Published:Updated:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக குளறுபடியை பாஜக பயன்படுத்திக்கொள்கிறதா?

பன்னீர் - எடப்பாடி

ஜி.கே.வாசனை சமாதானம் செய்த இ.பி.எஸ் தரப்பு, பெருமூச்சுவிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கலாம் என்றிருந்த நிலையில், ஓ.பி.எஸ் தரப்பும் இடைத்தேர்தலில் தனியாகக் களமிறங்கப்போவதாக அறிவித்திருப்பதால் அரசியல் களத்தில் அனலடிக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக குளறுபடியை பாஜக பயன்படுத்திக்கொள்கிறதா?

ஜி.கே.வாசனை சமாதானம் செய்த இ.பி.எஸ் தரப்பு, பெருமூச்சுவிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கலாம் என்றிருந்த நிலையில், ஓ.பி.எஸ் தரப்பும் இடைத்தேர்தலில் தனியாகக் களமிறங்கப்போவதாக அறிவித்திருப்பதால் அரசியல் களத்தில் அனலடிக்கிறது.

Published:Updated:
பன்னீர் - எடப்பாடி

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தோ்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி சாா்பில் த.மா.கா போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இடைத்தோ்தலிலும் த.மா.கா போட்டியிடுமா என்கிற கேள்வி இருந்துவந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தலைமையிலான குழுவினா் ஜி.கே.வாசனை வியாழக்கிழமை (ஜன.19) சந்தித்து, அங்கு அதிமுக போட்டியிடவேண்டிய நிலை குறித்துத் தெரிவித்தனா்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

இதைத் தொடர்ந்து,  “2021 சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பாக தமாகா-வுக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. எம்.யுவராஜா போட்டியிட்டாா். எங்கள் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களின் கடின உழைப்பால், வாக்காளா்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம். கடந்த 20 மாதங்களாக அந்தத் தொகுதியில் தொடா்ந்து மக்கள் நலப் பணிகளைச் செய்துவருகிறோம். தற்போது எதிா்பாராத சூழல் காரணமாக, ஈரோடு கிழக்குப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சா்கள் என்னைச் சந்தித்து இடைத்தோ்தல் தொடா்பாகப் பேசினர். அப்போது, அதிமுக போட்டியிட வேண்டும் என்கிற விருப்பத்தையும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமாகா-வின் மூத்த தலைவா்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன். மேலும், தற்போதைய அரசியல் சூழல், வரும் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அந்தக் கட்சியின் விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது. தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகுதிக்கு உட்பட்ட தமாகா நிா்வாகிகள் அதிமுக-வின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள்” என்று தமாகா நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

இதனால் அதிமுக போட்டியிடுவது உறுதியானது. ஆனால், அதிமுக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், சின்னம் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. சின்னம் குறித்து விளக்கமளித்து, பேட்டியளித்த டி.ஜெயக்குமார், ``ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்பதெல்லாம் வதந்தி பரப்பும் செயல். எந்த வகையிலும் அது நடக்காது. கட்சியினரின் ஒருமித்த கருத்தோடு, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்துவருகிறார். நீதிமன்றம், பொதுக்குழு எல்லாம் அங்கீகரித்திருக்கின்றன. அதனால், தோ்தலுக்கான ஏ படிவம், பி படிவத்தில் கையொப்பமிடும் அதிகாரம் அவருக்குத்தான் இருக்கிறது. தோ்தல் ஆணையம் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் எனக் குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பியிருப்பது குறித்துக் கேட்கிறீா்கள். ஓ.பன்னீா்செல்வம் தன்னுடைய ஆதரவு வேட்பாளரை நிறுத்துவதற்கு முயற்சி செய்தாலும்கூட, இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்கு வாய்ப்பு இல்லை. தோ்தல் ஆணையம்கூட சட்ட விதிகளின்படிதான் செயல்பட முடியும். மத்திய சட்ட ஆணையம், `அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்று குறிப்பிட்டுத்தான் கடிதம் அனுப்பியிருக்கிறதுது” என்று இ.பி.எஸ் தரப்பின் கருத்தை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி - ஜெயக்குமார் - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஜெயக்குமார் - ஓ.பன்னீர்செல்வம்

ஜி.கே.வாசனைச் சமாதானம் செய்த இ.பி.எஸ் தரப்பு, பெருமூச்சுவிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கலாம் என்றிருந்த நிலையில், ஓ.பி.எஸ் தரப்பும் இடைத்தேர்தலில் தனியாகக் களமிறங்கப்போவதாக அறிவித்திருப்பதால் அரசியல் களத்தில் அனலடிக்கிறது. `இரட்டை இலைச் சின்னம் கிடைக்காவிட்டால், இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்’ என்றும் கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ். அது குறித்து சட்ட ஆலோசனையும் மேற்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் தரப்பு, ஓ.பி.எஸ் தரப்பு தனித்தனியே தங்கள் கூட்டணியில் தொடரும் கட்சிகளுடன் ஆலோசனை மற்றும் ஆதரவு கேட்டுவரும் நிலையில், பா.ஜ.க-வுடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, `ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக குளறுபடியை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்கிறதா?’ என்கிற கேள்வியும் அரசியல் வட்டாராங்களில் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``பா.ஜ.க இதில் என்ன செய்திருக்கிறது... இன்னும் ஏதும் செய்யவில்லையே! ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் நாங்கள் எப்ப அறிவிக்கணும், அறிவிக்கக் கூடாது என்று முடிவுசெய்ய முடியதல்லவா... கட்சித் தலைமை முடிவுசெய்து உரிய நேரத்தில், உரிய முறையில் அறிவிப்போம்” என்றார் சுருக்கமாக.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

``அதிமுக குளறுபடிகளை நிச்சயம் பா.ஜ.க பயன்படுத்தப் பார்க்கும்” என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. மேலும் தொடர்ந்தவர், “ஒரு எம்.பி சீட்டை உறுதிப்படுத்த சக்தியில்லாத அதிமுக-வை வைத்து பா.ஜ.க என்ன செய்யும்... பொத்தாம் பொதுவாக ஒரு எம்.பி சீட்கூட கன்வர்ட் ஆகவில்லை. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்-ஸைவிட பெரிதாக இருக்கலாம். ஆனால், இருவராலும் பிரயோஜனமில்லை. கன்வர்ட் செய்து கொடுக்கும் கெப்பாசிட்டியும் இப்போதைக்கு இ.பி.எஸ்-ஸுக்கு இல்லை. நம்பகத்தன்மையற்ற நபராகவும் அவர் இருக்கிறார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

அப்படி இருக்கும்போது அந்தக் கட்சியின் சின்னம் முடங்கி, கட்சி உடைந்தால்தான் பா.ஜ.க-வின் மூன்று சதவிகிதம் டெவலப் ஆகும். சின்னத்தை முடக்கினால் இரண்டு தலைவர்கள் உருவாவார்கள். இல்லையென்றால், ஒரு தலைவர் சாதகமாக வருவார். அதனால் 2024-ல் பிரயோஜனமும் இல்லை என்றாலும் 2029-ல் பா.ஜ.க-வுக்கு பிரயோஜனம் இருக்கும் என்று நினைக்கிறார் அமித் ஷா. எனவே, இது போன்று அதிமுக-வில் நடக்கும் குளறுபடிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கத்தான் செய்வார்கள்” என்றார்.