Published:Updated:

உள்ளாட்சிக் களேபரங்கள்; அடிமட்ட அளவில் கட்சியை நிர்வகிப்பதில் கோட்டைவிட்டாரா ஸ்டாலின்?!

ஸ்டாலின்

கீழ்மட்ட அளவில் கட்சி நிர்வாகிகளைச் சமாளிப்பதில் ஸ்டாலின் கோட்டைவிட்டுவிட்டார் என்றும், இல்லை இது வழக்கமானதுதான் எனவும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

உள்ளாட்சிக் களேபரங்கள்; அடிமட்ட அளவில் கட்சியை நிர்வகிப்பதில் கோட்டைவிட்டாரா ஸ்டாலின்?!

கீழ்மட்ட அளவில் கட்சி நிர்வாகிகளைச் சமாளிப்பதில் ஸ்டாலின் கோட்டைவிட்டுவிட்டார் என்றும், இல்லை இது வழக்கமானதுதான் எனவும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலையும் பஞ்சாயத்துகளையும் பிரிக்கவே முடியாது. போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்குவது, மறைமுக வாக்கெடுப்பு என்றால் வெற்றிபெற்ற கவுன்சிலர்களைப் பத்திரப்படுத்துவது எனப் பல களேபரங்கள் நடக்கும். தற்போது நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலும் அதற்குத் தப்பவில்லை. இந்தமுறை ஆளுங்கட்சியான தி.மு.க-வில் பல குஸ்திகள் அரங்கேறியிருக்கின்றன.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியான உடனேயே, போட்டி வேட்பாளர்களாகப் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனால், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து அப்போதே அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில், தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளுக்காகத் தேர்தல் முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தவிர, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

போட்டி வேட்பாளர்களாக வெற்றிபெற்றவர்கள் உடனடியாகப் பதவிகளை ராஜினாமா செய்யாவிட்டால், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். தவிர, கட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக, ஒருசில தி.மு.க நிர்வாகிகள் கட்சிப் பதவியிலிருந்து விலகியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் தலைவராகப் பொறுப்பு வகித்துவரும் ஸ்டாலின், இதுவரை ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல், இரண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல், ஒரு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார். அவற்றில், மற்ற தேர்தல்களையெல்லாம் மிகவும் வெற்றிகரமாக வழிநடத்திய ஸ்டாலினால், நகர்ப்புற உள்ளாட்சியில் நடந்த பல அசம்பாவிதங்களைத் தடுக்க முடியவில்லை. 'குற்றவுணர்வில் குறுகி நிற்கிறேன்' என அவர் வெளியிட்ட அறிக்கையே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இந்த நிலையில், கீழ்மட்ட அளவில் கட்சி நிர்வாகிகளைச் சமாளிப்பதில் ஸ்டாலின் கோட்டைவிட்டுவிட்டார் என்றும், இல்லை இது வழக்கமானதுதான் எனவும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர்களிடம் அது குறித்துப் பேசினோம்,

ப்ரியன்
ப்ரியன்

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்:-

``அதிகாரத்தில் இருப்பதால், கீழ் உள்ள கட்சி நிர்வாகிகள்தான் என்ன சொன்னாலும் கேட்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் நினைத்திருக்கிறார். ஆனால், அவரின் நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்தத் தோல்வியை அவர் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பத்தாண்டு காலம் தி.மு.க அதிகாரத்தில் இல்லை. ஏகப்பட்ட பணத்தைச் செலவழித்து கீழ்மட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், தலைமைப் பதவிகள், கூட்டணிக் கட்சியினருக்கோ, தன் கட்சியில் வேறு ஒருவருக்கோ போகும்போது அவர்களால் அதை விட்டுக்கொடுக்க முடியவில்லை. தவிர, மாவட்டச் செயலாளர்களோ, மந்திரிகளோ ஒருவருக்குப் பதவி வாங்கித் தருவதாக வாக்குக் கொடுத்திருப்பார்கள். கட்சித் தலைமை வேறு ஒருவரை முன்னிறுத்தும்போது, அவருக்கு எதிராகச் சில வேலைகளைச் செய்கிறார்கள். திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் போன்ற பல இடங்களில் போட்டி தி.மு.க-வினர்தான் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

தற்போது, கட்சித் தலைமை ஏதாவது நடவடிக்கை எடுத்தால்கூட, காலப்போக்கில் கட்சித் தலைமையை கன்வின்ஸ் செய்துகொள்ளலாம், நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என அவர்கள் நினைத்திருப்பார்கள். கூடுதலாக, லோக்கலில் மாவட்ட, நகரச் செயலாளர்களின் சப்போர்ட்டுடன், இல்லை அவர்களின் தூண்டுதலில்தான் இந்த வேலைகளைச் செய்திருப்பார்கள். உதாரணமாக, கடலூர் மாநகராட்சியில் போட்டி வேட்பாளராக நின்றவருக்குத்தான் அமைச்சர் முதலில் வாக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தலைமை மாற்றி அறிவித்ததும் மந்திரி மாறிவிட்டார் என்கிறார்கள். அதனால்தான், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ போட்டி வேட்பாளருக்கு ஆதரவாக நின்றுவிட்டார். அதுமட்டுமல்ல, அவர் வசம் இருந்த 12 கவுன்சிலர்களையும் தேர்தலில் வாக்களிக்கவே அனுமதிக்கவில்லை. இது மிகப்பெரிய ஜனநாயக விரோதம். அதேபோல, அன்னவாசலில் முதலில் தேர்தலை நடத்தவிடாமல் தி.மு.க-வினர் செயல்பட்டதும் தவறு.

திமுக கூட்டணி
திமுக கூட்டணி

தி.மு.க-வில் பலரும் அதிகாரத்துக்கு வரத் துடிக்கிறார்கள் என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. ஸ்டாலின் 2019-லிருந்து மதச்சார்பற்ற அணி என்கிற ரீதியில் கூட்டணியை சரியாக வழி நடத்திச் சென்றுகொண்டிருக்கிறார். அது நல்ல விஷயம்தான். ஆனால், கொள்கையை அடிப்படையாக வைத்து கீழ்மட்ட நிர்வாகிகளைச் சமரசம் செய்ய முடியாது. தொண்டர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு உள்ளாட்சிகளில் மட்டுமே வாய்ப்பிருக்கிறது. அதை அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, இது போன்ற பிரச்னைகள் இருப்பது முதல் நாளே அனைவருக்கும் தெரிந்துவிட்டது. லோக்கலில் இருக்கும் கட்சிக்காரர்கள், உளவுத்துறையினர் மூலமாக தி.மு.க தலைமைக்கும் இந்த விஷயம் சென்று சேர்ந்திருக்கும். அப்படி விஷயம் தெரிந்திருந்தால், கட்சி நிர்வாகிகளை அழைத்து, அவர்களுக்குச் சில வாக்குறுதிகளைக் கொடுத்து, இந்தச் சம்பவங்கள் நடைபெறாமல் ஸ்டாலின் தடுத்திருக்க முடியும்.

தலைவரே கூப்பிட்டுப் பேசிவிட்டார் என அவர்களும் அமைதியாக இருந்திருப்பார்கள். அது ஏன் நடக்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த விவகாரம் முதல்வருக்குச் செல்லவில்லையென்றால் ஏன் அந்த கம்யூனிகேஷன் கேப் விழுந்தது என்பது குறித்து தி.மு.க தலைமை சிந்திக்க வேண்டும். அதேபோல, தவறு செய்திருக்கிறார்கள் எனத் தெரிந்தவுடன் உடனடியாக அவர்களை நீக்கியிருக்க வேண்டும். கால அவகாசமோ, நீங்களாக ராஜினாமா செய்யுங்கள் என்றோ சொல்லியிருக்கக் கூடாது. சிலர் முடியாது என மறுத்திருப்பதும் ஸ்டாலினுக்குப் பின்னடைவுதான். தான் ஓர் உத்தரவிட்டால், கீழ்மட்ட அளவில் நிர்வாகிகள் அதைப் பின்பற்றுவார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், தலைவரைப் பின்னாளில் சமாதானம் செய்துகொள்ளலாம் எனப் போட்டியாகக் களமிறங்கிய நிர்வாகிகள் நினைத்திருப்பார்கள். இதுதான் அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் காரணம். ஸ்டாலின் இன்னும் கூடுதல் கவனத்துடன் இந்த விஷயத்தைக் கையாண்டிருக்கலாம் என்பதே என் கருத்து'' என்கிறார் அவர்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் இது குறித்துப் பேசும்போது,

`` உள்ளாட்சித் தேர்தலில் போட்டி வேட்பாளர் நிற்பதும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தாங்களே போட்டியிடுவதும் காலம் காலமாக நடந்துவரும் ஒரு விஷயம். கலைஞர், ஜெயலலிதா காலத்திலும் அது உண்டு. ஆனால், ஸ்டாலின் தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் கலைஞர் காலத்தில்கூட நடந்தது கிடையாது. கட்சியில் கீழ்மட்ட நிர்வாகிகளை நீக்குவது பெரிய விஷயம் கிடையாது. ஆனால், முன்னாள் அமைச்சர் (மாவட்டச் செயலாளர்) சுரேஷ் ராஜன், எம்.எல்.ஏ ஐய்யப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை ஸ்டாலின் நீக்கியிருக்கிறார். அந்தவகையில், கலைஞரைவிட ஒருபடி மேலாக இந்த விஷயத்தில் ஸ்டாலின் நடந்துகொண்டார் என்றே நாம் பார்க்க வேண்டும். ஸ்டாலினின் நடவடிக்கை உறுதியானதாகவும், கட்சியினருக்கு மெசேஜ் சொல்லும் வகையிலும் அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சியினருக்கும் அது திருப்தியளித்துள்ளது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

நெல்லிக்குப்பத்தில் இப்போது ராஜினாமா செய்ய முடியாது என்று சொல்பவர் ஒரு கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்ததாகச் சொல்கிறார். அதுமட்டுமல்ல, அவர்கள் எளிதாக எம்.எல்.ஏ வாய்ப்புக்குள் வர முடியாது என்பதால் விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். எதிர்காலத்தில் எம்.எல்.ஏ உள்ளிட்ட பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் கட்சித் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்படுவார்கள். ஆனால், லோக்கல் பாலிடிக்ஸில் மட்டும்தான் ஈடுபடப் போகிறவர்கள் கண்டிப்பாக விட்டுத் தர மாட்டார்கள். அது தி.மு.க தலைமைக்கும் தெரியும். ஆனாலும், கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கட்சியினருக்கு மெசேஜ் கொடுக்க விரும்புகிறார். அண்ணா காலத்து தி.மு.க-வில் ஜனநாயகம் மிக அதிகமாக இருக்கும். கலைஞர் காலத்து தி.மு.க-வில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க என்பது வேறு. கட்சியை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கைகள்'' என்கிறார் அவர்.