Published:Updated:

`கடையை மூடிவிடலாமா?' - ப.சிதம்பரத்துக்கு எதிராகக் கொதிக்கும் பிரணாப் முகர்ஜியின் மகள்

பிரணாப் மகள் கேள்வி
பிரணாப் மகள் கேள்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துக்கு, பிரணாப் முகர்ஜி மகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்துப் பேசாமல், ஆம் ஆத்மியின் வெற்றியும் அந்தக் கட்சிக்கு டெல்லி மக்கள் அளித்த ஆதரவுகுறித்தும் ப.சிதம்பரம் பேசியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பிராணாப் முகர்ஜி-யின் மகள் கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் ரேஸில் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவியது. பா.ஜ.க மீதான அதிருப்தியை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அறுவடை செய்யும் எனப் பேசப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் நடந்ததோ வேறு. தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. பா.ஜ.க-வும் சில தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி இருந்த இடமே தெரியவில்லை.

பி.ஜே.பி - காங்கிரஸ்
பி.ஜே.பி - காங்கிரஸ்

ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க 8 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். இது, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், கட்சியின் தோல்விகுறித்துப் பேசாமல் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் அந்தக்கட்சிக்கு டெல்லி மக்கள் அளித்த ஆதரவுகுறித்தும் பேசியதை கட்சியினரே ரசிக்கவில்லை.

`டெபாசிட்டை பறிகொடுத்த 63 வேட்பாளர்கள்!' - கணக்கையே தொடங்காத காங்கிரஸ் #DelhiElections

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ப.சிதம்பரம், ``ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. டெல்லி மக்கள், பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பா.ஜ.க-வைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில், மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் காட்டியதற்காக, டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். சிதம்பரத்தின் கருத்துக்கு ட்விட்டர் மூலம் எதிர்வினையாற்றியுள்ளார், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி.

இதுகுறித்து ஷர்மிஸ்தா முகர்ஜி, ``பா.ஜ.க-வைத் தோற்கடிக்கும் பொறுப்பை காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளுக்கு கொடுத்துவிட்டோமா? அப்படியில்லை என்றால் நம்முடைய படுதோல்விகுறித்து கவலைப்படுவதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை ஏன் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மாநில காங்கிரஸ் கமிட்டிகளை இழுத்து மூடிவிடலாமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். டெல்லி மகளிர் காங்கிரஸின் தலைவராக ஷர்மிஸ்தா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`4 ரவுண்டு; வாகனம்தான் குறி; ஒருவர் பலி!' - துப்பாக்கிச் சூட்டை விவரிக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ
அடுத்த கட்டுரைக்கு