Published:Updated:

14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்! - இது யாருக்கு வைக்கப்பட்ட குறி?!

சேகர் ரெட்டியின் டைரிக் குறிப்புகளை வைத்து 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்தது, வழக்கமான நடவடிக்கை என அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்பட்டாலும் அது அதிமுக-வுக்கு வைக்கும் செக் எனச் சொல்கிறார்கள். இதில் பாஜக-வின் கணக்கு என்ன..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என 12 பேர் உட்பட14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் அடக்கம். கான்ட்ராக்டராக இருந்த சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் 2016-ம் ஆண்டு வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. அதில், 34 கோடி ரூபாய்க்கான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உட்பட 147 கோடி ரூபாய் பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவுசெய்து கைதுசெய்தது. அப்போது கிடைத்த டைரியில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் பதவியில் இருப்பவர்களுடன் மிகப்பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை வைத்திருந்ததை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது, சேகர் ரெட்டி பணப் பரிவர்த்தனை செய்ததாக தனது டைரியில் குறித்துவைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி, வைத்திலிங்கம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் விளக்கமளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

பன்னீர்செல்வத்துடன் சேகர் ரெட்டி
பன்னீர்செல்வத்துடன் சேகர் ரெட்டி

இது வழக்கமான நடவடிக்கை என அதிகார வட்டாரத்தில் பேசப்பட்டாலும், அது அதிமுக-வுக்கு வைக்கும் செக் எனச் சொல்கிறார்கள். பாஜக-வின் கணக்கு என்ன..?

சேகர் ரெட்டி வழக்கு: `சிறப்புப் பரிசு' ரெட்டிக்கா.. அ.தி.மு.க-வுக்கா?

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டணிக் கட்சியினருடன் பேசி, தொகுதிப் பங்கீட்டைச் செய்துகொள்ளலாம் என திமுக அறிவித்துவிட்டது. மற்றொரு பிரதான கட்சியான அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தது. அந்தக் கூட்டணியின் மற்றொரு முக்கியக் கட்சியான பா.ஜ.க மட்டும் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோரை அதிமுக-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைத்தது. முதல் பாதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காத எடப்பாடி பழனிசாமி இரண்டாம் பாதியில் திடீரெனக் கலந்துகொண்டார். பா.ஜ.க கேட்ட இடங்களை ஒதுக்காததோடு, பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே உள்ளாட்சிப் பிரதிநிதி பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டிருப்பது பா.ஜ.க-வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பா.ஜ.க - அ.தி.மு.க
பா.ஜ.க - அ.தி.மு.க
ஃபைல் படம்

`` அதிமுக -வின் துணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பி.எஸ்-ஸையும் நியமித்தது தவறு இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அ.தி.மு.க தலைமை இறங்கி அடிக்கலாம் என நினைத்ததன் முதல் நடவடிக்கையாக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை ஓரங்கட்ட நினைத்திருக்கிறது” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் சின்னங்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லையென்றாலும் ஒரு கட்சியின் அடிமட்ட கட்டமைப்பு எப்படியிருக்கிறது என்பதைத் தலைமை அறிந்துகொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக-வை சுமந்துகொண்டிருப்பதால்தான் தோல்வியைத் தழுவினோம். எனவே, உள்ளாட்சித் தேர்தலிலாவது நமது கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என அதிமுக கட்சித் தலைமையிடம் நிர்வாகிகள் சிலர், கொஞ்சம் காட்டமாகவே சொன்னதாகத் தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டால் இப்போது இருப்பதைவிட இன்னும் மோசமான நிலைக்குக் கட்சி சென்றுவிடும் என அதிமுக உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவையெல்லாம் சேர்ந்து வேட்பாளர் அறிவிப்பில் தனது நிலையைக் காட்டிவிட்டது அதிமுக.

அ.தி.மு.க உள்ளாட்சி வேட்பாளர்கள்
அ.தி.மு.க உள்ளாட்சி வேட்பாளர்கள்

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக-வுடன் இணைந்து தங்களுக்குக் கணிசமான பிரதிநிதிகளைப் பெற்றுவிடலாம் எனவும், அதன் மூலம் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்திவிடலாம் எனவும் நினைத்திருந்த பாஜக-வுக்கு அதிமுக-வின் இந்த மூவ் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது” என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

``பா.ஜ.க தன்னை வளர்த்துக்கொள்ள அ.தி.மு.க மட்டுமே வாய்ப்பாக இருக்கிறது. எப்போதும் அ.தி.மு.க தனக்குக் கட்டுப்பட்டு இருக்கும் என நினைத்த பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க வின் நடவடிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடே அ.தி.மு.க தலைவர்களுக்கு வருமான வரித்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பது. `என்னதான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும் உங்கள் குடுமி எங்கள் கையில்தான்’ என்பதை அ.தி.மு.க-வினருக்கு உணர்த்தவுமே இந்த நோட்டீஸ். கொடநாடு, முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளும் தி.மு.க நடத்தும் வருமான வரிச் சோதனை ஆகிய நெருக்கடிகளுக்கு இடையே இதையும் சேர்த்துக்கொண்டால் அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கலாம்.

அ.தி.மு.க - பா.ஜ.க
அ.தி.மு.க - பா.ஜ.க

அ.தி.மு.க தலைவர்கள் மீது இருக்கும் வழக்குகளுக்கு எங்களைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதையும் அ.தி.மு.க-வினர் மத்தியில் ஆளும் பா.ஜ.க இதன் மூலம் உணர்த்தியிருக்கிறது” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு