெளியில் பேசுவதையே நிறுத்திவிட்டார்.

இந்தநிலையில், ஆட்சி மாறிய கையோடு ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணைகளும் புத்துயிர் பெற்று அவருக்குத் தலைவலியாக மாறியிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மீது அளவுக்கு அதிகமாகச் சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பின் காரணமாக, தற்போது மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்ததுடன், மேற்கொண்டு விசாரிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இந்த மாதம் 19-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறார்.

அரசுத் தரப்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆவணங்கள் முழு முனைப்பில் திரட்டப்பட்டுவருகின்றன. வழக்கு விசாரணைக்குத் தடை கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டதால் ராஜேந்திர பாலாஜி கடந்த சில தினங்களாகவே கடும் விரக்தியில் இருந்துவந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அவருக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், மறுபுறம் கடந்த ஆட்சியில் நடந்த ஆவின் முறைகேடுகளைப் பட்டியலிட்டு ராஜேந்திர பாலாஜியைப் பதம் பார்க்க ஆளும் திமுக தீவிரம் காட்டிவருகிறது.

ஆவின் முறைகேடு!
ஆவின் முறைகேடு!

நாலா பக்கமும் சிக்கலில் சிக்கியிருப்பதால் ராஜேந்திர பாலாஜி அதிமுக தலைமையிடம் தனது நிலையைக் கூறி புலம்பியதாகவும், பதிலுக்கு அதிமுக தலைமை ஏற்கெனவே முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல புள்ளிகளை திமுக குறிவைத்திருப்பதால் இந்தச் சூழலில் எதுவும் செய்ய முடியாது என்று கூறி கைவிரித்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் திடீர் டெல்லி விஜயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட்| அடக்குமுறையை நிறுத்தச் சொல்லும் இபிஎஸ்|#Quicklook

அதிமுக தலைமை இக்கட்டான சூழலில் கைவிரித்துவிட்டதால், அதிமுக நிர்வாகிகளிடம்கூட தகவல் தெரிவிக்காமல் ராஜேந்திர பாலாஜி பாஜக-வைத் தனது கடைசி அஸ்திரமாக நம்பி நேற்று காலை 11 மணிக்கு திடீர் விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை முகாமிட்டுச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிவிட்டு, ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜக-வில் இணையவிருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தலைமைக்குக்கூட தெரிவிக்காமல் தனியாக டெல்லிக்குச் சென்றிருப்பதால் ராஜேந்திர பாலாஜி நிச்சயம் பாஜக-வில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. அதன் காரணமாக, ராஜேந்திர பாலாஜியின் திடீர் டெல்லி விசிட் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் ராஜேந்திர பாலாஜி பாஜக-வில் இணையவிருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் ஏறக்குறைய உறுதியாகியிருக்கின்றன. ராஜேந்திர பாலாஜியின் டெல்லி முகாம் குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ``அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக-வில் இணைவது தொடர்பான யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. இருப்பினும், அவ்வாறு நடந்தால் கண்டிப்பாக வரவேற்போம். சில கட்சிகளில் அங்கிருக்கும் தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. சில கட்சிகளில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. அதனால்தான் பாஜக-வை பெரும்பாலானவர்கள் தேடிவருகிறார்கள். எங்களுடைய சித்தாந்தத்தை நம்பி வருபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை வரவேற்று ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

'தூது'விட்ட ராஜேந்திர பாலாஜி முதல் ஐ.டி வளையத்தில் தி.மு.க பிரமுகர் வரை கழுகார் அப்டேட்ஸ்...

டெல்லி வட்டாரத் தகவல்களின் படி, ராஜேந்திர பாலாஜியும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரும் இன்று அல்லது நாளை முறைப்படி பாஜக-வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதை மறுக்கும் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் அவர் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சில மூத்த வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்காகவும், மரியாதை நிமித்தமாக பாஜக தலைவர்களைச் சந்திப்பதற்காகவும் மட்டுமே டெல்லிக்குச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு