Election bannerElection banner
Published:Updated:

இந்தியாவில் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுகின்றனவா?!

எரியூட்டப்படும் உடல்கள்
எரியூட்டப்படும் உடல்கள்

"நாளொன்றுக்கு 15 - 20 உடல்களை மட்டுமே கொரோனா பாதிப்பால் இறந்ததாகப் பதிவுசெய்கிறோம். மற்றவற்றையெல்லாம் `உடல்நலக் கோளாறு' என்றே பதிவு செய்துவருகிறோம்.''

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் பலவும் `இந்தியாவுக்குக் கரம் கொடுக்கத் தயார்' என அறிவித்துக்கொண்டிருக்கின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஏப். 26 காலை 8 மணி முதல் ஏப். 27 காலை 8 மணி வரை 3.23 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. அதே காலகட்டத்தில் கொரோனாவால் 2,771 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா
கொரோனா முதல் அலை Vs இரண்டாம் அலை: எச்சரிக்கும் புள்ளிவிவரங்கள்!

முதல் அலையைவிட இரண்டாம் அலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் கொத்துக் கொத்தாக உடல்கள் எரிக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வட்டமடித்துவருகின்றன. டெல்லி, சூரத் உள்ளிட்ட சில இடங்களிலுள்ள மயானங்களில் எரியூட்டப்படுவதற்காக உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களையும் காண முடிகிறது.

இந்தநிலையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகச் சில செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் நிபுணவியல் துறை பேரசியராகப் பணிபுரியும் பிராமர் முகர்ஜி (Bhramar Mukherjee), ``இந்தியாவில், தரவுகள் முழுக்க முழுக்க படுகொலை செய்யப்படுகின்றன'' என்று கொரோனா மரணங்களின் தரவுகள் குறித்து விவரிக்கிறார்.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு குறித்து ஆராய்ச்சி செய்துவரும் முகர்ஜி, ``எல்லா வகையான மாடல்கள் கொண்டும் ஆய்வு நடத்தினோம். அதில், இந்தியாவில் தினசரி சொல்லப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைவிட, இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிக மரணங்கள் நிகழ்வதாகவே தெரிகிறது'' என்கிறார்.

மத்திய அரசு, கொரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.
Bhramar Mukharjee
பிராமர் முகர்ஜி
பிராமர் முகர்ஜி
Twitter/@BhramarBioStat

ஆங்கில நாளிதழ்கள் சிலவற்றில் வந்திருக்கும் செய்திகள், முகர்ஜி சொல்லும் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றன. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய மயானத்தில், சமீபகாலமாக 24 மணி நேரமும் உடல்களை எரிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன.

அந்த மயானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ``நாளொன்றுக்கு 15 - 20 உடல்களை மட்டுமே கொரோனா பாதிப்பால் இறந்ததாகப் பதிவு செய்கிறோம். மற்றவற்றையெல்லாம் `உடல்நலக் கோளாறு' என்றே பதிவு செய்துவருகிறோம். எங்கள் மேலதிகாரி சொல்வதைத்தான் நாங்கள் பதிவுசெய்கிறோம். இந்த மயானத்தில் இத்தனை உடல்கள் எரியூட்டப்படுவதை இதுவரை நாங்கள் கண்டதில்லை'' என்று ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

மத்தியப்பிரதேச மாநிலம், போபால் நகரில் 1980-களில் நடந்த விஷவாயு தாக்குதலுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரக்கணக்கில் உடல்கள் எரியூட்டப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சர்வதேசப் பத்திரிகையான `நியூயார்க் டைம்ஸ்' இது குறித்து ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் கட்டுரையில், போபாலில், தினசரி கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்களாக அரசு வெளியிடும் எண்ணிக்கைகளும், அதே நாள்களில் நியூயார்க் டைம்ஸ் மயானங்களில் நடத்திய ஆய்வில் கிடைக்கும் எண்ணிக்கைகளும் மிகப்பெரிய அளவில் வேறுபடுவதாகப் பதிவு செய்திருக்கிறது.

அதேபோல ``ஏப்ரல் மாத மத்தியில், உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் சராசரியாக நாளொன்றுக்கு 73 பேர் கொரோனா காரணமாக உயிரிழப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்திருந்தது. ஆனால், லக்னோவிலிருக்கும் மயானங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில் நாளொன்றுக்குச் சராசரியாக 610 உடல்கள் எரியூட்டப்படுவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது'' என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கொரோனா உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு: இரவு பகலாக எரியும் சடலங்கள்; நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்

அதுமட்டுமல்லாமல், கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் உயிரிழக்கும்போது, அவர்களின் ரிப்போர்ட்டில் `இறப்புக்குக் காரணம் மாரடைப்பு' என்று எழுதப்படுவதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. இந்தியாவின் ஒருசில இடங்களில், `ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 15 பேர் மரணம், 20 பேர் மரணம்' என்ற தகவல்களைச் செய்தித்தாள்களில் காண முடிகிறது. இந்த மரணங்கள் அனைத்தும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையோடு சேர்க்கப்படாமல், `மூச்சுத்திணறல்' மரணங்களாகவே கணக்கில் வைத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறித்து மருத்துவர்கள் சிலர் பேசுகையில், ``இந்தியாவின் ஒரு சில பகுதிகளில், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருக்கலாம். அதுவும், மரணங்களின் எண்ணிக்கையை அதிக அளவில் காட்டி மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிற எண்ணத்தில் செய்யப்பட்டிருக்கலாம். அதுமட்டுமல்லாமல், இப்போது அரசாங்கத்தால் சொல்லப்படும் உயிரிழப்பு எண்ணிக்கையைவிட, இரண்டு மூன்று மடங்கெல்லாம் அதிக உயிரிழப்புகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, மக்கள் யாரும் இது குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி நடக்க வேண்டியது அவசியம்.

கொரோனா
கொரோனா

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பைச் சந்தித்துக்கொண்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு சற்று குறைய ஆரம்பித்தது. எனவே, கொரோனா கட்டுப்பாடுகளைச் சரிவரக் கடைபிடித்தால் விரைவிலேயே கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்'' என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு