Published:Updated:

`பஞ்சமி நில’ விவகாரம்... மீண்டும் கையிலெடுக்கும் பாஜக?!

ஸ்டாலின் - அண்ணாமலை

``தமிழ்நாட்டிலும் நிலங்களைப் பாதுக்காக்கவும், பட்டியல் சமூகத்தினருக்கான உரிய உரிமையை நிலைநாட்டவும் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்.” - தடா பெரியசாமி

`பஞ்சமி நில’ விவகாரம்... மீண்டும் கையிலெடுக்கும் பாஜக?!

``தமிழ்நாட்டிலும் நிலங்களைப் பாதுக்காக்கவும், பட்டியல் சமூகத்தினருக்கான உரிய உரிமையை நிலைநாட்டவும் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்.” - தடா பெரியசாமி

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

தமிழக பா.ஜ.க பட்டியல் அணி சார்பில், அணியின் மாநிலத் தலைவர் தடா பெரியசாமி தலைமையில் மாநில நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் (21.12.2022) தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுக்கப்பட்டது. அதில், `பட்டியல் சமுதாயத்துக்கு அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், வினோபா பாவே அவர்களின் தலைமையில் இயங்கிய சர்வோதயா இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நிலங்கள், ஆதிதிராவிடர் நல குடியேற்றக் கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்பட்ட நிலங்கள் என அத்தனை நிலங்களையும் பாதுகாத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தடா பெரியசாமி
தடா பெரியசாமி
Twitter

இது தொடர்பாக பா.ஜ.க பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியைத் தொடர்புகொண்டோம். ``தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கிட்டத்தட்ட ஐநூறு, அறுநூறு கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் முன்னூறு, நானுறு கிராமங்களில் பெரும்பாலான பட்டியலின மக்கள், நிரந்தர பட்டா இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கக்கூடிய வீடு கட்டும் திட்டத்தின் பயனை அவர்களால் பெற முடியாமல் போகிறது. பல ஊர்களில் இரண்டு, மூன்று தலைமுறைகளாகக் குடியிருப்பவர்களை நீர்நிலை புறம்போக்கு என்று சொல்லி அந்த ஊர்களையே காலி செய்துவிட்டார்கள். ஆனால், எத்தனையோ நீர்நிலைகளை, ஏரிகளில் ஃப்ளாட் போட்டு விற்றிருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் சில முக்கியமான கட்டடங்களையும் கட்டியிருக்கிறார்கள். பட்டியல் சமூகமாக இருப்பதால் எளிமையாக அப்புறப்படுத்திவிட்டார்கள். நிரந்தர பட்டா இல்லாததால்தான் இந்தப் பிரச்னையே. எனவே நிரந்தர பட்டாவும், இடம் இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க இந்த அரசு முன்வர வேண்டும்.

தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளரைச் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது
தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளரைச் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது
Twitter

இந்தக் கோரிக்கைகளை வைத்துத்தான் தலைமைச் செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு, ஆதி திராவிடர் நலத்துறைச் செயலாளர், நில நிர்வாக ஆணையம் ஆகிய இடங்களில் பா.ஜ.க பட்டியலின அணி சார்பில் மனு கொடுத்தோம். அதோடு தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலம் மீட்பது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் பஞ்சமி நிலம் குறித்தான விவரங்கள் முன்னுக்குப் பின்னாக இருக்கின்றன. இது குறித்து தெளிவான ஆய்வு செய்து, உரிய பயனாளர்களிடம் அது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எனவே கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில், ‘பட்டியல் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை யாரும் ஏதும் செய்ய முடியாது’ என்று தடுப்புச் சட்டம் போட்டதுபோல், தமிழ்நாட்டிலும் நிலங்களைப் பாதுக்காக்கவும், பட்டியல் சமூகத்தினருக்கான உரிய உரிமையை நிலைநாட்டவும் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்” என்றார்.

இதனால் கடந்தகால அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய பஞ்சமி நில விவகாரத்தை பாஜக மீண்டும் கையில் எடுத்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.