மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடகாவில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.

வங்கிகளிலிருந்து கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி அப்போது பேசியிருந்தார். அதை, `மோடி' சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி எம்.பி-க்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்தான், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தியை பா.ஜ.க பழிவாங்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள். “உண்மையைப் பேசியதற்காக ராகுல் பழிவாங்கப்படுகிறார். தகுதிநீக்கம் குறித்து கூட்டுக்குழு விசாரணை கோருவோம். தேவைப்பட்டால், ஜனநாயகத்தைக் காக்க சிறைக்கும் செல்வோம்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே. “முற்போக்கு ஜனநாயக சக்திகள்மீதான தாக்குதல்” என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ``பா.ஜ.க-வின் புதிய இந்தியாவில் ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

காங்கிரஸ் எம்.பி-யான சு.திருநாவுக்கரசர், “பிரதமர் மோடியின் தவறுகளை வெளிக்கொண்டு வந்து ராகுல் அம்பலப்படுத்தினார். அவரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்திலிருந்து ராகுலை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள். இது சர்வாதிகார நடவடிக்கை” என்று விமர்சித்திருக்கிறார். வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., “தேர்தலில் ராகுல் காந்தியைப் போட்டியிட முடியாமல் செய்வதற்கான சதித்திட்டம் இது” என்று குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸை எதிர்த்துவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிகூட, ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்திருக்கிறார்.
ஆனால், எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்திருப்பது ஒரு சட்டப்படியான நடவடிக்கை என்று வாதாடுகிறார்கள் பா.ஜ.க-வினர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8-ன் கீழ், பதவியில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி ஆகியோர் கிரிமினல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால், அவரது பதவி பறிபோய்விடும். அவ்வாறு தகுதிநீக்கம் செய்யப்படுபவர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆகவே, ராகுல் காந்திக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால், எம்.பி பதவியிலிருந்து அவரைத் தகுதிநீக்கம் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், ‘‘ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பா.ஜ.க முயன்றது” என்று குற்றம்சாட்டுகிறார் மல்லிகார்ஜு கார்கே. சட்டப்படியான நடவடிக்கை என்று ஆளும் தரப்பு கூறினாலும், இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என்பதே எதிர்க்கட்சிகளின் கருத்து.