Published:Updated:

`நாட்டில் எஞ்சிய ஒற்றை தேசிய கட்சி பாஜக மட்டும்தான்!' - நட்டாவின் பேச்சும், கள யதார்த்தமும்!

ஜே.பி.நட்டா

இந்தியாவில் எஞ்சியுள்ள ஒரே தேசிய கட்சி பாஜக மட்டும்தான் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார். இந்த கருத்து மூலம் அவர் சொல்ல வருவது என்ன?

`நாட்டில் எஞ்சிய ஒற்றை தேசிய கட்சி பாஜக மட்டும்தான்!' - நட்டாவின் பேச்சும், கள யதார்த்தமும்!

இந்தியாவில் எஞ்சியுள்ள ஒரே தேசிய கட்சி பாஜக மட்டும்தான் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார். இந்த கருத்து மூலம் அவர் சொல்ல வருவது என்ன?

Published:Updated:
ஜே.பி.நட்டா

பாஜக மட்டுமே தேசிய கட்சி:

குஜராத்தின் துவாரகாவிலிருந்து போர்பந்தர் வரை பா.ஜ.க-வின் இரண்டாவது யாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, ``ஒரு காலத்தில் அரசியல் என்றால் ஊழல், பதவியிலிருந்து கொண்டு மக்களை ஏமாற்றி மகிழ்வது என்ற நிலை இருந்தது. ஆனால், பிரதமர் மோடி இந்த நிலையை மாற்றி, சேவையில் ஈடுபட்டார். இந்தியாவில் பாஜக-வைத் தவிர வேறு எந்த தேசிய கட்சியும் இல்லை. காங்கிரஸ் சுருங்கிவிட்டது. இனி அது தேசிய கட்சி இல்லை" என்று கூறினார்.

ஜே.பி நட்டா
ஜே.பி நட்டா

இதற்கு முன்பு ஒருமுறை ஜே.பி. நட்டா பாஜக-வின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, ``நாட்டின் அனைத்து மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. பாஜக மட்டுமே அரசியல் தொடர்புடைய கட்சியாகவும், கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகவும் இருக்கிறது. எந்த தேசிய கட்சிக்கும் பாஜக-வை எதிர்த்து நிற்கும் வலு கிடையாது. அனைத்து குடும்ப அரசியல் கட்சிகளின் அரசியலும் விரைவில் முடிவடைந்துவிடும்" என்று விமர்சித்திருந்தார்.

பாஜக தேசிய தலைவரின் இந்தப் பேச்சு குறித்து, தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``உண்மையைச் சொல்லியிருக்கிறார். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஒன்றுமில்லாத கட்சியாகிப்போய்விட்டது. ராஜஸ்தானைத் தவிர காங்கிரஸ் எங்குமே ஆட்சியில் இல்லை. இனி காங்கிரஸ் எந்த மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவதற்குச் சாத்தியமும் கிடையாது. நாளுக்கு நாள் பாஜக-வுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் பாஜக-வை எதிர்த்துப் போட்டியிட இணையான ஒரு தேசிய கட்சியே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. நாட்டில் எங்கெல்லாம் குடும்ப கட்சி நடந்ததோ, நடக்கின்றதோ அவர்களை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மேலும், ``காங்கிரஸ் கட்சி பலமிழந்து போனதற்கு அது ஒரு குடும்ப கட்சியாக மாறியதுதான் காரணம். பாஜக-வில் ஊழல் இல்லாத, வெளிப்படைத் தன்மையுடன், சிறந்த நிர்வாகத் திறமையுடன் ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. பாஜக மக்களுக்கான ஆட்சியைக் கொடுப்பதினால், இனிமேல் வேறு எந்த கட்சிகளையும் மக்கள் விரும்ப மாட்டார்கள். நாடு முழுவதும் மக்கள் பாஜக-வின் ஆட்சியைக் கொண்டாடுகிறார்கள். வரும் 2024-ம் தேர்தலில் பிற கட்சிகளுக்கு மக்கள் கண்டிப்பாக வாய்ப்பளிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக ஊழல் நிறைந்த குடும்ப அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக வரும் தேர்தலில் திமுக-வைப் புறக்கணித்துவிட்டு, மாற்றாக பாஜக-வுக்கு வாய்ப்பளிப்பார்கள்" என்று பேசினார்.

இந்த விவகாரம் குறித்து, காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர், இனியன் ராபர்ட்டிடம் பேசினோம், ``பாஜக இப்போது மட்டுமல்ல எப்போதுமே தேசிய கட்சியாக இருந்ததே இல்லை. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பாஜக-வினருக்குத் துளியளவும் தொடர்பு கிடையாது. தேசியத்தைப் பற்றிப் பேச அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றிய அளவில் நிர்வாகிகளைக் கொண்ட ஒரு மாபெரும் கட்சி காங்கிரஸ். மாபெரும் கட்சி கட்டமைப்பையும், வரலாற்றுச் சரித்திரத்தையும் கொண்டது காங்கிரஸ். நாங்கள் வெற்றிபெற்ற பல மாநிலங்களில் எங்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டது. முதுகில் குத்தி எங்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாஜக ஒன்றும் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிக்கவில்லை. புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த கட்சி அது.

இனியன் ராபர்ட்
இனியன் ராபர்ட்

தற்போது, இந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளை எல்லாம் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பாஜக-வினருக்கு எதிராகச் செயல்படுபவர்களைப் பழிவாங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அனைத்து அரசு அமைப்புகளும் சுதந்திரமாகச் செயல்பட்டன என்பது அனைவரும் அறிவோம். பாஜக-வினர் அவர்களின் கட்சியை தேசிய கட்சி என்று சொல்லிக்கொள்ளத் துளியளவும் தகுதியற்றவர்கள். சகோதரத்துவத்தை நம்பக்கூடிய கட்சி காங்கிரஸ். இன்று ராகுல் காந்தியின் யாத்திரை வரலாறு காணாத வெற்றியடைந்துள்ளது. இந்த பயத்தில் பாஜக-வினர், வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் பெரும் தொழில் அதிபர்களுக்கான ஆட்சி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இவையனைத்தும் வரும் தேர்தலில் எதிரொலிக்கும்" என்றார்.