Published:Updated:

அதிகார யுத்தம்... சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணமா?

சென்னை மாநகராட்சி அலுவலகம்
சென்னை மாநகராட்சி அலுவலகம்

சென்னையில் கொரோனா தடுப்புப் பணிக்கு அதிகளவு அதிகாரிகளை நியமித்ததால், அவர்களுக்குத் தினமும் அறிக்கை கொடுப்பதே பெரிய வேலையாக இருக்கிறது என்கிற புலம்பல் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கேட்கிறது.

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு ஒரு மக்கள் பிரதிநிதியைப் பலி கொடுத்திருக்கிற `பெருமையை' தமிழகத்துக்குப் பெற்றுத் தந்திருக்கிறது சென்னை. வசதியும் வாய்ப்பும் உள்ள சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே கொரோனாவில் உயிரிழந்திருப்பது சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்களிடம் ஒரு விதமான அச்சத்தையும் விளைவித்துள்ளது. இவ்வளவு மோசமான நிலைக்குச் சென்னை சென்றடைந்ததற்கான காரணமும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

இது ஒரு வகையில் தமிழக அரசின் தோல்வி என்று குற்றம் சாட்டப்பட்டாலும், சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு மத்தியில் இருக்கும் ஈகோவே நிலைமை இவ்வளவு மோசமாவதற்குக் காரணமென்ற முணுமுணுப்பும் கோட்டை வட்டாரத்தில் கேட்கிறது.

சென்னையில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரம் என்ற இலக்கத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. தேசிய அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் பரவும் கொரோனா தொற்றின் வேகம் அடுத்த வாரத்திலிருந்து இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. கடந்த சில நாள்களாகக் கொரோனாவினால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருவதும் அரசுக்குப் பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.

சென்னைக் காவல்துறை விழிப்புணர்வு ஓவியம்
சென்னைக் காவல்துறை விழிப்புணர்வு ஓவியம்

சென்னை மாநகரில் கொரோனா பரவுவதைத் தடுப்பதில் மிக முக்கியப் பங்காற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம். ஆனால் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் பிரகாஷ், முதலிலிருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தனித்து இயங்கி வருவதாகவும் அதுவே சிக்கலைப் பெரிதாக்கி விட்டதாகவும் மாநகராட்சியின் கீழ்நிலை அலுவலர்களே குமுறுகின்றனர்.

சில நாள்களுக்கு முன்பாகப் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையின் கொரோனா தடுப்பிற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக இருந்தபோது சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். அந்த அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் அவரை முழுமையாக ஈடுபடுத்த நினைத்தார் முதல்வர்.

ராதாகிருஷ்ணனும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி சில தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதில் பிரகாஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் இடையே பனிப்போர் வெடித்தது. பிரகாஷ், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்பதால் அவரை ராதாகிருஷ்ணனால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார்கள். இதனால் இருவர் இடையே ஈகோ அதிகரித்துள்ளது. இந்த ஈகோ விவகாரம் முதல்வர் அலுவலகம் வரை சென்றுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
`நியூசிலாந்தைப் போல் தமிழ்நாடு...' அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கவனத்துக்கு!

சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியபோது இந்த அதிகாரிகள் இருவரும் இடையே ஒத்த கருத்தில்லை என்பதை முதல்வரே நேரடியாகப் பார்த்துள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்த அதிகாரிகள். இதற்கிடையில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மோசமான, குளறுபடியான செயல்பாடுகள்தான் சென்னையில் கொரோனா தொற்று இவ்வளவு அதிகமானதற்கு முக்கியக் காரணமென்று தலைமைச்செயலாளர் வரையிலும் புகார் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் `சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை’ என்று முதல்வர் அலுவலகத்திற்கே தலைமைச் செயலாளரிடமிருந்து ஓலை சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிகாரிகள் இடையேயான அதிகார யுத்தம் பற்றி தெரியவந்தபின்பே ஐந்து அமைச்சர்களைக் களத்தில் இறக்கியுள்ளார் முதல்வர் என்கிறார்கள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர். சென்னையின் கொரோனா தடுப்பு ஒழிப்பிற்கான ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிக்கு பங்கஜ்குமார் பன்சாலை நியமித்ததும் இதனால்தான் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். ஏற்கெனவே இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இடையே இருக்கும் ஈகோ யுத்தத்துக்குத் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கவே செய்யும் என்றும் இவர்கள் அச்சப்படுகின்றனர். ஒரே கேடரில் உள்ள அதிகாரிகளை ஒருவருக்கு மேல் ஒருவர் என்று நியமித்தால் இந்தச் சிக்கல்கள் வரும் என்கிறார் சக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இத்தனை உயர் அதிகாரிகளைக் களத்தில் இறக்குவதை விடக் கடைநிலையில் உள்ள அதிகாரிகளை அரசு ஒழுங்காக ஒருங்கிணைத்து அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கினாலே அவர்கள் ஒழுங்காகப் பணிகள் செய்து விடுவார்கள் என்ற ஆலோசனையையும் அதிகாரிகள் சொல்கின்றனர். இது ஒரு புறமிருக்க, கொரோனா தடுப்புப் பணியில் அளவுக்கு அதிகமான அதிகாரிகளை நியமித்திருந்தால், அவர்கள் அனைவருக்கும் மேலதிகாரிகளுக்கு அறிக்கை கொடுப்பதே பெரிய வேலையாக இருக்கிறது என்ற புலம்பலும் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கேட்கிறது.

சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதன் காரணமாக, சென்னை மாநகரில் மட்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 13-ம்தேதி முதல் இந்த ஊரடங்கு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக அதிகாரிகள் மத்தியில் உள்ள சர்ச்சைகளைச் சரி செய்து முறையான திட்டமிடல்களை மேற்கொண்டால் மட்டுமே கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆலோசனை சொல்கிறார்கள் அக்கறையுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். அமைச்சருக்கு வேண்டியவர், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற தயவு தாட்சண்யங்களைத் தூக்கி எறிந்து, சிறப்பாகச் செயல்படும் நேர்மையான, திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் நியமிப்பதே நல்லதொரு அரசுக்கு அழகாகும். அதை விடுத்து, இப்படியொரு அசாதாரணச் சூழலிலும் பணம் பண்ணுவதே குறிக்கோள் என்று நினைத்து, அதற்காகத் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை மாற்றவே கூடாது என்று அரசு அடம் பிடித்தால் அதற்கான பலனை அடுத்த ஆண்டு தேர்தலில் மொத்தமாக அ.தி.மு.க அறுவடை செய்ய வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

அடுத்த கட்டுரைக்கு