Published:Updated:

அம்மா கிளினிக் இருந்ததா, இல்லையா?! - மா.சு சொன்னதும் உண்மை நிலவரமும்

அம்மா கிளினிக்
News
அம்மா கிளினிக்

`அம்மா கிளினிக் தொடங்கப்பட்டதே தவிர அது முறையாகச் செயல்படவில்லை’ என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். மேலும் அங்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்களும் பணிநீக்கம் செய்யப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகிறது. உண்மை என்ன?

சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவந்த அம்மா மினி கிளினிக்கின் பெயர்ப் பலகையை நீக்கிவிட்டு `முதல்வரின் மினி கிளினிக்' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. அந்தப் பெயர்ப் பலகையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நான்கு நாள்களுக்கு முன்பு நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர்ப் பலகை திடீரென மாற்றப்பட்டது. ``மாற்றத்தைத் தருவோம் எனச் சொல்லிவிட்டுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த இரண்டாவது நாளே முகப்பேர் பகுதியில் அம்மா உணவகம் சூறையாடப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு மதுரையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீரென மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி படத்தை ஒட்டியது என்ற வரிசையில், இப்போது சேலத்தில் அம்மா மினி கிளினிக் பெயரை மாற்றியது வரை தொடர்ந்து ஏமாற்றத்தைத் தரும் அரசாகவே தி.மு.க அரசு செயல்படுகிறது” என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

``அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரை தி.மு.க அரசு, டிசம்பர் 4-ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யவிருப்பதாக வெளியான சமூக வலைதளச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இந்தப் பணிநீக்கச் செய்தி, அம்மா மினி கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும், மன உறுதியையும் தகர்க்கும்வண்ணம் உள்ளது” என எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``மக்கள் நலத்திட்டங்களில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளைச் சத்தமில்லாமல் தி.மு.க அரசு மேற்கொண்டுவருவது கடும் கண்டனத்துக்குரியது. ஒரு பக்கம் `ரொம்பவும்’ அரசியல் நாகரிகம் வாய்ந்தவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள, `அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவரின் அரசு அதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. இப்போது `அம்மா மினி கிளினிக்'கையும் பெயர் மாற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க-வும் ஸ்டாலினும் மறந்துவிடக் கூடாது” என அரசின் நடவடிக்கைக்கு டி.டி.வி.தினகரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``சேலம் நவல்பட்டு பகுதியிலுள்ள அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டிவருகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் அம்மா மினி கிளினிக் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. இதற்கு 1,842 மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், பெயரளவில் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக் தற்போது செயல்பாட்டில் இல்லை. அப்படிச் செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” எனக் கூறினார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

மேலும் அவர், ``வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் தற்போது சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் பார்த்து மிரண்டுபோயிருப்பதால்தான் ஆதாரமில்லாத புகார்களைக் கூறிவருகின்றனர். மினி கிளினிக் மருத்துவர்கள் 1,820 பேரைப் பணிநீக்கம் செய்யாமல் வேறு இடங்களில் பணியமர்த்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” எனவும் கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மா மினி கிளினிக் செயல்படுகிறதா, இல்லையா என அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் சிலரிடம் கேட்டோம். ``அம்மா மினி கிளினிக் தொடங்கி எங்களைப் பணியமர்த்தும்போது இது தற்காலிகப் பணி என்றுதான் சொன்னார்கள். ஆனால், எவ்வளவு என்ற எந்தக் குறிப்பும் இல்லை. பணிக்கு நியமித்தவுடனேயே எங்களை கொரோனா பணியில்தான் ஈடுபடுத்தியது அரசு. அந்தக் காலகட்டத்தின் தேவையும் அதுதான் என்பதால் நாங்கள் அனைவரும் கொரோனா பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டோம். இதற்கிடையே அம்மா மினி கிளினிக் செயல்படவில்லையென்றால் எப்படி... எங்களைத்தான் கொரோனா பணிக்கு அமர்த்திவிட்டார்களே... பிறகெப்படி நாங்கள் அம்மா மினி கிளினிக்கிலும் பணியாற்றியிருக்க முடியும்? மீண்டும் கொரோனா மூன்றாவது அலை உருவாகப்போகிறது என்கிறார்கள்.

சேலம் - அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்ட பலகை
சேலம் - அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்ட பலகை

கூடுதலாகச் சுகாதாரப் பணியாளர்களை நியமிப்பதை விட்டுவிட்டு இருப்பவர்களைப் பணி நீக்கம் செய்வது, அம்மா மினி கிளினிக் செயல்படவில்லை என்று கூறுவது தேவையில்லாதது. அரசு இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

சுகாதாரத்துறையில் தொடரும் சர்ச்சை குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசினோம்... ``நேற்று, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராடிய, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 900-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் பணிநீக்க முடிவை ரத்து செய்ய வேண்டும். என்.ஹெச்.எம் மற்றும் மாவட்ட ஆட்சியர் மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையைக் கைவிட்டுவிட்டு, எம்.ஆர்.பி மூலம் நிரந்தர அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்ய வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளை மூடுவதோடு, அங்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. அதை அரசு கைவிடுவதோடு அவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல், டெங்கு, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கிடையே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடவேண்டிய பணியும் உள்ள நிலையில் மருத்துவப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வது சரியல்ல. மக்களின் உடல்நலத்தோடும், அவர்களின் வாழ்க்கையோடும், உயிரோடும் விளையாடுவதை அரசு உடனே கைவிட வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தார்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

அரசுத் தரப்பில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டோம்... ``அம்மா மினி கிளினிக்குளை ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். உத்தரவு வந்தவுடன் அப்டேட் செய்கிறேன்” என்றார்.

பிரச்னைகளைச் சரிசெய்து மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான் தற்போது எல்லோருடைய எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது!