Published:Updated:

முடிந்துவிட்டதா அரசியல் பயணம்..? முகநூலில் பதிவிட்ட தீபா!

தீபா, மாதவன்
தீபா, மாதவன்

"தீபா அம்மா அரசியலைவிட்டு விலகியது, 200 சதவிகிதம் உண்மை. எங்களுக்கும் தகவல் வந்தது. மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி எங்கள் நிர்வாகிகளிடம் கலந்தாலோசிப்போம்" என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது அண்ணன் மகளான தீபா, ஜெயலலிதாவை நேரில்காண பலமுறை முயன்றார். ஆனால், கடைசிவரை ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதுமுதல் தீபா பிரபலமானார்.

Apollo
Apollo

ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் கடுமையாக எதிர்த்துவந்தார் தீபா. அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.

தீபா, சசிகலா
தீபா, சசிகலா

ஜெயலலிதா மரணத்தால், அ.தி.மு.க-வில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த நேரத்தில், தீபா வீட்டுமுன்பு கூடிய அக்கட்சியின் தொண்டர்கள் பலர், தீபாவை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தனர்.

தீபா
தீபா

ஜெயலலிதாவின் ரத்த உறவு, முகச்சாயல், ஆங்கிலப்புலமை என சில விஷயங்களைப் பார்த்த அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கட்சியைக் காக்க வந்த தேவதையாக அவரை நினைத்தனர். ஆனாலும் தொண்டர்களின் அழைப்பை உடனடியாக ஏற்காத தீபா, "ஜெயலலிதா பிறந்த நாளில் தன் முடிவை அறிவிப்பேன்" என்று பேட்டியளித்தார். அதேநேரத்தில், அப்போது தனி அணியாய்ச் செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த தீபா, "ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கிபோலச் செயல்படுவேன்" என்றார்.

ஓ.பி.எஸ்., தீபா
ஓ.பி.எஸ்., தீபா

சில நாள்களுக்குப் பிறகு, பன்னீருடன் சேராமல்.. 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா' என்ற பெயரில் பேரவை ஒன்றைத் தொடங்கினார். தீபா, தம் பேரவையில் நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கியபோது அவரது கணவர் மாதவனுக்கும், அவருக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் பிரிந்துசென்றுவிட்டதாகத் தகவல்கள் கசிந்தன.

தீபா, மாதவன்
தீபா, மாதவன்

"எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று சொன்ன மாதவன், தீபா இல்லாமல் தன்னுடைய ஆதரவாளர்களுடன், 'எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தி.மு.க.' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

மாதவன்
மாதவன்

பேரவையில் உறுப்பினராக்கியதிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதிலும் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு பணமோசடி செய்ததாக தீபா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் கலங்காமல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கினார்.

தீபா
தீபா

"அரசியலை விட்டு நான் விலகவேண்டும் என்பதற்காகப் பல்வேறு வகைகளில் எனக்குத் தொல்லை தருகின்றனர்" என்றவர், ஜெயலலிதா வீடான போயஸ் கார்டன் வீட்டுக்குத் திடீரென புறப்பட்டுச் சென்றார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவமும் அரங்கேறியது.

தீபா
தீபா

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அமைதியாய் இருந்த தீபா, அ.தி.மு.கவில் இணைய தூதுவிட்டார். அது மட்டுமல்லாது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க சார்பில் பிரசாரம் செய்வேன் என்றும் கூறியிருந்தார். ஆனால், அவரை அ.தி.மு.க தலைமை சுத்தமாக மதிக்கவேயில்லை.

தீபா
தீபா

இந்த நிலையில், இன்று அவர் அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக நீண்டதொரு விளக்கத்தைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கடும் விமர்சனங்கள் எழுந்தவுடன் பத்தே நிமிடத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டு விட்டது. இந்தச் செய்தி அவருடைய பேரவை நிர்வாகிகளுக்குத் தீயாய்ப் பரவியது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தீபா பேரவையின் தலைமை நிலையச்செயலாளர் சுப்பிரமணி, "தீபா அம்மா அரசியலைவிட்டு விலகியது, 200 சதவிகிதம் உண்மை. எங்களுக்கும் தகவல் வந்தது. மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி எங்கள் நிர்வாகிகளிடம் கலந்தாலோசிப்போம்" என்றார்.

தீபா, மாதவன்
தீபா, மாதவன்

தீபா அரசியலில் அணைந்த தீபமா அல்லது என்றும் அணையாத அக்னிக்குஞ்சா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்கு அவருடன் யாரும் இருப்பார்களா என்பதுதான் தெரியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு