Published:Updated:

காங்கிரஸைக் கழற்றிவிடுகிறதா தி.மு.க.? - காரணங்களைப் பட்டியலிடும் காங்கிரஸார்!

ராகுல் காந்தியுடன் மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தியுடன் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடும் முடிவுக்கு தி.மு.க நெருங்கிவிட்டதாக, சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கொதிப்பில் உள்ளன. இதற்கு அடிப்படையாக மூன்று சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வித்தியாசமானது. வெறும் தேர்தல் கணக்கையும் தாண்டி, சிறுபான்மையினருக்கு ஆதரவான, மதவாதச் சக்திகளுக்கு எதிரான கூட்டணி என முன்னிலைப்படுத்தவும் இக்கூட்டணியை இவ்விரு கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டன. 2001 சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் தி.மு.க-வும் காங்கிரஸுடன் அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த உறவு மூன்று வருடங்கள்கூட நீடிக்கவில்லை. வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்த தி.மு.க. 2004 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அமைச்சரவையிலிருந்து விலகி காங்கிரஸுடன் கைகோத்தது. தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றிவாகை சூடியது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின்
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின்

2014 நாடாளுமன்றத் தேர்தல் தவிர மற்ற அனைத்துச் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இணைந்தே களமாடியது. 2009-ல் இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும்கூட, காங்கிரஸ் கட்சியை தி.மு.க. கழற்றிவிடவில்லை. கிட்டத்தட்ட 14 வருட கூட்டணியில் தற்போது விரிசல்விடத் தொடங்கியுள்ளது. இதற்கு அடிப்படையாக மூன்று காட்சிகளை காங்கிரஸ் கட்சியினர் பட்டியலிடுகிறார்கள்.

காட்சி ஒன்று. ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, "காஷ்மீரின் இன்றைய அவலநிலைக்குக் காரணமே காங்கிரஸ்தான்" எனக் குற்றஞ்சாட்டினார். இது, மாநிலங்களவைக்குள்ளேயே காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதமாக வெடித்தது. ‘காங்கிரஸ் ஓட்டுப் போட்டு ஒன்றும் நான் எம்.பி-யாகவில்லை’ என வைகோ சீற, இதற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடமிருந்து கடுமையான எதிர்வினையும் எழுந்தது.

வைகோ
வைகோ

காட்சி இரண்டு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 57-வது பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற்றது. விழாவில் பேசிய தொல்.திருமாவளவன், “நாளைக்கே சாதி அடிப்படையிலான வேறுபாட்டை ஏற்க மாட்டோம் என பி.ஜே.பி அறிவிக்கட்டும். பி.ஜே.பி-யும் ஆர்.எஸ்.எஸ்ஸும், விடுதலைச் சிறுத்தைகளும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள்” என்றார். இது தவிர, அவர் கடந்த ஜூலை 29-ம் தேதி, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் எழுவர் விடுதலை தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு அளித்தார். இப்படி, தொடர்ந்து பி.ஜே.பி வட்டாரத்தோடு அவர் நெருக்கம் காட்டுவது காங்கிரஸுக்குள் நெருடலை உருவாக்கியுள்ளது.

காட்சி மூன்று. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ``பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் வரவேற்கத்தக்க வகையில் எதுவும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், 'மோடியின் சுதந்திர தின உரையிலுள்ள மூன்று கருத்துகளை அனைவரும் வரவேற்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருப்பதில் இருந்து ஏதோ சில காரணங்களுக்காக மோடியை ஆதரிக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. அது என்ன காரணம் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கூறியுள்ளார்.

முத்தரசன்
முத்தரசன்

சம்பந்தப்பட்ட மூன்று காட்சிகளுமே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காங்கிரஸுக்கு எதிராகக் கூறிய கருத்துகள். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்தபோதும், கூட்டணிக் கட்சிகளுக்குள் மனமாச்சர்யங்கள் எழும். அதைக் கருணாநிதி பேசி சமாதானப்படுத்திவிடுவார். இன்று சமாதானப்படுத்தவோ, கிளர்ச்சியில் ஈடுபடும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அடக்கவோ தி.மு.க தரப்பில் யாரும் முற்படவில்லை. ``கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற, மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலமாகத் தி.மு.க-வே அழுத்தம் கொடுக்கிறதோ” எனச் சில சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் நம்மிடம் புலம்பினர்.

காங்கிரஸ் புலம்பலுக்கு அஸ்திவாரமிட்டதே உதயநிதி ஸ்டாலின்தான். ஜூன் மாதம் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க-தான் போட்டியிட வேண்டும். வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்” என்றார். நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்த்துள்ள சூழலில், தி.மு.க தலைவரின் மகனே இத்தொகுதியில் தி.மு.க-தான் போட்டியிட வேண்டும் என்று கூறியது, இது உதயநிதியின் குரலா... ஸ்டாலினின் குரலா என்கிற ஐயத்தை சத்தியமூர்த்திபவனில் உருவாக்கியது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க-வில் தங்க தமிழ்ச்செல்வன் இணையும் விழா ஜூலை 21-ம் தேதி தேனியில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``இப்ப நாம ஆட்சியில உட்கார்ந்தாகூட ஆட்சி நடத்த முடியாது. ஒழுங்காக மக்களுக்குத் திட்டங்களைத் தீட்ட முடியாது. முறையாகத் தேர்தலைச் சந்தித்து, 234 தொகுதிகள்ல குறைந்தது 200 தொகுதிகளிளாவது தி.மு.க வெற்றி பெற்று கம்பீரமாக உட்கார்ந்தால்தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிட முடியும்” என்று பேசினார். ‘கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையைத் தி.மு.க-வே முடிவு செய்யும்’ என்பதே, ஸ்டாலின் பேசியதன் சாராம்சம். இதுதான் காங்கிரஸுக்கு உதறலை உருவாக்கியுள்ளது.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், ``2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, 4.4 சதவிகித வாக்குகளையே காங்கிரஸ் பெற்றுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், டி.டி.வி.தினகரன் அரசியல் வருகையால், காங்கிரஸ் கட்சிக்கு மவுசு கூடியிருப்பதாக மாய்மாலம் காட்டித்தான் 10 தொகுதிகளை தி.மு.க-விடமிருந்து திருநாவுக்கரசர் பெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காட்சிகள் மாறியிருக்கின்றன. தினகரன் பலவீனப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையினர் பி.ஜே.பி எதிர்ப்பு வாக்குகளை விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகளைக் கொண்டே வளைத்துவிடலாம், காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை எனத் தி.மு.க கருதுகிறது. இதனால், காங்கிரஸை தி.மு.க கழற்றிவிடவே வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

2006 சட்டமன்றத் தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34-லும், 2011-ல் 63 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும், 2016-ல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி விகிதாசாரம் 50 சதவிகிதமாகவும், காங்கிரஸ் வெற்றி விகிதாசாரம் 19 சதவிகிதமாகவும் உள்ளது. ``எதற்காக காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி, அவற்றை இழக்க வேண்டும்? அதற்குப் பதிலாக நாமே போட்டியிடலாமே?” என்று தி.மு.க சீனியர்கள் ஸ்டாலினிடம் தூபம் போட்டுள்ளனராம். அதற்கு ஸ்டாலின் எந்த எதிர்ப்பையும் பதிவுசெய்யவில்லை என்கிறார்கள்.

விரிசலடைந்து வரும் தி.மு.க. - காங்கிரஸ் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம், ``இன்றையச் சூழலில், மதவாதச் சக்திகளுக்கு எதிராகவும், மொழி உரிமையைப் பாதுகாக்கவும், மாநில உரிமைகளுக்குக் கூட்டாகக் குரல் கொடுக்கவும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை மனதில் வைத்து, மனமாச்சர்யங்களை மறந்து கரம்கோத்தால் மட்டுமே, நமக்கு முன் உள்ள ஆபத்தை விரட்ட முடியும்” என்றார்.

 பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

தேர்தல் கணக்கில், காங்கிரஸை ஒரு சுமையாக தி.மு.க கூட்டணிக் கட்சிகள் பார்க்கத் தொடங்கியுள்ளன. அதே பார்வை தி.மு.க-விடமும் இருக்கிறதா என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு