Published:Updated:

``நம்ம கட்சிக்கு வாங்க..!” நயன்தாராவுக்கு பி.ஜே.பி அழைப்பு!

நயன்தாரா
நயன்தாரா

நயன்தாராவை எதேச்சையாகச் சந்தித்த முன்னாள் எம்.பி-யும் பி.ஜே.பி தலைவர்களுள் ஒருவருமான நரசிம்மன், பி.ஜே.பி-யில் இணைய நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

`எல்.கே.ஜி' படத்திற்குப் பின்பு தற்போது ஆர்.ஜே.பாலாஜி, `மூக்குத்தி அம்மன்’ என்கிற ஒரு பக்திப் படத்தை முதல்முறையாக இயக்குகிறார். இப்படத்தில், நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பகவதி அம்மன் கோயிலில் ரகசிய பூஜை முடித்தவுடன் தொடங்கியது. இதற்காக, படத்தில் பணியாற்றும் பலரும் விரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜையின்போது வெளிநாட்டில் இருந்த நடிகை நயன்தாரா, தமிழகம் திரும்பியவுடன் கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றார்.

பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா
பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா

தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் தூத்துக்குடிக்கு விமானம் ஏறியவரை, ரசிகர்கள் விமானத்திலேயே முற்றுகையிட்டனர். அதே விமானத்தில் பல அரசியல் வி.ஐ.பி-க்களும் பயணம் செய்தாலும் பொதுமக்கள் யாரும் அவர்களை சட்டை செய்யவில்லை. விமானமே தள்ளாடும் அளவுக்கு ரசிகர்கள் நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள அலைமோதியதால், அவர்களை கட்டுப்படுத்துவதற்குள் விமானப் பணியாளர்கள் திக்குமுக்காடிவிட்டார்களாம்.

சாலை வழியாகக் கடந்த திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்ற நயன்தாரா, கோயில் பிராகாரத்தை வலம்வந்ததுடன் சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டார். அதற்குள்ளாக, நயன்தாரா கோயிலுக்கு வந்துள்ள தகவல் தீயாகப் பரவ, உள்ளூர் ரசிகர்களும் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்களும் கூடிவிட்டனர். போலீஸார் வந்து பாதுகாப்புடன் நயன்தாராவை வழியனுப்பி வைத்தனர்.

திருச்செந்தூரில் நயன்தாரா
திருச்செந்தூரில் நயன்தாரா
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா
`விக்னேஷ் சிவன் பெயரில் அர்ச்சனை; 30 நிமிடப் பிரார்த்தனை!' - திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா

இந்நிலையில் நேற்று காலை, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் முருகனைத் தரிசித்தார். அப்போது, நயன்தாராவை எதேச்சையாகச் சந்தித்த முன்னாள் எம்.பி-யும் பி.ஜே.பி தலைவர்களுள் ஒருவருமான நரசிம்மன், பி.ஜே.பி-யில் இணைய நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல் பரவியுள்ளது.

இதுகுறித்து நரசிம்மனிடம் பேசினோம். ``நயன்தாராவும் நானும் எதேச்சையாகத்தான் சந்தித்துக்கொண்டோம். சமீபத்தில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றவர்களை ஹைதராபாத் போலீஸ் என்கவுன்டர் செய்திருந்ததை நயன்தாரா வரவேற்றிருந்தார். நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வகையில் சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்'' என்று கூறினார்.

நரசிம்மன் பி.ஜே.பி.
நரசிம்மன் பி.ஜே.பி.

பிரதமர் மோடியின் ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய நான், ``நீங்க நம்ம கட்சியில இணைய வேண்டும். உங்களை மாதிரி நட்சத்திரப் பிரமுகர்கள் நல்ல விஷயங்களைப் பேசினால், அது சாமான்ய மக்கள் வரை சென்றடையும். பி.ஜே.பி கட்சிக்கு வாங்க" என்று அழைப்பு விடுத்தேன். சிரிப்பை மட்டும் பதிலாக அளித்துவிட்டு நயன்தாரா விடைபெற்றுக்கொண்டார். தனிமனிதர்களை நம்பி பி.ஜே.பி இல்லை. ஆனால், ஸ்டார் அந்தஸ்துள்ளவர்களை கட்சியில் இணைப்பதால், பி.ஜே.பி-யின் கொள்கைகளை விரைவாக மக்களிடம் எடுத்துச்செல்ல முடியும். எல்லோரையும் எப்படி பி.ஜே.பி-க்கு வருமாறு அழைக்கின்றேனோ, அப்படித்தான் நயன்தாராவுக்கும் அழைப்பு விடுத்தேன்” என்றார்.

`எங்களால என்ன முடியும்னு தெரிஞ்சுகிட்டு கேளுங்க..!'- கூட்டணிக் கட்சிகளிடம் கெடுபிடி காட்டிய எடப்பாடி

நயன்தாரா தரப்பில் நாம் விசாரித்தபோது, ``அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எல்லாம் ஒருபோதும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, மக்கள் மனதில் தனக்குள்ள இடத்தை தக்கவைப்பதில்தான் அவர் முனைப்போடு இருக்கிறார். பி.ஜே.பி-யின் அழைப்பை அவர் புறக்கணிக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை’' என்று விளக்கமளித்தனர்.

நமீதா பா.ஜ,க.வில் இணைந்த போது
நமீதா பா.ஜ,க.வில் இணைந்த போது

பி.ஜே.பி தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் நடிகை நமீதா, ராதாரவி ஆகியோர் அண்மையில் பி.ஜே.பி-யில் இணைந்தனர். இந்நிலையில் இந்த `எதேச்சையான சந்திப்பு' மூலம் தற்போது நடிகை நயன்தாராவுக்கும் கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருக்கிறது பி.ஜே.பி.

அடுத்த கட்டுரைக்கு