Published:Updated:

'ஒன்றிணைவோம்' முழக்கம்... தி.மு.க-வைப் பின்தொடர்கிறதா தே.மு.தி.க?

விஜயகாந்த்
விஜயகாந்த்

தி.மு.க-வின் 'ஒன்றிணைவோம் வா' முழக்கமும் 'ஒன்றிணைவோம் வென்றிடுவோம்' என்கிற தே.மு.தி.க-வின் கோஷமும் ஒரே பாதையில் பயணிக்கிறதா?

கொரோனாவின் நெருக்கடியைச் சமாளிக்க 'ஒன்றிணைவோம் வா' என்னும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது தி.மு.க. இப்போது ஏற்பட்டிருக்கும் கடினமான சூழ்நிலையை வென்றெடுக்க, இனி வரவிருக்கும் நாள்கள் முக்கியமானதாக இருக்கும் என்பதால் துன்பத்தில் உள்ளவர்களை தி.மு.க அலுவலகத்துடன் இணைக்க பிரத்தியேக பொதுமக்களுக்கான உதவி எண்ணை (90730 90730) அறிமுகம் செய்திருக்கிறார் ஸ்டாலின். அதோடு மக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்ப www.ondrinaivomvaa.in/ - என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பலாம் எனவும் சொல்லியிருக்கிறது தி.மு.க.

ஒன்றிணைவோம் வா
ஒன்றிணைவோம் வா
HP

உதவி தேவைப்படுபவர்கள் ஸ்டாலின் அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் அவரது அலுவலகத்திலிருந்து 200 உறுப்பினர்கள் கொண்ட அணியினர் விவரங்களைச் சேகரிப்பார்கள். அவசர கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தேவைகளை உணவு, மருத்துவம், போக்குவரத்து போன்ற வகைகளாகப் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்பட்ட கோரிக்கைகள் மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தலைவர்களுடன் பகிரப்படும். கட்சித் தலைவர்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் பிரச்னைகளைத் தீர்க்க உதவுவார்கள். இதுதான் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கான்செப்ட்.

ஒன்றிணைவோம் வா உதவி எண்
ஒன்றிணைவோம் வா உதவி எண்

அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தைக் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்தது. அது தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தைச் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

கலைஞர் அரங்கம்
கலைஞர் அரங்கம்

அதன்பிறகு விஜயகாந்த்தும் தமது கட்சித் தலைமை அலுவலகத்தையும் தமக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். செங்கல்பட்டு கலெக்டர் ஜான் போலீஸ் அதிகாரிகள் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்தனர்.

ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஆய்வு...
ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஆய்வு...

இந்த நிலையில் முகக் கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே, அவரவர்கள் முகத்தில் முகக் கவசம் (Mask) அணிந்து மொபைல் போனில் செல்ஃபி (Selfi) படம் எடுத்து டிபியாக (Dp) பதிவிட்டும், அதைச் சமூக வலைதளங்களில் (Whatsapp DP, Status, Facebook, Instagram, Twitter) போன்றவற்றில் பதிவிட்டு முகக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரசாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக மக்களையும், தே.மு..திக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்'' எனச் சொல்லியிருக்கிறார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

இதற்காக விஜயகாந்த் வைத்திருக்கும் முழக்கம் 'ஒன்றிணைவோம் வென்றிடுவோம்' என்பதுதான். கொரோனா விவகாரத்தில் தி.மு.க-வைப் பின்பற்றி வருகிறது தே.மு.தி.க. ஸ்டாலின் அறிவித்த பிறகுதான் ஆண்டாள் அழகர் கல்லூரியைக் கொரோனா வார்டாக மாற்றும் அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டார். 'ஒன்றிணைவோம் வா' என்கிற ஸ்டாலின் அறிவிப்பைப் போலவே 'ஒன்றிணைவோம் வென்றிடுவோம்' என்கிறார் விஜயகாந்த்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய போது அதனை துரைமுருகன் அம்பலப்படுத்தினார். இதனால், தி.மு.க மீது கோபத்தில் இருந்தது தே.மு.தி.க. ராஜ்ய சபா சீட் கேட்டு அ.தி.மு.க தலைமையிடம் முட்டி மோதியும் சீட் தராமல் வாசனுக்கும் அன்புமணிக்கும் தந்ததை பிரேமலதா ரசிக்கவில்லை.

விஜயகாந்த், ஸ்டாலின்
விஜயகாந்த், ஸ்டாலின்

இப்படியான பின்னணியில் அடுத்த சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க அணி மாறலாம் என ஆருடங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் ஒன்றிணைவோம் வா' முழக்கமும் 'ஒன்றிணைவோம் வென்றிடுவோம்' என்கிற கோஷமும் ஒரே பாதையில் பயணிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு