Published:Updated:

புதிய கல்விக் கொள்கை: 3-வது மொழி... இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு! - அண்ணாமலையின் அஸ்திரம் எடுபடுமா?

அண்ணாமலை | புதிய கல்விக் கொள்கை
News
அண்ணாமலை | புதிய கல்விக் கொள்கை

''தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையில் எங்கேனும் குறிப்பிட்டிருந்தால், தயவு செய்து அதனை எடுத்துக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

புதிய கல்விக் கொள்கை குறித்தான சர்ச்சையை மறுபடியும் ஆரம்பித்து வைத்திருக்கிறார் அண்ணாமலை! அண்மையில், 'தமிழக பா.ஜ.க இந்தித் திணிப்பை எதிர்க்கிறது; புதிய கல்விக் கொள்கைதான் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கிறது' என்றெல்லாம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருப்பது தமிழகத்தையே அதிர வைத்திருக்கிறது.

மத்திய பா.ஜ.க அரசின் 'புதிய கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கிறது. நாடு முழுக்க உள்ள பல்வேறு தாய்மொழிக் கல்வியையும் சிதைத்து, 'ஒரே நாடு, ஒரே மொழி' என்ற பா.ஜ.க-வின் கொள்கையை நிறைவேற்றத் துடிக்கிறது' என்பது போன்ற விமர்சனங்கள் தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அனலைக் கிளப்பிவருகின்றன.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கத் துடித்து வரும் தமிழக பா.ஜ.க-வும் 'இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு' கோஷத்தை முன்வைத்திருப்பது பலரையும் ஆச்சர்ய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதாவது, ''இந்தித் திணிப்பை தமிழக பா.ஜ.க-வும் எதிர்க்கிறது; மேலும் புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் தாய்மொழிக் கல்வியை உறுதிப்படுத்துகிறது. எனவே தமிழ் மொழியில் கல்வி கற்பது கட்டாயமாகியிருக்கிறது. இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் மூன்றாவது மொழியாக விருப்பத் தேர்வும் என மும்மொழிக் கொள்கையைக் கொண்டிருக்கிறது' என்றெல்லாம் அண்ணாமலை நீண்ட நெடிய விளக்கம் கொடுத்திருப்பது... கல்வியாளர்கள் மத்தியில் மீண்டும் விவாத அலையை எழுப்பியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்துப் பேசுகிற 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச்செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''புதிய கல்விக் கொள்கையில், 'மொழி' என்பது மொழியாகப் பேசப்படவில்லை என்ற அடிப்படையை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள எந்தவொரு மொழியையுமே இந்தத் திட்டம் மதிக்கவில்லை எனபதுதான் உண்மை.

அதாவது, தாய்மொழிக் கல்விதான் பயிற்றுவிக்கப்படும் என்றால், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் பயின்றுவரும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியில்தானே கற்றுக்கொடுக்க வேண்டும்? அதேபோல், அந்தந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளும் அந்தந்த மாநில தாய்மொழியில்தானே கற்றுக்கொடுக்க வேண்டும்... இதுபற்றியெல்லாம் புதிய கல்விக் கொள்கையின் தாய்மொழிக் கற்றல் பிரிவில் எதுவும் குறிப்பிடப்படவில்லையே. ஆக பயிற்று மொழி குறித்து இந்தத் திட்டத்தில் எந்தவொரு தெளிவுமே இல்லை.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஆனால், தமிழக பா.ஜ.க தலைவரோ, புதிய கல்விக் கொள்கை, 5-ம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார். 'ஒன்றாம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை கட்டாயமாக இந்திய மக்கள் அவரவர் பேசிவரும் தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்படும்' என்று தேசியக் கல்விக் கொள்கையில் எங்கேனும் குறிப்பிட்டிருந்தால், தயவு செய்து அதனை எடுத்துக் காட்டும்படி அண்ணாமலையைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில், புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய பா.ஜ.க அரசு வெளியிட்டுள்ள ஆங்கில மொழி அறிக்கையில், பக்கம் 13-ல் 'பன்மொழி ஆற்றல் - கற்றல்' (Multilingualism and the power of language) என்ற தலைப்பின் கீழ் 4.11-ல் பயிற்றுமொழி பற்றிக் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள்தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறது. அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரையிலாக தாய்மொழியில் கற்பிக்கச் செய்வதென்பது 'Wherever possible' என்ற வார்த்தையில்தான் குறிப்பிடப்படுகிறது. இந்த வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தம் 'எங்கெல்லாம் சாத்தியமோ...' என்பதாகும். அதாவது, 'வாய்ப்பிருந்தால் அல்லது எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு' என்றுதான் மிகக் கவனமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால், '5-ம் வகுப்புவரை தாய்மொழியில் கற்பிக்கப் படவேண்டும், அதன்பிறகு 8-ம் வகுப்பு வரையிலும் அதற்கடுத்தும்கூட தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் (மத்திய பா.ஜ.க அரசு) விரும்புகிறோம்' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக எல்லாமே இவர்களது விருப்பம் மட்டும்தான். மற்றபடி கட்டாயம் என்று எதுவும் கிடையாது.

இன்றைக்கு நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டத்திலும்கூட, 'தாய்மொழியில்தான் கல்வி' என்று உறுதியாக சொல்லப்படவில்லை. அப்படியென்றால், நடைமுறையில் இருப்பதைத்தானே புதிய கல்விக்கொள்கையும் சொல்லியிருக்கிறது. உண்மை இப்படி இருக்கும்போது, திரும்பத்திரும்ப 'புதிய கல்விக்கொள்கைதான் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறது; உறுதிப்படுத்துகிறது' என்றெல்லாம் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர்.

வகுப்பறை
வகுப்பறை

தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகிறது என்று சொல்கிறவர்கள், 'உத்தரப் பிரதேசத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் தமிழில் கல்வி கற்பதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது' என்ற விவரத்தைச் சொல்லவேண்டும். தமிழ் பேசாத மாநிலங்களில், தமிழ் மொழியைக் கற்பிக்கச் செய்யும் ஆசிரியர் நியமனங்களுக்காக இதுவரை எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தெலுங்கு பேசாத மாநிலங்களில் தெலுங்கைக் கற்பிக்கச் செய்ய எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது, முறையே கன்னடம், மலையாளம் என ஒவ்வொரு மொழியையும் மற்ற மாநிலங்களிலும் கற்பிக்கச் செய்ய எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியைக் கற்பிக்க மட்டுமே மத்திய பா.ஜ.க அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அப்படியென்றால், உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கச் செய்ய தமிழ்நாடு அரசுதான், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமா? தமிழ்நாட்டிலிருந்து வரி வசூல் செய்த தொகையைக் கொண்டு இந்தி மொழியைக் கற்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு, அவரவர் தாய் மொழியைக் கற்பிக்கச் செய்ய மட்டும் அந்தந்த மாநிலங்களே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சொல்கிறதா?

அப்படியென்றால், புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் கீழ் இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 50 கோடி ரூபாய் எந்த மொழிக்காக ஒதுக்கப்பட்டது, சமஸ்கிருத மொழிக்காக இதுவரை எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது, மற்ற மொழிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள் எவ்வளவு என்பதுபோன்ற விவரங்களையும் அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

இதையடுத்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளரான கரு.நாகராஜனிடம் பேசியபோது, ''புதிய கல்விக் கொள்கைத் திட்டம் மொத்தம் 874 பக்கங்கள் கொண்டது. அதில், 5-ம் வகுப்புவரை தாய்மொழிக் கல்விதான் அவசியம் என்பது உள்ளது. அதற்கு மேலும்கூட தாய்மொழிக் கல்வியைத் தொடரலாம் என்பதுவும் அதிலேயே இருக்கிறது. இந்த அம்சங்கள் எல்லாம் இதுவரையிலான கல்விக்கொள்கையில் கிடையாது. எனவே, இதை எல்லோரும் வரவேற்கவேண்டும்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

அடுத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் தமிழ் மாணவர்களுக்கானது மட்டும் இல்லை. ராணுவத்தினர் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கானது. பணி நிமித்தமாக பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் சூழ்நிலைகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் தொடர்ச்சியாக ஒரே மொழியில் பாடம் பயிலுவதற்கான வசதிக்காக கொண்டுவரப்பட்ட இந்தப் பள்ளிகளோடு மொழிப் பிரச்னையை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.

தமிழ்நாட்டிலுள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தி சொல்லிக்கொடுக்கப்படவில்லை என்றால், பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை அந்தப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை. இப்படி மக்களே இந்தியை விருப்பத்துடன் படிக்கக்கூடிய வகையில், தமிழகம் மாறிவிட்டது. ஆனாலும்கூட, இன்னும் இந்தி, தமிழ் என்று சொல்லிக்கொண்டு இங்கே சிலர் குழப்பிவருகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்திலும் தமிழைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இருப்பார்கள்தான். இல்லையென்று நாம் சொல்லிவிட முடியாது. அடுத்து அங்கே, நம்முடைய முயற்சியால், திருக்குறளே பாடத்திட்டமாக கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழியான தாய்மொழிக் கொள்கையை ஊக்கப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பத்திப் பேசுவதற்கே இவர்களுக்கெல்லாம் அருகதை கிடையாது. 11-ம் வகுப்புவரை படித்த மாணவன் இடையிலேயே கல்வியைத் தொடரமுடியாமல் போனால், சான்றிதழில், 'ப்ளஸ் டூ' என்று போட்டுக்கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில், ஃபர்ஸ்ட் இயர் டிகிரி, செகன்ட் இயர் டிகிரி எனப் போட்டுக்கொள்ளும் வசதியைக்கூட புதிய கல்விக்கொள்கைதான் கொடுக்கிறது.

6-ம் வகுப்புக்கு மேல், ஒவ்வொரு மாணவனுக்கு தொழிற்கல்வி சிந்தனை வரவேண்டும் எனச் சொல்கிறது புதிய கல்விக்கொள்கை. ஆனால், இதையும்கூட 'குலக்கல்வித் திட்டம்' என விமர்சிக்கிறார்கள்'' என்று தொடர்ந்தவரிடம்,

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

'தாய்மொழி வழியே பயிற்றுவித்தல் தொடர்பாக புதிய கல்விக் கொள்கை என்ன சொல்கிறது...' என்றக் கேள்வியைத் திரும்பவும் கேட்டபோது, ''இங்கே நிறையபேர் கல்வியாளர் என்ற முகமூடியோடு அரசியல்தான் பேசுகிறார்கள். முகமூடிகளைக் கழட்டினால்தான், இவர்கள் யாருக்காகப் பேசுகிறார்கள் என்பது தெரியவரும்.

மற்றபடி 5-ம் வகுப்புவரை தாய்மொழி ஊக்குவிக்கப்படும், தாய்மொழி கற்பிக்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கையில் இருக்கிறது. இதற்கு முன்பு கல்விக்கொள்கையில் இது இருந்ததா? ஆக, இல்லாத ஒன்றை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருப்பதை பாராட்டுங்கள். அதை விட்டுவிட்டு, 'தாய்மொழியில் கட்டாயம் பயிற்றுவிக்கப்படும்' என்ற சொல் இல்லையே என வீம்புக்குப் பேசுகிறவர்களை என்ன செய்ய முடியும்?'' என்றார்.