Published:Updated:

``இந்துவிரோதக் கட்சியா தி.மு.க.?" பா.ஜ.க. விளக்கமும் தி.மு.க பதிலும்!

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெறவுள்ள நிலையில், `தி.மு.க ஓர் இந்துவிரோதக் கட்சி’ என்ற பா.ஜ.க-வின் விமர்சனம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத்துக்கு 2021-ல் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரட்டைத் தலைமை கொண்ட அ.தி.மு.க-வில் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படப்போவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமா என்பது உறுதிசெய்யப்படாமல் இருக்கிறது. 2021- ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று சூளுரைத்த நடிகர் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிப்பாரா என்பதே உறுதியாகத் தெரியவில்லை. தி.மு.க-வைப் பொறுத்தளவில் அதன் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்நிலையில், தி.மு.க மற்றும் மு.க.ஸ்டாலின் மீதான தாக்குதலை பா.ஜ.க முகாம் தீவிரப்படுத்தியுள்ளது.

H Raja
H Raja
Photo: Vikatan / Nandakumar.E.J
`புரிந்துகொள்ளுங்கள்... ரஜினிக்கு நான் செய்தித்தொடர்பாளர் இல்லை!'- தமிழருவி மணியன் விளக்கம்

வழக்கமாகவே சமூகநீதியையும் தமிழகப் பிரச்னைகளையும் முன்வைத்து இயங்கும் தமிழகத் தேர்தல் களத்தை, மதத்தை வைத்து கட்டமைப்பதற்கான முயற்சி நடப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. `தி.மு.க ஓர் இந்துவிரோதக் கட்சி’ என்ற விமர்சனத்தை பா.ஜ.க தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்வைத்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தை, 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும் 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் பா.ஜ.க-வினர் முன்வைத்தனர். குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து முன்வைக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அந்த விமர்சனத்துக்கு பதிலளித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``மனித மாண்பை வேரோடு சாய்க்கத் திட்டமிடும் பிரிவினைவாத சக்திகளுக்கு, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் தமிழ்நாட்டில் கலகம் விளைவித்து மனித ரத்தத்தைக் குடிக்கத் துடிக்கிற மதவெறியர்களுக்குதான் நாம் பரம்பரை எதிராளியே தவிர, எந்த ஒரு தனி மனிதனுக்கும் அல்ல” என்று கடுமை காட்டினார்.

மேலும், கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திருநெல்வேலியில் பிரசாரம் செய்த ஸ்டாலின், ``தி.மு.க ஓர் இந்து விரோதக் கட்சி என்று ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்து அந்தப் பிரசாரத்தை நடத்துகிறார்கள். தி.மு.க-வுக்கு எதிராக எந்தக் குறையையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. எனவேதான், இந்து என்கிற பிரச்னையை எடுத்து இந்துக்களுக்கு விரோதமாக தி.மு.க இருக்கிறது என ஒரு அவதூரைப் பரப்பிவருகிறார்கள். தி.மு.க இந்து விரோதக் கட்சியென்றால், தி.மு.க-வில் இருப்பவர்கள் எல்லாம் யார்? இந்தக் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்து மதம் என்பது பா.ஜ.க-வுக்கு மட்டும் சொந்தமானதல்ல. தாங்கள்தான் இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்பதுபோல ஒரு நாடகத்தை அவர்கள் நடத்திவருகிறார்கள். எந்த ஒரு மதத்துக்கும், எந்த ஒரு சாதிக்கும் தி.மு.க எதிரானது அல்ல. சமுதாய நல்லிணக்கத்தைப் பேணிப்பாதுகாப்பதுதான் தி.மு.க-வின் தலையாய கடமை. இந்து மதத்துக்கு மட்டுமல்ல; எந்த மதத்துக்கும் தி.மு.க எதிரி அல்ல. இவர்கள் எதிர்ப்பதால் மத விரோதிகளாக நாம் ஆகிவிட மாட்டோம்” என்று பேசினார். அதன் பிறகும் பா.ஜ.க தலைவர்கள் தி.மு.க-வை இந்துவிரோதக் கட்சி என்று தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். அதற்கு, சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ``இந்து மதத்தை வைத்து தி.மு.க-வுக்கு எதிராக சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். இந்து எனக் கூறி தி.மு.க-வை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது” என்றார்.

இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரகுருவிடம் பேசினோம். ``இந்து மதத்தை தி.மு.க தொடர்ந்து விமர்சித்தும் இழிவுபடுத்தும் விதமாகப் பேசியும் வருகிறது. இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பதுதான் தி.மு.க-வின் நாத்திகமாக இருக்கிறது. இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ தி.மு.க-வினர் ஏன் விமர்சிப்பதில்லை? கடவுள் இருக்கிறார் என்றால் எல்லா கடவுள்களும் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். கடவுள் இல்லையென்றால், எந்தக் கடவுளும் இல்லை என்று சொல்லிவிட்டுப்போங்கள். ஆனால், இந்து திருமணங்களுக்குச் செல்லும்போது மட்டும் `என்ன மந்திரம் ஓதுகிறார்கள்’ என்றும், `அது புரியவே இல்லை’ என்றும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்கிறார்.

`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - எடப்பாடியின் அதிரடிக்குப் பின்னால் அக்கறையா... அரசியலா?

முஸ்லிம் திருமணத்துக்குச் செல்லும்போது அங்கு பேசப்படும் அரபியும் உருதும் புரியவில்லை என்று அவர் ஏன் சொல்வதில்லை? இந்து திருமணங்களுக்குச் செல்லும்போது மட்டும் விமர்சிப்பதால்தான், தி.மு.க-வை ஓர் இந்து விரோதக் கட்சி என்று சொல்கிறோம். அதேபோல, மூடநம்பிக்கைகளை வளர்ப்பதுபோல இருப்பதாக இந்து மதப் பண்டிகைகள் அவர் விமர்சிக்கிறார். இது இந்துவிரோதச் செயல்தானே. அதனால்தான், தி.மு.க-வை இந்துவிரோதக் கட்சி என்று சொல்கிறோம்” என்றார்.

இதுகுறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். ``தி.மு.க-வை இந்துவிரோதக் கட்சி என்று முத்திரை குத்துவது மூலம் தமிழகத்தில் தங்கள் கட்சியை வளர்த்துவிடலாம் என்று பா.ஜ.க தலைவர்கள் நினைக்கிறார்கள். தி.மு.க என்பது அதிகமான இந்துக்களால் ஆதரிக்கப்படும் கட்சி.

``இந்துவிரோதக் கட்சியா தி.மு.க.?" பா.ஜ.க. விளக்கமும் தி.மு.க பதிலும்!

இந்து விரோதக் கட்சி என்று விமர்சிக்கும் வேலையை அவர்கள் நீண்ட காலமாகவே செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப் புதுப்பிப்பதுதான், 1971-ல் நடந்த சம்பவம் குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சு. 1971-லேயே அவர்களின் முயற்சி எடுபடவில்லை. இப்போதும் நிச்சயம் எடுபடாது. `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அண்ணா சொல்லியிருக்கிறார். எனவே, இந்து விரோதக் கட்சி என்று தி.மு.க-வை யாரும் சொல்ல முடியாது. மதம் பிடித்த கட்சிகள் மத்தியில், மதம் பிடிக்காத ஓர் இயக்கம்தான் தி.மு.க. எந்தவொரு குறிப்பட்ட மதத்துக்கும் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான ஓர் இயக்கம் இது.

இதனால் தி.மு.க மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது. எனவே, அரசியலுக்காக, தேர்தலுக்காக திட்டமிட்டு இந்த வேலையைச் செய்கிறார்கள். அது, ஒருபோதும் அவர்களுக்கு பலனளிக்காது. கடந்த நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெற்றது. அந்த வாக்குகளை அளித்தவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். ஆனால், இந்துக்களின் காவலன் என்று சொல்லும் பா.ஜ.க மண்ணைக்கவ்வியது. தமிழகத்தில் ஒருபோதும் இந்துத்வா பிரசாரம் எடுபடாது. இங்கு சாதி அரசியலும், மத அரசியலும் எடுபடாது. காரணம், தமிழக மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்” என்றார்.

பின் செல்ல