Published:Updated:

மாறிப்போன தேர்தல் களம்... வாக்குகளை வளைக்க பிராண்டிங் அவசியமா?

அமைச்சர் வேலுமணியின் மழைநீர் சேகரிப்பு விளம்பரம்
அமைச்சர் வேலுமணியின் மழைநீர் சேகரிப்பு விளம்பரம்

அரசியல் களத்தில், ஒரு கட்சியை, ஒரு தலைவரை பிரபலப்படுத்தும் பிராண்டிங் அரசியல் வேகமெடுத்துள்ளது.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து, அதிலிருந்து அரசியல் வியூகங்களை வகுத்து, தனக்கான அடித்தளத்தை உருவாக்கிய தலைவர்களின் காலம் மலையேறிவிட்டது. கடந்த பத்து வருடங்களில் ஏற்பட்டுள்ள, தொழில்நுட்ப வளர்ச்சியாலும், தமிழகத்தில் சுமார் 3.5 கோடி வாக்காளர்கள் 40 வயதுக்குக் கீழானவர்களாக இருப்பதாலும், இன்றைய அரசியல் வியூகங்கள் புதிய வடிவம் எடுத்துள்ளன. பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி, சுனில் என அரசியல் வியூகங்களை வகுத்து கொடுப்பவர்களுக்கு இன்று `செம மார்க்கெட்’.

சமீபகாலமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ‘மழைநீர் சேகரிப்புத் திட்டம்’ தொடர்பான விளம்பரங்களை அதிகமாக நாம் பார்க்கலாம். எந்த சேனலைத் திருப்பினாலும், பச்சை நிற டி-ஷர்ட்டில், கலோக்கியலான மொழிநடையில், வேலுமணியே மழைநீர் சேகரிப்பு குறித்து வீடியோவில் பேசுகிறார். ஆதரவும், எதிர்ப்பும் என வைரலாகியுள்ள இவ்வீடியோ பின்னணியில் இருப்பவர், ஜான் ஆரோக்கியசாமி.

யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்கிற பிராண்டிங், பா.ம.க-வை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக முன்னிலைப்படுத்தியது. திறந்தவெளி மேடையில், பிரமாண்ட எல்.இ.டி. திரையில் செயல்திட்டங்கள் விரிய, மார்டன் லுக்கில் அன்புமணி பேசும் ஒவ்வொரு கூட்டமும் இளைஞர்களைக் கவர்ந்தது. இதன்மூலம், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியவர்தான், இந்த ஜான்.

ஜான் ஆரோக்கியசாமி
ஜான் ஆரோக்கியசாமி

மும்பையிலுள்ள ஜே.பி.ஜி. என்கிற ஆளுமை பிராண்டிங், அரசியல் வியூக வல்லுநர் குழுவின் இயக்குநராகப் பணியாற்றுகிறார். இந்த பிராண்டிங் அரசியல்தான், இந்தியத் தேர்தல் களத்தையே மாற்றியமைத்துள்ளது. மக்களிலிருந்து தலைவர்கள் உருவாகிவந்த நிலையில், விளம்பரம் மூலமாகத்தான் ஒருவர் தலைவராக வேண்டுமா? இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இல்லையா? மக்களின் மனநிலை ஏன் இப்படி மாறியது? எனப் பல கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்து ஜான் ஆரோக்கியசாமியின் டீம் உறுப்பினர்களிடம் பேசினோம். ``இன்றைய வாக்காளர்களின் மனநிலையைப் பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்தவர்களுடன் ஒப்பிட முடியாது. எல்லாவற்றிலுமே வேகமான தீர்வை எதிர்பார்க்கிறார்கள். போஸ்டர், தெருமுனைக் கூட்டம், வீதிப் பிரசாரத்தின் மூலமாக மட்டுமே இந்த வாக்காளர்களை நாம் நெருங்கிவிட முடியாது. இங்குதான், பிரசாந்த் கிஷோர், ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

தேர்தல் அரசியல் மிகவும் ‘காஸ்ட்லி’யாகிவிட்டது. இலவசங்கள், சமூகநலத் திட்டங்கள் மூலம் மக்களின் மனதை, மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவால் வெல்ல முடிந்தது. இப்போது எந்தத் திட்டம் வந்தாலும், அதன் நிறைகுறைகளை வாக்காளர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கிறார்கள். கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். வெறும் திட்டங்களால் மட்டுமே வாக்காளர்களின் மனதை வெல்ல முடியாது என்பது யதார்த்த நிலை.

இதனால்தான், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் சாம்ராஜ்ஜியத்தை முறியடித்து முதல்வரான மம்தா பானர்ஜிக்கே, பிராண்டிங் செய்ய பிரசாந்த் கிஷோர் தேவைப்படுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ திட்டத்தை வெற்றியடையவைத்த சுனில், தி.மு.க-வுக்குத் தேவைப்படுகிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தாலும், 2021 தேர்தலுக்கு பிராண்ட் வல்லுநர்கள் அவருக்குத் தேவைப்பட்டிருப்பார்கள்.

பிரபலமான கட்சிகளுக்கு மட்டும் பிராண்டிங், தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதை பிரசாந்த் கிஷோர் டீம் செய்துவருகிறது. எங்கள் டீமைப் பொறுத்தமட்டில், தலைவர்களுக்கான ஆளுமை பிராண்டிங், தேர்தல் வியூகம் என அனைத்தையும் செய்கிறோம். மண்சார்ந்து இருப்பதாலும், இங்குள்ள சமூக, பொருளாதார பின்புலங்களை அறிந்திருப்பதாலும் எங்களால் புரிந்துகொண்டு வியூகங்களை வகுக்க முடிகிறது. மாவட்டவாரியாக உள்ள சாதிகள், அவர்களுக்கான எதிர்பார்ப்புகள், இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்கால கனவுகள், மாவட்டங்களின் பொருளாதார கட்டமைப்பு என அனைத்தையும் `டேட்டா’வாகத் தயார் செய்கிறோம். இதிலிருந்து வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

தேர்தலுக்குள் தன்னை முன்னிலைப்படுத்தி, ஓர் ஆளுமைமிக்கவராக அடையாளப்படுத்திக்கொள்ள அமைச்சர் வேலுமணி விரும்புகிறார். தண்ணீர்ப் பிரச்னையைக் கையில் எடுத்தால் மட்டுமே மக்களை ரீச் செய்ய முடியும் என்று ஜான் டீம் ஆலோசனை வழங்க, வேலுமணி தரப்பு மழைநீர் சேகரிப்பை அதிவேகமாக முன்னெடுத்துள்ளது.
நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்
நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய புரமோஷன் அதிகாரியாகவும், ஐ.நா-வின் பருவநிலை மாற்றத்திற்கான குழுவின் பிரசார ஆலோசகராகவும் பணிபுரிந்த அனுபவம் ஜானுக்கு உண்டு. மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சியில் தொடங்கி, கர்நாடகாவின் சித்தராமய்யா வரையில் பல ஆளுமைகளுடனும் பணியாற்றியுள்ளார். ஒருவரின் செயல் திட்டத்தை முன்வைத்து, அவரை ஒரு தலைவராகக் கட்டமைக்கிறோம். சில யுக்திகள் மூலமாக மக்களிடம் அதைக்கொண்டு சேர்க்கிறோம். அதை அவர் செயல்படுத்தினால் மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அப்போதுதான் பிராண்டிங் வெற்றியடையும். எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்கவில்லை.

உதாரணத்துக்கு, வேலுமணிக்கான ஆளுமை பிராண்டிங்கில் கூட, ‘நமக்காக நாட்டுக்காக நாளைக்காக’ எனப் பிரசாரத்தை முன்னெடுக்கிறோம். இதை வெறும் பிரசாரத்தோடு நிறுத்திக்கொண்டால், மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால், அமைச்சர் வேலுமணி அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களைப் போடுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்களிலும் மூன்று மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாகத்தான் பிராண்டிங்கே வெற்றியடையும். இதைச் செய்வது ஜனநாயக விரோதமல்ல” என்றனர்.

அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், தேர்தல் ஜுரம் இப்போதே அமைச்சர்களைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. தேர்தலுக்குள் தன்னை முன்னிலைப்படுத்தி, ஓர் ஆளுமைமிக்கவராக அடையாளப்படுத்திக்கொள்ள வேலுமணி விரும்புகிறார். தண்ணீர்ப் பிரச்னையைக் கையில் எடுத்தால் மட்டுமே மக்களை ரீச் செய்ய முடியும் என்று ஜான் டீம் ஆலோசனை வழங்க, வேலுமணி தரப்பு மழைநீர் சேகரிப்பை அதிவேகமாக முன்னெடுத்துள்ளது.

`தெற்கிலிருந்து ஒரு தலைவன்’ என கர்நாடக சித்தராமய்யாவுக்கு ஜான் டீம் அளித்த பிம்பம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை காங்கிரஸ் வளைக்க உதவியது. இதே பிம்பத்தை, ஒரு சாமானிய அரசியல்வாதியால் செய்துகொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி? அமைச்சர் வேலுமணியைத் தொடர்ந்து இன்னபிற அமைச்சர்களும் ஆளுமை பிராண்டிங் செய்துகொள்வதில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர். பிராண்டிங் வல்லுநர்களின் காட்டில் அடைமழைதான்.

அடுத்த கட்டுரைக்கு