Published:Updated:

DMK: எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்கிறதா பாஜக?- கம்யூனிஸ்ட் பார்வை சரியா?

முதல்வர் ஸ்டாலின்

"எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்க பா.ஜ.க முயற்சி" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

DMK: எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்கிறதா பாஜக?- கம்யூனிஸ்ட் பார்வை சரியா?

"எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் ஸ்டாலினை மிரட்டி நிர்பந்திக்க பா.ஜ.க முயற்சி" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தி.மு.க தலைவர் உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தலைவர்கள்மீது குற்றச்சாட்டு என்ற பெயரில் சொத்து விவரங்களைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்.

முத்தரசன்
முத்தரசன்

அண்ணாமலை வெளியிட்டிருக்கும் செய்தி, வரும் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை ஒன்றிய அரசின் அதிகாரத்திலிருந்து அகற்ற, எதிர்க்கட்சிகளை அணிதிரட்டி ஒருங்கிணைத்துவரும் ஸ்டாலினையும், அவரது கட்சியினரையும் மிரட்டி நிர்பந்திக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்தியிருக்கும் அமைப்புகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை ஆகியவற்றை ஏவி எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது சோதனைகளும், விசாரணைகளும் நடத்தி அவர்களை மோசமானவர்களாக மக்கள் முன் நிறுத்துவது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் வழக்கமாகும்.

பிபிசி ஆவணப்படம்
பிபிசி ஆவணப்படம்

2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த முஸ்லிம் இன அழிப்பு பேரழிவுத் தாக்குதலில் மோடி அரசின் கரம் இருப்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படம் தடைசெய்யப்பட்டது. மோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் அதானியின் குழும நிறுவனங்களின் பங்குச்சந்தை கணக்கியல் மோசடிகளுக்கு துணை போன குற்றச்சாட்டின்மீது கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி அன்றாடம் அமளி, துமளியாக்கி ஜனநாயக நடைமுறைகளை நிராகரித்ததும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி பறிக்கப்பட்டதையும் நாடு ஒருமுகமாகக் கண்டித்துவருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

பா.ஜ.க ஒன்றிய அரசின்மீது நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலிமை பெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, சமூகநீதி ஜனநாயகக் கொள்கை அடிப்படையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்க தி.மு.க எடுத்துவரும் நடவடிக்கைகள் பா.ஜ.க-வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால், பா.ஜ.க அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியலமைப்பு நிறுவனங்களை கருவிகளாக்கி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் தி.மு.க-வைத் தனிமைப்படுத்த அண்ணாமலை மூலம் அவதூறு பரப்பும் விஷமத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது.

ப்ரியன்
ப்ரியன்

இது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க தேர்தல் ஆதாயம் தேடி மலிவான செயலுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒருங்கிணைந்து தீவிரமாகக் களமிறங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தப் பார்வை சரிதானா என்ற கேள்வியெழுகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "முத்தரசனின் பார்வை தவறானது. பா.ஜ.க-வுடன் எந்த விதத்தில் தி.மு.க நெருக்கமாகச் சென்றாலும், அவர்களது வாக்குவங்கியை இழக்க நேரிடும். அவ்வாறு நடந்தால் அந்த வாக்குவங்கியை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கு சீமான் தயாராக இருக்கிறார்.

ராஜா, கனிமொழி!
ராஜா, கனிமொழி!

கனிமொழி, ராஜாவைச் சிறையில் வைத்தார்கள். அதையெல்லாம் தாண்டிதான் தி.மு.க வந்திருக்கிறது. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கெல்லாம் பயம்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க-வின் நோக்கம் காங்கிரஸை விட்டுவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

ஏனெனில் கடந்த முறை எட்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. கேரளாவிலும், தமிழகத்திலும்தான் அதிகமாக வெற்றிபெற்றிருக்கிறார்கள். எனவே, காங்கிரஸை விட வேண்டும் என்று சொல்வார்கள். அதை தி.மு.க ஒருபோதும் செய்யாது. காங்கிரஸ் இல்லாத தி.மு.க கூட்டணி மதச்சார்பற்றக் கூட்டணி என்ற அங்கீகாரத்தை இழந்துவிடும்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

மக்கள் நம்பிக்கையைப் பெறாது. தி.மு.க-வும், காங்கிரஸும் ஒன்றாக இருந்தால்தான் சிறுபான்மையினரும் 12% வாக்குகளைப் பெற முடியும். எந்த பயமுறுத்தலுக்கும் ஸ்டாலின் அடிபணிய மாட்டார். ஒருவேளை அடிபணிந்துவிட்டால், அது பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டுவது போலவோ, காங்கிரஸை கழட்டி விடுவது போலவோ ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிடும்.

மேலும், ஸ்டாலின் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்போது இருந்த பா.ஜ.க வேறு. இப்போது இருப்பது வேறு. சித்தாந்தரீதியாக களம் காண்பதற்கு அதிகப்படியான வாய்ப்பு ஸ்டாலினுக்குத்தான் கிடைத்திருக்கிறது. வாஜ்பாய் இருந்தபோது மதச்சார்பாக இருக்க மாட்டோம் என்று கூறிதான் கூட்டணி அமைத்தார்கள்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இப்போது பெரும்பான்மை மதத்தை ஒன்றுபடுத்தி, அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு சிறுபான்மையினரை தனிமைப்படுத்தி வருகிறார்கள். இது சித்தாந்தரீதியில் ஒரு மோதல் போக்கை உருவாக்கியிருக்கிறது. எனவே, இந்த மோதலில் ஸ்டாலின் ஒரு இன்ச்கூட விட்டுக்கொடுக்க மாட்டார்" என்றார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "எந்த ஆயுதத்தையாவது பயன்படுத்தலாமா என்று நினைக்கிறார்கள். ஆனால், அந்த ஆயுதம் பலவீனமாக இருக்கிறது. 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஸ்டாலின் இருக்கிறார். அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

எங்களது எதிரிகள், துரோகிகள்கூட குற்றம் சுமத்தியது இல்லை. ஏதோ ஒரு பூச்சாண்டி காண்பித்து பெயரைக் கெடுக்கலாமா என்று பார்க்கலாம். இது பயம்காட்டுதல் அல்ல. பொய்யான வதந்திகளில் வாழ்வதுதான் பா.ஜ.க. அதனால் வதந்திகளைக் கிளப்பிவிடுவார்கள். அவரை மிரட்ட முடியாது. வரும் காலங்களில் அவரது அரசியல் பயணம் முன்னிலும் வீரியமாக இருக்கும்" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "கம்யூனிஸ்டுகள் தேசிய அந்தஸ்தை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வை அண்டிப்பிழைத்து கட்சியை அடகுவைத்து, கட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு பா.ஜ.க குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது" என்றார்.