Published:Updated:

100 யூனிட் இலவச மின்சாரம் துறப்பு: `மோடி மாடல்' ஆட்சியைப் பின்பற்றுகிறதா `திராவிட மாடல்?'

செந்தில் பாலாஜி

பல்வேறு திட்டங்களில் மத்திய அரசைத் தொடரும் தி.மு.க அரசு மின்சார கட்டண உயர்விலும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ஓர் அலசல்...

100 யூனிட் இலவச மின்சாரம் துறப்பு: `மோடி மாடல்' ஆட்சியைப் பின்பற்றுகிறதா `திராவிட மாடல்?'

பல்வேறு திட்டங்களில் மத்திய அரசைத் தொடரும் தி.மு.க அரசு மின்சார கட்டண உயர்விலும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து ஓர் அலசல்...

Published:Updated:
செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் 2014-க்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூலை 18-ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பில், ``மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 147.50 ரூபாய் உயர்த்தவும் 500 யூனிட்டுக்குமேல் பயன்படுத்துவர்களுக்கு 298.50 ரூபாய் கூடுதல் மின் கட்டணமாகவும், மேலும், கேஸ் இணைப்பைப்போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்த உள்ளன” என்றார்.

“ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு எனக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலியவற்றின் மின் கட்டணப் பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடர்பு கழகத்திற்கு 43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து தற்போது வரை 1,59,823 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உதய் திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளது. இதன் மூலம் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை” எனக் குறிப்பிட்டவர். “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் சுமையைக் குறைக்க மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை" எனவும் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் தொடங்கி தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் சிலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மின்கட்டண உயர்வு
மின்கட்டண உயர்வு

100 யூனிட்டுக்குக் கீழ் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணம் இல்லை என்பதை தேவை இல்லாதவர்கள் எழுதிக் கொடுக்கலாம் என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசைப் பின் தொடர்கிறது தி.மு.க அரசு என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள். இது குறித்து விசாரித்தோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``பல துறைகளில் நடக்க வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் அரசு மாநில அரசுகளுக்குப் பல வழிகாட்டுதல்களைக் காட்டியிருக்கிறது. அப்படித்தான் மின் துறையிலும் வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறோம். அதில் விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்துக்கான கட்டணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி, அங்கிருந்து மின் பகிர்மானக் கழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதும் ஒன்று. இது மின் திருட்டை தடுக்க உதவும். அதுபோலத்தான் பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘24 மணி நேரம் தங்குதடையில்லாத மின்சாரம் வேண்டுமா அல்லது ஒரு மணி நேரம் இலவச மின்சாரம் வேண்டுமா?’ எனக் கேட்டபோது மக்கள் புரிந்துகொண்டு, ‘தங்குதடையில்லாத மின்சாரம்தான் வேண்டும்’ என்றார்கள். தேசியக் கல்விக்கொள்கையிலும் பா.ஜ.க என்று பார்க்காமல் மத்திய அரசு பல்வேறு ஆய்வுகள் நடத்தி, சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறோம் என்கிறது. ஆனால், அதில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுத்த முனைகிறார்கள். அதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மின்சாரத்துறையில் மட்டுமல்ல, தேசியக் கல்விக்கொள்கை எனப் பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார்கள். கொள்கையைப் பிடித்துக்கொண்டு, தேவையில்லாத காழ்ப்புணர்வால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நாம் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் அரசுக்கு வருமானம், அரசியல்வாதிகளுக்கு வருமானம் குறையும் என்பதால் பின்பற்ற மறுக்கிறார்கள்.” என்றார்…

விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் கேட்டோம். “மோடியின் திட்டத்தை ஆதரிக்கிறோம் என்றால் ஏன் தெருத்தெருவாகச் சென்று திராவிட சித்தாந்தங்களை பரப்பி ஆர்.எஸ்.எஸ்-இன் கொடூர முகத்தையும் திராவிடத்தின் தேவையையும் எடுத்துச் சொல்லிவருகிறோம். மோடியை ஏன் அனைவரும் எதிர்த்துப் பேச வேண்டும். ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வதில் அதில் ஒரு பத்து சதவிகிதம் அனைவருக்கும் ஒற்றை சிந்தனை இருக்கும். ஆனால், அவர்களின் இலக்கு என்ன என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. இதுவரை மோடி இலவச மின்சாரம் குறித்துப் பேசியதே இல்லை. உதய் திட்டத்தின்மூலம் இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத் திட்டத்தைக் கொலை செய்துவிட்டார் மோடி. ஆனால், 1979-ல் அனைவருக்கும் இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் தலைவர் கலைஞர். இத்தனை கடனில் இலவச மின்சாரத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று உறுதியோடு இருக்கும் அமைப்பு தி.மு.க. அ.தி.மு.க-வும் பா.ஜ.கவும் இந்த எங்களின் யோசனைக்கு நேரெதிரில் இருப்பவர்கள். பிறகெப்படி ஒன்றாக இருக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என விருப்பம் இருப்பவர்கள் வேண்டாம் எனலாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம். இதனால் எந்த ஏழை, எளிய மக்களின் வயிற்றிலும் பா.ஜ.க மாதிரி அடிக்கவில்லை.

ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்
ராஜீவ் காந்தி - தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

ஒரே நாடு ஒரே வரி என அனைத்தையும் தாங்களே வாரிச்சுருட்டிக்கொண்டு, இதற்குத்தான் கொடுக்க முடியும், இதற்குக் கொடுக்க முடியாது என சட்டத்தைத் தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். சட்ட ரீதியிலான எதிர்ப்பைக் காட்டியும் தார்மீக ரீதியில் எதிர்ப்பையும் தெரிவித்துவிடுகிறோம். உதய் ஒப்பந்தத்தின்மூலம் பெரும்பாலான முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்கிறது. மானியம் வேண்டுமென்றால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால்தான் 20 – 30 முறை கடிதம் எழுதிய பிறகு ஏழைகளைப் பாதிக்காதவாறு மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவானது” என்றார்.