Published:Updated:

அரசுக்கு எதிரான அதிரடிப் போக்குகள் - கெத்துகாட்டத் தொடங்கிவிட்டாரா ராகுல் காந்தி?

ராகுல் காந்தி போராட்டம்
ராகுல் காந்தி போராட்டம்

குறிப்பிட்ட பிரச்னை குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளையும் முடக்குவது தொடங்கி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு எதிராகப் போட்டி நாடாளுமன்றம் நடத்துவது என ராகுல் காந்தியின் புதிய பரிமாணம் எதை நோக்கியது?

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 20 அமர்வுகளில் 40 மசோதாக்கள் மற்றும் ஐந்து அவசரச் சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்தச் சூழலில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டார்கள் உட்பட பா.ஜ.க-வின் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தி முறையாக விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுவருகின்றன. இரண்டு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி
எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரத்தை விவாதித்தே ஆக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டிவருகிறார். மேலும், பா.ஜ.க-வுக்கு எதிராக மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தவும், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர் ஆலோசனைகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி... காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

உச்சகட்டமாக நேற்று (ஆகஸ்ட் 3-ம் தேதி) நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்த்து பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் சைக்கிள் பேரணியும் நடத்தியிருக்கிறார். ``அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் அங்கிருந்து வரும் குரல் வலிமைமிக்கதாக மாறும். அந்தக் குரலை பா.ஜ.க மற்றும் ஆா்.எஸ்.எஸ் அமைப்பால் நசுக்கவே முடியாது. ஒற்றுமையின் வலிமையை நினைவுகூர்ந்து நாம் நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்” என எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசி அனைவரையும் தனக்குக் கீழ் ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். இதற்கிடையே பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தை தேசியமயமாக்கும் மசோதா, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றிவருகிறது மத்திய அரசு.

ராகுல் காந்தி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
ராகுல் காந்தி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

மத்திய அரசுக்கு எதிராக பலம் வாய்ந்த தலைவராக நிலைநிறுத்திக்கொள்ளும் வேலைகளை ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறாரா... அரசியல் கட்சியினரின் பார்வை என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகுலின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மி ராமச்சந்திரனிடம் பேசினோம். ``மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்தையும் காங்கிரஸ் எதிர்த்துக்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் பா.ஜ.க தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு மசோதாக்களை நிறைவேற்றிக்கொண்டேதான் இருந்தது. மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் தங்களின் குரலை மட்டும்தான் பதிவு செய்ய முடிந்தது. எனவே, நாடாளுமன்றம் நடந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் தாங்கள் கொண்டுவர நினைத்த சட்டங்களை அமல்படுத்திக்கொண்டுதான் இருந்தார்கள், இருப்பார்கள். ஆனால், அதற்காக அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இருக்க முடியாது. அதுவும் பெகாசஸ் போன்ற மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இருந்தால் அது மிகப்பெரிய அழிவை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். நாம் குரல் கொடுத்ததால்தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரே மத்திய பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ.க-வுக்கு எதிரான குரல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு வித்திட்டது ராகுல் காந்தியின் தொடர் போராட்டங்கள்தான். பண மதிப்பிழப்பு, சிஏஏ, வேளாண் சட்டங்கள், ரஃபேல் ஊழல் என பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர் ராகுல் காந்தி மட்டும்தான். இதுவரை தனி ஆளாக இருந்த ராகுல் காந்தியின் குரல் தற்போது எதிர்க்கட்சிகளின் ஒருமித்த குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

லக்ஷ்மி ராமச்சந்திரன்
லக்ஷ்மி ராமச்சந்திரன்

மாநில அதிகாரத்தில் பா.ஜ.க மூக்கை நுழைத்து, சர்வாதிகாரத்தோடு நடந்துகொள்வதால் அதற்கு ராகுல் காந்தியால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்பதை இந்தியாவின் பெரும்பாலான அரசுகள் உணர்ந்துள்ளன. அதற்கு தற்போது நாடாளுமன்ற விவகாரங்களில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் முக்கிய இடத்தில் இருக்கின்றன என்றாலும் எப்போதும் மோடி எதிர்ப்பில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, இருந்தது ராகுல் காந்திதான்” என ராகுல் காந்தியின் செயல்பாட்டுக்கான காரணங்களை விளக்கினார்.

தமிழ்நாடு பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசினோம். ``ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அனைத்தையும் விநோதமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. முக்கிய நேரங்களில் ராகுல் எங்கு போகிறார், என்ன செய்கிறார் என்பது அவரது கட்சியினருக்குப் புரியாத புதிராகத்தான் இருந்திருக்கிறது. இந்திய எல்லையில் சீனா சில்க் ரோடு அமைத்தபோதுகூட அந்நாட்டுத் தூதுவர்களைத் தனது வீட்டில் சந்தித்தார். ஆனால், அதை மறுத்த ராகுல், சீன அரசு இணையத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதும்தான் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார். மோடி பற்றி தவறாகப் பேசியதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது. தடுப்பூசி குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பினார்கள். இப்படி மத்திய அரசுக்கும், பாரதப் பிரதமர் மோடிக்கும் இழுக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான் ராகுலின் ஒற்றை நோக்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. மம்தா, ஸ்டாலின் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தலைவர்கள் உருவாகி வளர்ந்துவருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் சார்பில் எந்தத் தலைவரும் இதுவரை உருவானதாகத் தெரியவில்லை. அகில இந்தியக் கட்சி எனச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை இதுவரை யாரும் ஏற்றதாகத் தெரியவில்லை. தற்போது அவையில் பெகாசஸ் என இல்லாத ஒரு பிரச்னையைக் கிளப்பி அவை செயல்படாமல் இருக்க காங்கிரஸ் முக்கியக் காரணமாக இருக்கிறது. வடிவேலு காமெடிபோல, இந்திய அரசியலில் `நானும் இருக்கிறேன்' என்று காட்டிக்கொள்வதற்காக நான்கு சைக்கிளை வைத்து ராகுல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

முதலில் ராகுல் காந்தி தனது கட்சிக்கு நல்ல தலைவராகச் செயல்படட்டும். பின்னர் ஆட்சியைப் பிடித்து, இந்தியாவை ஆள ஆசைப்படட்டும். அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் ராகுலை ஒரு தலைவராகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அனைவரும் தன்னைத் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ராகுலின் ஆசையாக இருக்கலாம். ஆனால், அதற்கு எதிராக காங்கிரஸிலேயே பலர் கருத்து கூறிவருகிறார்கள். மக்கள் ஏற்கெனவே காங்கிரஸைப் புறக்கணித்துவிட்டார்கள். ராகுலும் தலைவராக இனி உருவெடுக்க முடியாது” என ராகுல் காந்தி மீது விமர்சனங்களை முன்வைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு