ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, கடந்த திங்கள் கிழமை ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஷோல்ஸை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் மூலம், கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனியில் பதவியேற்ற ஓலஃப் ஷோல்ஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை , ஓலஃப் ஷோல்ஸுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பெர்லினில் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய மோடி, ``பெரும்பாலான நாடுகளால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்தியாவில் மலிவான விலையில் இன்டர்நெட் வேகமாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மோடியின் இந்த கருத்தை, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அந்தப் பதிவில், ``ஒருவரின் வயிறு காலியாக இருக்கும்போது மலிவான இன்டர்நெட்டால் என்ன செய்ய முடியும்? ஒருவருக்கு மலிவான பெட்ரோல், டீசல், எரிவாயு, பருப்பு, அரிசி, எண்ணெய் போன்றவை தான் தேவை. ஏனெனில், தரவுகள் மட்டுமே ஒருவரின் வயிற்றை நிரப்பிவிடாது" என அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார்.
