Published:Updated:

பிரியங்கா காந்தியை தலைமையாக முன்னிறுத்துகிறதா காங்கிரஸ்? - பாஜக-வை வீழ்த்த புதிய மூவ்?

பா.ஜ.க-வுக்கு எதிராக ராகுல் காந்தியைவிட பிரியங்கா காந்தியின் எதிர்வினைகள் தீவிரமாகவே இருக்கின்றன. பா.ஜ.க-வுக்கு எதிராகப் பிரியங்காவை காங்கிரஸ் முன்னிறுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது... காரணம் என்ன..?

`` பிரதமர் மோடி அவர்களே, நிகழ்ச்சியில் பங்கேற்க உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ வரும் நீங்கள், உங்கள் அரசில் அங்கம் வகிக்கிற அமைச்சரின் மகன், விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றும் வீடியோவைப் பார்த்தீர்களா? தயவுசெய்து அந்த வீடியோவைப் பாருங்கள். ஏன் இன்னும் இந்த அமைச்சர் பதவியை விட்டு நீக்கப்படவில்லை? விவசாயிகள் மீது காரை ஏற்றியவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள். வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. நீதி வேண்டும். மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்யாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது சாத்தியப்படாது. எஃப்.ஐ.ஆர் இல்லாமல் எங்களைக் கைது செய்யும்போது, ஏன் அவரை கைது செய்ய முடியாது” என உத்தரப்பிரதேசம் லக்கீம்பூரில் விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் காரை ஏற்றியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகப் பிரியங்கா காந்தி எதிர்வினையாற்றியிருந்தார்.

இவை மட்டுமல்ல உத்தரப்பிரதேசத்தில் மக்கள்மீது நடக்கும் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்காக வீட்டுச் சிறை, கைது நடவடிக்கை என அனைத்து விதமாகவும் உத்தரப்பிரதேச அரசு பிரியங்காவுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. ஆனாலும், அரசுக்கு எதிரான தனது போராட்டங்களில் பிரியங்கா காந்தி தீவிரமாகவே இருக்கிறார்.

பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பிரிவு காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பிரியங்கா காந்தி இருக்கிறார். சமீபத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக ராகுல் காந்தியைவிடப் பிரியங்கா காந்தியின் எதிர்வினைகள் தீவிரமாகவே இருக்கின்றன. பா.ஜ.க-வுக்கு எதிராகப் பிரியங்காவை முன்னிறுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. உண்மை என்ன என்று விசாரித்தோம்.

கறுப்புக்கொடி போராட்டம்... பறிபோன 9 உயிர்கள்... உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் என்ன நடந்தது?

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

``காங்கிரஸ் கட்சிக்குச் சோனியா காந்தி குடும்பத்தைவிட்டால் வேறு கதி கிடையாது. இந்தக் குடும்பத்தின் பிடியிலிருந்து வெளியில் வராமல், பா.ஜ.க-வுக்கு எதிராக, கஜினி முகமதுபோல், எத்தனை முறை படையெடுத்தாலும் எந்தப் பலனும் இருக்காது. சோனியா, ராகுல், பிரியங்கா என்றில்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு வேறு தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்சிக்கு எதிர்காலம் இருக்குமா இல்லையா என்றே பேச முடியும். இவற்றையெல்லாம் சரி செய்த பின்னர்தான் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பிரியங்கா முன்னிறுத்தப்படுகிறரா இல்லையா என்ற கேள்வியையே கேட்க வேண்டும்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

காங்கிரஸ் கட்சியின் ஓனர் பிரியங்கா காந்தி. அவர்கள் மேலே வர வேண்டும் எனக் காங்கிரஸ்காரர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. ஓனரை முதலில் மாற்ற வேண்டும் என்பதுதான் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா

``காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைப் பிரியங்கா அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது, அதற்கான செயல்திட்டங்களை வகுப்பது, மாநில மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது, அமைப்பு ரீதியாகக் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல, லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட பிரச்னையைக் கையிலெடுத்துப் போராடி வருகிறார். அவருக்கு ராகுல் காந்தி உறுதுணையாக இருக்கிறார். இந்தப் படுகொலை ஜாலியன் வாலாபாக் சம்பவத்தைவிட மிகக் கொடூரமானது. இதோடு தொடர்புடைய மத்திய அமைச்சரின் மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர்களைப் பாதுகாக்கப் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக முயன்று வருகிறார்கள்.

விவசாயிகள் பற்றியோ மக்கள் பற்றியோ கவலைப்படாமல் தன் கட்சிக்காரர்கள் நலனுக்காகச் செயல்படும் இவர்களின் செயல்களால் விவசாயிகளின் போராட்டம் தற்போது மாநிலங்கள் கடந்து நாடு முழுவதும் பரவியிருக்கிறது. விவசாயச் சங்கத் தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு விவசாயிகளின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க அரசு. ராகுல் காந்தி இந்தப் போராட்டங்கள் வெற்றிபெற வேண்டும் எனக் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். அதற்கு உறுதுணையாகப் பிரியங்கா காந்தி மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

கோபண்ணா
கோபண்ணா

தேசிய அரசியலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் சக்தியாக எப்போதும் ராகுல் காந்திதான் இருப்பார். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார் என்ற செய்தி வரும். ராகுலுக்கு உதவியாகப் பிரியங்கா காந்தி இருப்பாரே தவிர இப்போதைக்குத் தேசிய அரசியலுக்குப் பிரியங்கா காந்தி வருவதற்கான சூழல் இல்லை” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு