Published:Updated:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நாடகம் நடத்துகிறதா பாஜக? - ஓர் அலசல்

மேக்கேதாட்டு அணை விவகாரம் - பாஜக

மேக்கேதாட்டு அணையைக் கட்ட ஆர்வம் காட்டிவரும் கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது பாஜக. இதற்கு அனுமதி கொடுக்கும் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பதும் பாஜக. இந்தநிலையில், `அணையைக் கட்டவிட மாட்டோம்' என தமிழகத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிப்பதும் பாஜக!

Published:Updated:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நாடகம் நடத்துகிறதா பாஜக? - ஓர் அலசல்

மேக்கேதாட்டு அணையைக் கட்ட ஆர்வம் காட்டிவரும் கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது பாஜக. இதற்கு அனுமதி கொடுக்கும் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பதும் பாஜக. இந்தநிலையில், `அணையைக் கட்டவிட மாட்டோம்' என தமிழகத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிப்பதும் பாஜக!

மேக்கேதாட்டு அணை விவகாரம் - பாஜக

`மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம்' என கர்நாடக பா.ஜ.க அரசும், 'அணையைக் கட்டவிட மாட்டோம்' என தமிழக பா.ஜ.க-வும் மீசை முறுக்கிவருவதை, வேடிக்கை பார்த்துவருகின்றனர் இரு மாநில விவசாயிகளும்!

தமிழ்நாடு - கர்நாடகா இடையிலான காவிரிப் பிரச்னை, கன்னித்தீவு நெடுங்கதையாக நீடித்துக்கொண்டே செல்கிறது. இந்த விவகாரத்தில் லேட்டஸ்ட் டிரெண்ட் 'மேக்கேதாட்டு அணை' கட்டுவது குறித்த பிரச்னை!

ஏற்கெனவே, காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டிவைத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைத் தர மறுத்து அதிகாரம் செய்துவருகிறது கர்நாடக அரசு. தற்போது, பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் 9,000 கோடி ரூபாய் செலவில், காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக 'மேக்கேதாட்டு அணை'யைக் கட்டும் முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது அந்த மாநிலம்.

காவிரி ஆறு
காவிரி ஆறு

பல்லாண்டுக்கால சட்டப் போராட்டம், வருடம்தோறும் விவசாயிகள் போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் வழியே சிறிதளவு நீரையாவது பெற்றுவரும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கர்நாடக அரசின் இந்தப் புதிய அணைத் திட்டம் மரண பயம் காட்டிவருகிறது. இந்தநிலையில், தமிழக அரசு 'மேக்கேதாட்டு அணை' கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, `தமிழக அரசு இந்தத் திட்டத்தை எதிர்க்கக் கூடாது' என்று அன்பாக மிரட்டினார்.

ஏற்கெனவே மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனாலும் 'அணையைக் கட்டியே தீருவது' என்று கர்நாடக அரசு பிடிவாதம் காட்டிவரும் வேளையில், தமிழக அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு, 'மேக்கேதாட்டு அணையைக் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது' என தீர்மானம் இயற்றின. இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் இது குறித்து வலியுறுத்தினர்.

இதற்கிடையே கர்நாடக மாநில அரசியல் மாற்றங்களால், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள... அவருக்கு பதிலாக புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் பசவராஜ் பொம்மை. அதிரடித் தலைவர் எனப் பெயர்பெற்ற பொம்மை, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'காவிரி உபரிநீரைப் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசுக்கு முழு உரிமை உண்டு. எனவே நாங்கள் அணை கட்டும் பணியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!'' என்றார் அழுத்தமாக.

இப்படி மேக்கேதாட்டு அணையை முன்வைத்து இரு மாநில அரசியல் நிலவரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அண்ணாமலையும், தமிழகத்துக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். இதையடுத்து, 'மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்காக ஒரு செங்கல்லைக்கூட கர்நாடக அரசு எடுத்துவைக்க முடியாது' என்று பழைய கர்நாடக சிங்கமாக கர்ஜித்தார்.

பசவராஜ் பொம்மை - எடியூரப்பா
பசவராஜ் பொம்மை - எடியூரப்பா

மேலும், 'மத்திய நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது' எனக் கோரி, ஆகஸ்ட் 5-ம் தேதி தஞ்சாவூரில் தமிழக பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துவிட்டார் அண்ணாமலை. தமிழக நலன் சார்ந்து தமிழக பா.ஜ.க-வினர் இப்படி திடீர் உணர்ச்சிவசப்பட்டிருப்பதில் தமிழக மக்களுக்கே பேரதிர்ச்சி! ஆனாலும், அரசியல் விமர்சகர்கள், 'தமிழக பா.ஜ.க-வின் இந்த முடிவு திட்டமிட்ட நாடகம்' என்று கடுமையாகச் சாடிவருகின்றனர்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையோ, தமிழக பா.ஜ.க-வின் உண்ணாவிரத முடிவை அவ்வளவு சீரியஸாகவெல்லாம் அணுகாமல், ''தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உண்ணும் விரதம்கூட இருக்கட்டும். அதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அண்ணாமலை கூறியுள்ள கருத்துக்கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருப்பது எனக்கு வேலையும் அல்ல...'' என தடாலடியாக போட்டுத்தாக்க.... தமிழக பா.ஜ.க-வினரே கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்கள்.

இதற்கிடையே, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், பா.ஜ.க-வினர் காட்டிவரும் ஆதரவு-எதிர்ப்பு நிலை குறித்துப் பேசுவோர், ''அணையைக் கட்ட ஆர்வம் காட்டிவரும் கர்நாடக மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுவும் பா.ஜ.க. இதற்கு அனுமதி கொடுக்கும் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருப்பதும் பா.ஜ.க. இந்தநிலையில், 'அணையைக் கட்டவிட மாட்டோம்' எனத் தமிழகத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிப்பதும் பா.ஜ.க. இப்படி, மூன்று கதாபாத்திரங்களையும் ஒரே கட்சி செய்துவருவது, இந்திய அரசியலில் ஒன்றும் புதிது அல்ல.

கடந்தகால இந்திய அரசியல் வரலாற்றில், இதே காவிரி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அன்றைய காங்கிரஸ் கட்சியினர் செய்துவந்த அதே அரசியல்தான். மத்திய அரசு அமல்படுத்துகிற திட்டங்களுக்கு எதிர்ப்பு வரும் சூழ்நிலையில், 'இந்தத் திட்டத்தை புதிதாக நாங்கள் கொண்டுவரவில்லை; ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி கொண்டுவந்ததுதான். அதை நாங்கள் இப்போது செயல்படுத்துகிறோம். அவ்வளவுதான்...' என்று சமாதானம் சொல்லி தப்பிப்பார்கள் பா.ஜ.க-வினர்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த வரிசையில், ஒரே விஷயத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு, அனுமதி என மூன்று கேரக்டர்களில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் செய்துவந்த அரசியலை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, மேக்கேதாட்டு விஷயத்தை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது பா.ஜ.க. இந்த நாடகங்களையெல்லாம் இந்திய மக்கள் ஏற்கெனவே பலமுறை பார்த்துவிட்டார்கள்தான்! இப்போதும் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று மத்திய அரசிடம் அனுமதி பெற்று மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீரும். வழக்கம்போல், தமிழ்நாட்டிலிருந்து சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டு, சொட்டுத் தண்ணீரை எதிர்பார்த்து நா வறண்டு கிடக்கப்போகிறோம்!'' என்கின்றனர் விரக்தியாக.

இது குறித்து தமிழக பா.ஜ.க-வின் விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜிடம் கருத்து கேட்டபோது, ''காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்ததோடு, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நிர்ணயித்து, அதற்காக ஒரு குழுவையும் அமைத்தது மத்திய பா.ஜ.க அரசுதான். அதனால்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக காவிரியில் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்துவருகிறது.

'அணையைக் கட்டியே தீருவோம்' என்று கர்நாடக பா.ஜ.க சொல்கிறதென்றால், அது அவர்களுடைய கொள்கை, கோரிக்கை மற்றும் அந்த மாநில மக்களுக்கான ஒரு நிலைப்பாடு. ஆனால், அவர்கள் நினைப்பதுபோல் மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு அனுமதி தர முடியாது என்பதை மத்திய அரசின் ஜல்சக்தித்துறை அமைச்சர் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லிவிட்டார்.

ஜி.கே.நாகராஜ்
ஜி.கே.நாகராஜ்

வருகிற ஐந்தாம் தேதி, தஞ்சையில் தமிழக பா.ஜ.க நடத்தவிருக்கிற உண்ணாவிரதப் போராட்டம் என்பது, 'தமிழக விவசாயிகளின் நிலைமையை கர்நாடக அரசுக்கு எடுத்துச்சொல்வதும், அணை கட்டுகிற கோரிக்கையைக் கைவிட வேண்டும்' என்பதை வலியுறுத்தியும் நடக்கிறது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு தலைவர்களும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள். எனவே, போராட்டத்துக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்! கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி செய்துவருகிறது என்பதற்காக, தமிழக பா.ஜ.க வாய்மூடி மௌனமாக இருக்காது... மற்ற கட்சிகளைப்போல் அரசியலும் செய்யாது!'' என்கிறார் உறுதியாக.