Published:Updated:

திமுக ஆட்சியில் மூடப்படுகின்றனவா அதிமுக திட்டங்கள்?! - குற்றச்சாட்டும் பதிலும்!

அதிமுக - திமுக
News
அதிமுக - திமுக

ஆட்சி மாறும்போது, கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றுவது, கிடப்பில் போடுவது என்பது எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்வதுதான். தற்போது அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு மூடுகிறதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களையும் மூடிவருவதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர். இது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் எழுந்தபோது, ``அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணியில் உள்ளனர். இந்த மழை நேரத்தில்கூட இலவச உணவு அம்மா உணவகங்கள் மூலம் அளிக்கப்பட்டது” என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

இடையே குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ``அம்மா உணவகத்தை மூடினால் என்ன... கலைஞர் பெயர் உள்ள எத்தனை திட்டங்களை மூடியிருக்கிறீர்கள் நீங்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். இந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``அம்மா உணவகத்தை மூடினால் அனுபவிப்பீர்கள்” எனக் கூற, குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``கலைஞர் பெயரில் உள்ள திட்டங்களை மூடியதால்தான் தமிழக மக்கள் உங்களுக்கு இந்த தண்டனை கொடுத்துள்ளனர் (ஆட்சி அமைக்க முடியவில்லை). நீங்கள் அனுபவித்துகொண்டிருக்கிருக்கிறீர்கள்” என்றார்.

இப்படி அ.தி.மு.க., தி.மு.க ஆட்சிக் காலங்களில் பெயர் மாற்றம் செய்தவை குறித்து சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்றுக் காலம், பொங்கல் பரிசு விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகள் தலையெடுத்துக்கொண்டிருந்த காலத்தில் சட்டப்பேரவையில் இந்த விவாதம் தேவையா எனப் பொதுமக்கள் முணுமுணுக்கத் தொடங்கினர்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் - ஸ்டாலின்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் - ஸ்டாலின்

ஆட்சி மாறும்போது கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றுவது, கிடப்பில் போடுவது என்பது எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்வதுதான். தற்போது அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தி.மு.க அரசு மூடுகிறதா என விசாரித்தோம்..

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தி.மு.க அரசு அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை மூடும் முயற்சியில் இருக்கிறதா என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் கேட்டோம். ``2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க கொண்டுவந்த எந்தத் திட்டத்தையும் தடைசெய்யவில்லை. குறிப்பாக உழவர் சந்தை, சமத்துவபுரம் எல்லாம் அப்படியே அதன் பெயரிலேயே செயல்பட்டன. தலைமைச் செயலகம் என்ற பெயரில் வெறும் கண்ணாடிகளைக்கொண்டு மேற்கூரை அமைத்து கட்டடம் என்று தெரியாத அளவு சினிமா செட்போல அமைத்தார்கள். மைசூரில் இருப்பதுபோல, பெங்களூரில் இருப்பதுபோல, ஹைதராபாத்தில் இருப்பதுபோல, தமிழ்நாட்டில் இருப்பதுபோலக் கம்பீரமாகக் கோட்டைபோலக் கட்டாமல் தலைமைச் செயலகம் என்றால் என்ன என்ற புரிதலே இல்லாமல் கட்டியிருக்கிறார்கள்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

அந்த கேலிக் கூத்தான இடத்தில் தலைமைச் செயலகம் நடத்தக் கூடாது என்பதற்காக அதைத் தவிர்த்தார்கள். ஆனாலும் அந்தக் கட்டடத்தை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியுமாக மாற்றி வைத்திருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட கலைவாணர் அரங்கத்தைப் பாருங்கள்... எந்தளவு கம்பீரமாக இருக்கிறது. அப்படி இருந்திருந்தால் நிச்சயம் அம்மா ஏற்றுக்கொண்டிருப்பார்” என்றவர்…

``அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என மக்களுக்குப் பயன்படும் அனைத்துத் திட்டங்களையும் நிறுத்திவிட்டார்கள். இதன் மூலம் எந்த அளவு பயனடைந்தார்கள் என்பதை எங்களிடமில்லை, பொதுமக்களிடம் கேட்டுப்பாருங்கள். அப்போது தெரியும் உண்மை நிலவரம். நடமாடும் மருத்துவனை என்கிறார்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. பொங்கலுக்கு தொகுப்பு கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான பொருள்களை தமிழக விவசாயிகளிடம் வாங்காமல் கமிஷனுக்காக வெளி மாநிலத்தில் வாங்கியிருக்கிறார்கள். அதைவைத்து என்ன செய்வது என்றே தெரியாமல் மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். பொங்கலுக்கு முன்பு கொடுக்கவேண்டிய தொகுப்பை, பிப்ரவரி வரை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவுக்கு நிர்வாகம் சீர்கெட்டுக்கிடக்கிறது. பை-க்காக டோக்கன் கொடுக்கும் வித்தியாச அறிவிப்பை வெளியிட்ட ஒரே அரசு தி.மு.க-வினுடையதுதான். அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே ஒற்றுமை இல்லை. கொரோனா தொற்றையும் முறையாகக் கையாளவில்லை.

அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்ட பலகை
அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்ட பலகை

தி.மு.க-வுக்கு ஆட்சி நடத்தவே தெரியவில்லை. கடந்த எட்டு மாதங்களில் தாங்கள் சந்தித்த தோல்வியை மறைக்கவே அ.தி.மு.க-வினர் மீது வழக்கு, ரெய்டு, கைது என்பதோடு அ.தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டங்கள்மீதும் காழ்ப்புணர்ச்சியோடு நடந்துகொள்கிறார்கள். மக்கள் இதற்கெல்லாம் விரைவில் பதிலடி கொடுப்பார்கள்” என தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க-வின் திட்டங்களை அழிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசனிடம் கேட்டோம். ``தி.மு.க-வைப் பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சி, மலிவு அரசியலில் எப்போதும் உடன்பாடில்லை. குறிப்பாக, தளபதி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அரசியலைக் கையில் எடுக்கவே இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் கலைஞர் தொடங்கிவைத்த திட்டங்களில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளிலிருந்த கலைஞர் என்ற பெயரை மட்டும் வெட்டி எடுத்துவிட்டார்கள். கலைஞர் பெயரில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றியது, பாடப்புத்தகத்திலிருந்த திருவள்ளுவர் படத்தை மாற்றியது என இவ்வளவு செய்திருக்கிறார்கள். ஆனால், தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக் அந்தப் பெயரிலேயே செயல்பட்டது. அதில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் மட்டுமே மூடப்பட்டுள்ளன. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். பாடப் புத்தகப்பையில் எடப்பாடி, ஜெயலலிதா படங்கள் இருந்தன. அதை அப்படியே விநியோகிக்க முதல்வர் உத்தரவிட்டார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இடம்பெற்ற படங்கள் இப்போதும் இருக்கின்றன. தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வாடகைக்குவிட்டது இப்படிக் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களைச் சீரழித்தது மட்டுமல்லாமல் இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டனர். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

தமிழ் கா.அமுதரசன் - திமுக
தமிழ் கா.அமுதரசன் - திமுக

அ.தி.மு.க ஆட்சியில் தொடரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்று விளம்பரத்துக்காகத் தொடங்கப்பட்டவைதானே தவிர அதனால் எந்தப் பயனும் இல்லை. அதைச் செயல்படுத்தவுமில்லை. மக்கள் மத்தியில், கட்சியினரிடையே செல்வாக்கு இல்லை என்பதை மறைக்கவே தி.மு.க மீது தேவையில்லாத அவதூறுகள் செய்துவருகிறார்கள்” என விளக்கமளித்தார்.