Published:Updated:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதனையா... சறுக்கலா? மூன்றாண்டுப் பார்வை! #Demonetisation

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளில் 99.3% மதிப்புள்ள நோட்டுகள் திரும்பவும் வங்கிக்கே வந்துவிட்டன. அதாவது, மக்களின் பயன்பாட்டிலிருந்த 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயில், 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரும்ப வந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ( vikatan )

இந்தியர்கள் அனைவரையும் உலுக்கியெடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து, மூன்றாண்டு காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என்றார். முழு நம்பிக்கையோடு மக்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
vikatan

தங்களின் பயன்பாட்டுக்காக வங்கிக் கணக்கிலிருந்து ஒற்றை 2,000 ரூபாயைப் பெறுவதற்காக, இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் வரை மணிக்கணக்காக வங்கி வாசல்களில் காத்துக்கிடந்தார்கள். அடுத்த மூன்று மாத காலத்துக்கு, வங்கி ஏடிஎம் வாசல்களில் இந்த வரிசை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. ஓராண்டு காலத்துக்கு ஏடிஎம்-களில் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே பணம் எடுக்க முடிந்ததால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

'பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கறுப்புப்பணத்தை ஒழிப்போம்' என்ற மத்திய அரசு, 'போலி நோட்டுகளை ஒழிப்பதன்மூலம் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்', 'லஞ்சத்தை ஒழிக்க முடியும்', 'டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கப்போகிறோம்' என்றெல்லாம் ஒவ்வொரு இலக்காகக் கூறிக்கொண்டேயிருந்தார்கள். எதிர்க்கட்சிகளிடம் பணப்புழக்கத்தை ஒழித்துவிட்டோம் என்றும்கூட பெருமிதப்பட்டார்கள். இதோ, மூன்றாண்டு காலம் ஓடிவிட்டன. மத்திய அரசு அறிவித்தபடி, அனைத்தும் சாத்தியமானதா என்று பார்க்கலாம்.

MODI
MODI
vikatan

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளில், 99.3% மதிப்புள்ள நோட்டுகள் திரும்பவும் வங்கிக்கே வந்துவிட்டன. அதாவது, மக்களின் பயன்பாட்டிலிருந்த 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயில், 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்வரை திரும்ப வந்துவிட்டதாகவும், பத்தாயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பப்பெறவில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்மூலம், பணம் பதுக்கப்பட்டது என்ற வாதம் வலுவிழந்துபோனது.

வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய அரசு கால அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசத்திற்குள் பழைய நோட்டுகளை வங்கிகளில் தராமல், பிறகு கொடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்படி அபராதம் செலுத்தி, பலரும் பழைய நோட்டுகளை மாற்றினார்கள். அவ்வாறு வங்கிக்கணக்கில் வந்த தொகைகளிலிருந்து வருமான வரி, அபராதம் என்ற வகையில் வசூலிக்கப்பட்ட தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவுதான். எனவே, இப்போதுவரை மீட்கப்பட்ட கறுப்புப்பணம் குறித்து எவ்வித தெளிவான புள்ளிவிவரமும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை.

சேகர் ரெட்டி
சேகர் ரெட்டி
vikatan

2,000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே, திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து பல கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்டன. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர், சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிந்து கைதுசெய்தனர். புதிய 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானதுமே கட்டுக்கட்டாகப் பதுக்கப்பட்டது மட்டுமின்றி, சிவகாசி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதும் தெரியவந்தது. தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பதோடு, அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க நிர்பந்திக்கப்பட்டதால், கணக்குகளின் எண்ணிக்கை உயர்ந்ததைப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நேர்மறை விளைவாகச் சொல்லலாம். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஜிஎஸ்டி-யும் அறிமுகமானதால், வங்கிவழிப் பணப்பரிமாற்றம், ஆன்லைன் பணப்பரிமாற்றம் ஆகியவை அதிகரித்திருப்பதையும் பணமதிப்பிழப்பின் விளைவுகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
vikatan

ஆனால், ஆன்லைன் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்ட மக்கள் அனைவரும் சேவைக் கட்டணம், தாமதக் கட்டணம், ஆன்லைன் மோசடி போன்றவற்றால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவருகிறது. படித்தவர்களில் பலரும் ஆன்லைன் மோசடியாளர்களின் தொலைபேசி அழைப்பை நம்பி, லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதும் தொடர்கிறது. ரிசர்வ் வங்கி கணக்கீட்டின்படி, 2017-18 நிதியாண்டில் மட்டும் 972 ஆன்லைன் மோசடி சம்பவங்களின்மூலம், மொத்தம் ரூ.109.75 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் இருந்து திருடப்பட்டிருக்கிறது. சராசரியாக, நாள் ஒன்றுக்கு மூன்று ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.

"கறுப்புப்பணத்தை ஒழிப்பது உள்ளிட்ட சில நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறானதல்ல. ஆனால், அதைச் செயல்படுத்திய விதம்தான் பேரழிவில் முடிந்துள்ளது" என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்திருந்தார். அதேபோல, இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய திட்டங்கள்தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவுக்குக் காரணம்" என்று ஆர்பிஐ- யின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணன்
ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணன்

"பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கணக்கில் காட்டப்படாத பணம் அனைத்தும் வங்கிக்கணக்குக்கு வந்தது. அவற்றின்மீது வருமான வரித்துறையின் விசாரணை இப்போதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த டிசம்பர் மாதத்துக்குள் இந்த விசாரணை முடியும். வருமான வரிக்கணக்கில் காட்டப்படாத பணத்தை வங்கியில் செலுத்தி, அதற்கு வரியாக 45% செலுத்தியபின் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பின்மூலம், டெபாசிட்டுகள் வங்கிக்கு வந்தன.

வரியே செலுத்தாமல் வருமானத்தைவிட அதிக பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தியவர்களின் கணக்குகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, செலுத்திய தொகைக்கான ஆதாரம், விளக்கம் கேட்கப்பட்டுவருகிறது.

உரிய ஆதாரத்தை, விளக்கத்தைக் கொடுக்கத் தவறியவர்கள், வருமான வரி, அபராதம் என அனைத்தும் சேர்த்து மொத்தம் 87% வரை வரி செலுத்தவேண்டியிருக்கும். ஆக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்மூலம் அரசுக்கு வருமானம் வந்திருக்கிறது. ஆனால், கறுப்புப்பணம் மீட்கப்பட்டதுகுறித்து தெளிவான அறிவிப்பு எதுவும் அரசின் தரப்பில் வெளியிடப்படவில்லை. எனவே, அதுகுறித்து உறுதியாகக் கூற இயலாது" என்கிறார், ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணன்.

"பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கடந்த மூன்றாண்டு காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அறிவித்தபடி அனைத்து இலக்குகளையும் எட்டியுள்ளார்களா?" என்று பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் கேட்டோம்.

"பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணம் ஒழியும், லஞ்சம் ஒழியும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறினார்கள். தற்போது, பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியின் சார்பாக எம்.எல்.ஏ-க்கள் பல கோடிகளுக்கு விலைக்கு வாங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. அந்தப் பணமெல்லாம் கணக்கில் காட்டப்பட்டவைதானா? ஆன்லைன் அல்லது செக் மூலமாகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றனவா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லஞ்சம் ஒழிக்கப்படுமென்று கூறினார்கள். ஆனால், இன்றுவரை அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் நிலை.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
vikatan

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், மத்திய அரசுமீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவருகிறது. 'எப்போது என்ன நடக்குமோ', 'மீண்டும் 2,000 ரூபாய் நோட்டு முடக்கப்படுமோ' என்றெல்லாம் குழப்பமாக இருக்கிறார்கள். நுகர்வோரின் நம்பிக்கையைக் கணக்கிடும் கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ் இண்டெக்ஸின் மதிப்பு குறைவாக உள்ளது. நுகர்வோரின் நம்பிக்கை குறைந்துள்ளது என்றால், நாட்டின் பொருளாதாரம் குறைந்துள்ளது என்று அர்த்தம். நுகர்வோரின் நம்பிக்கை குறைந்திருப்பதால் தொழில்கள் அனைத்தும் வருமான இழப்பைச் சந்திக்கின்றன.

நாட்டின் மிக முக்கியமான துறைகளான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை பெரிதும் நசிவடைந்துள்ளது. கட்டுமானத்துறையின் வீழ்ச்சியால் கிராமப்புற மாற்று வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களில், விவசாயத்துக்கு அடுத்ததாக ரியல் எஸ்டேட் துறையில்தான் வேலைவாய்ப்பு தேடுவார்கள். தற்போது அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும் பணக்காரர்கள் வாங்கும் ஆடம்பரக் கார்கள் விற்பனை நடந்தாலும், நடுத்தர, அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களின் விற்பனை 30% குறைந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில், அவர்கள் அறிவித்தபடி எதுவும் நடக்கவில்லை என்பதோடு, அவர்கள் சொல்லாத பல சிக்கல்களையும் நாட்டு மக்கள் சந்தித்து வருகிறார்கள்" என்று கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கை
vikatan

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மத்திய அரசு கூறிய காரணங்களில் பலவும் கேள்விக்குறியாகவே நீடிக்கின்றன. உரிய பலன் எட்டவில்லை என்பதால்தான் பிரதமரோ, ஆளுங்கட்சியினரோ, தங்கள் தேர்தல் பிரசாரங்களின்போதுகூட அதை ஒரு சாதனையாகக் கூறி வாக்கு கேட்கத் தயங்குகிறார்கள். மேலும், தற்போது 2,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செல்லாததாக அறிவித்துவிடுவார்களோ, மீண்டும் வங்கி வாசல்களில் நிற்கவேண்டியிருக்குமோ என்ற அச்சமும், மன உளைச்சலும்தான் மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. இந்த மன உளைச்சலைப் போக்க வேண்டியது மத்திய அரசின் செயல்பாட்டில்தான் இருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப்பணத்தை ஒழித்ததா? #Demonetisation