தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி தகரத் தடுப்புகளால் மூடப்பட்டு, “இந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை“, “இங்கு யாரும் புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது” என்று எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக, ராணுவம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில்தான் இது போன்ற எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், நம் நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் கூடுகிற, மக்களுக்கான சட்டங்களை இயற்றுகிற நாடாளுமன்றப் பகுதியில் இது போன்ற எச்சரிக்கைப் பலகை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது?
ஏனென்றால், அந்தப் பகுதியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதாவது, ரூ.20,000 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. மிகவும் பிரமாண்டமான முறையில், அசத்தலான வடிவமைப்பில் புதிய நாடாளுமன்றமும், புதிய செயலகமும் கட்டப்படுகின்றன. அத்துடன் நமது பிரதமர் வசதிப்பதற்கு சொகுசு மாளிகை ஒன்றும் அமைக்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் தேவையில்லை என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் தரப்பட்டது. அதாவது, ``நாடாளுமன்றக் கட்டடம் நவீனமாக்கப்படுகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். புதிய கட்டடங்கள் மிகவும் வலுவானதாகவும், பூகம்பத்தைச் சமாளிக்கும் வகையிலும் இருக்கும். இந்தத் திட்டம் தேசியநலன் கொண்டது” என்பதுதான் அந்த விளக்கம்.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் பலவீனமடைந்துவிட்டது என்று காரணம் சொல்ல முடியாது. இது ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு 1972-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இன்னும்100 ஆண்டுகள்கூட நிறைவடையவில்லை. மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம், நூலகம் எனச் சகல வசதிகளுடன் பிரமாண்டமாக இது அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் மிகவும் உறுதித்தன்மையுடன் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் செயல்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டடங்கள் மிகவும் பழைமைவாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் நாடாளுமன்ற கட்டடம் 1722-ம் ஆண்டும், இத்தாலி நாடாளுமன்ற கட்டடம் 1871-ம் ஆண்டு கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் சகல வசதிகளுடன் உறுதியான தன்மையுடன் இருக்கும்போது, ஏன் புதிய நாடாளுமன்றக் கட்டடம் என்ற கேள்வி பொதுவெளியில் எழுப்பப்படுகிறது. அதைவிட, கொரோனா 2-வது அலை இந்திய மக்களை வேட்டையாடிவரும் சூழலில், போதிய மருத்துவப் படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் இல்லாமலும் தினந்தோறும் கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி போட்டுவிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து இருக்காது என்ற எண்ணத்துடன் தடுப்பூசியைத் தேடி மக்கள் அலைகிறார்கள்.

ஆனால், தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட பலருக்கும் இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லை. கொரோனா முதல் அலையின்போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கொரோனாவை வெகுவாகக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்த நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டார்கள். சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 18 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 18 கோடிப் பேரில் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களின் கணக்கை எடுத்தால், மிகவும் குறைவு. அந்த அளவுக்குப் போதுமான தடுப்பூசி இந்தியாவில் இல்லை.
பெருந்தொற்று பாதிப்பில் மக்களெல்லாம் செத்துக்கொண்டிருக்கும்போது, அந்த ரூ.20,000 கோடியை தடுப்பூசிகளையும், தேவையான மருத்துவ ஆக்ஸிஜனையும் வாங்குவதற்குச் செலவிடலாமே, செத்துக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றலாமே என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி உட்பட 12 கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசிடமிருந்து பதில் ஏதுமில்லை.

ரூ.20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறைவேற்றுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது. ஏற்கெனவே, சுற்றுச்சூழல் போன்ற காரணங்களை முன்வைத்து சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில், மத்திய அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம் என்று கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. கொரோனா நேரத்தில் இவ்வளவு பெரிய கட்டுமான திட்டத்தை மேற்கொண்டால், அதில் ஈடுபடும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மத்தியில் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு எழுத்து மூலமாக பதில் ஒன்றை அளித்தது. அதில், சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணியில் 400 தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், டெல்லி அரசின் அனைத்து வழிகாட்டல் விதிமுறைகளின்படி அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை என்பதால், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைத் தொடங்குவதென்று மத்திய அரசு முடிவுசெய்தது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதாகச் சொல்லப்படுகிறது. தடுப்புகள் வைக்கப்பட்டு, உள்ளே செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்பதாலும், புகைப்படமோ வீடியோவோ எடுப்பதற்கு அனுமதி கிடையாது என்று எச்சரிக்கப்பட்டதாலும் அங்கு நடைபெறும் பணிகள் பற்றிய முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.

கொரோனா முதல் அலையின்போது ஏராளமானோர் உயிரிழந்தார்கள். இரண்டாவது அலை வரப்போகிறது என்றும், அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துவந்தனர். அவர்கள் சொன்னதுபோலவே தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்ஸ்களில் ஏராளமானோர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பிணங்களால் இந்தியச் சுடுகாடுகள் நிரம்பிய வழிகின்றன. புதிய பிணங்களைப் புதைப்பதற்கு இடமில்லை. 24 மணி நேரமும் இயக்கப்பட்டுவருவதால் மின்மயானங்களில் எந்திரங்கள் பழுதடைந்துவருகின்றன. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் மயானங்களில் இடமில்லாமல், கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட உடல்கள், மழை பெய்தவுடன் மண் கரைந்து, வெளியே தெரிகின்றன.

சீனாவின் வூஹானில் கொரோனா வைரஸ் பரவியவுடன், நோயாளிகளுக்காக 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை ஒரு சில நாள்களில் அந்நாட்டு அரசு கட்டி முடித்தது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்து 14 மாதங்கள் முடிந்துவிட்டன. இங்கு புதிதாக ஒரு புதிய மருத்துவமனைகூட கட்டப்படவில்லை. ரூ.1,000 கோடியில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கிவிடலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு மருத்துவமனைகூட உருவாக்கப்படவில்லை என்பதுதான் வேதனை.
சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்களின் அரசைக் கேள்வி கேட்கும் கருத்துகளை முடக்குவதில் ஆர்வம்காட்டும் அரசு, ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு கருத்துகளைக் காதுகொண்டு கேட்டு, சாதக பாதகங்களை ஆராய்ந்து செயல்படுத்த முடிகிறவற்றை செயல்படுத்தினாலே போதும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது!