Published:Updated:

``ஆளுநரை விமர்சிப்பது அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பதற்குச் சமம்!" - வானதி சீனிவாசன் கண்டனம்

வானதி சீனிவாசன்

``முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளை ஏவிவிட்டு, ஆளுநரை அவமதித்திருக்கின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது." - வானதி சீனிவாசன்

``ஆளுநரை விமர்சிப்பது அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பதற்குச் சமம்!" - வானதி சீனிவாசன் கண்டனம்

``முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளை ஏவிவிட்டு, ஆளுநரை அவமதித்திருக்கின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது." - வானதி சீனிவாசன்

Published:Updated:
வானதி சீனிவாசன்

ராஜ் பவனில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

```தமிழ்நாடு’ என்பதைவிட ’தமிழகம்’ என்பதே சரியாக இருக்கும்" என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதிலிருந்து, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இத்தகைய சூழலில் இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையில் அரசு குறிப்பிட்டிருந்ததில் சிலவற்றை வாசிக்காமல் தவிர்த்ததும், தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே அவையிலிருந்து கிளம்பியதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இந்த நிலையில், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், `தி.மு.க-வை 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என்று பெயர் மாற்றத் தயாரா?’ எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் வானதி சீனிவாசன், ``தமிழக சட்டப்பேரவையில் மரபுப்படி ஆளுநர் உரையாற்றியிருக்கிறார். ஆளுநர் உரைக்கு, பொதுவாக எதிர்க்கட்சிகள்தான் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால், ஆளுநருக்கு ஆளுங்கட்சியான தி.மு.க-வே எதிர்ப்பு தெரிவித்து கேவலமான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளை ஏவிவிட்டு, ஆளுநரை அவமதித்திருக்கின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

ஆர்.என்.ரவி, அரசியல் சாசனம் அளித்த கடமைகளின்படியே செயல்பட்டுவருகிறார். ஆளுநர் பதவி என்பது நியமனப் பதவியாக இருக்கலாம். ஆனால் அவர், இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி. ஆளுநர் பதவியை பா.ஜ.க அரசு புதிதாக உருவாக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய பதவி அது. எனவே, ஆளுநரை அவமதிப்பது சட்டமேதை அம்பேத்கரை அவமதிப்பதற்குச் சமம்.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

`ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத பதவி’ என்று தி.மு.க-வினர் விமர்சிக்கின்றனர். அப்படியெனில், 1989 - 1990, 1996-1998, 1999 – 2013 வரை மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, காங்கிரஸை மிரட்டி மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்றபோது, கவர்னர் பதவியையே நீக்கம்செய்ய, தி.மு.க நடவடிக்கை எடுத்திருக்கலாமே... `கவர்னர் பதவியை நீக்கம் செய்யாவிட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம்’ என 2004-ல் தி.மு.க கூறியிருக்கலாமே... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா போன்ற கவர்னர்களைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு தி.மு.க கடும் நெருக்கடி கொடுத்தது. அப்போதெல்லாம், மாநில சுயாட்சி, மாநில உரிமையெல்லாம் என்ன ஆகின?

தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றை மறைப்பதற்காக, தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கிவருகின்றனர். தி.மு.க-வின் சித்தாந்தத்தைப் பேசுமாறு, ஆளுநரை நிர்பந்திப்பதும் கடும் கண்டனத்துக்குரியது. 'தமிழகம்' என்பது பொருத்தமாக இருக்கிறது என்பதால்தான், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினரும், `தமிழகம்’ என்பதைப் பயன்படுத்திவந்தனர். 'தலைநிமிர்ந்த தமிழகம், மனங்குளிருது தினந்தினம்!' என்று, தி.மு.க அரசு விளம்பரம் செய்துவருகிறது. மறைந்த கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் இந்த வாசகத்தை தி.மு.க-வினர் வைத்திருந்தனர்.

வானதி சீனிவாசன் - ஸ்டாலின்
வானதி சீனிவாசன் - ஸ்டாலின்

'தமிழ்நாடு' என்றுதான் சொல்ல வேண்டும் என தி.மு.க கூறுகிறது. அப்படியெனில், 'திராவிட மாடல்' என்பதற்கு பதிலாக, 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்லலாமே... தங்கள் கட்சியின் பெயரை ஏன் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று வைத்திருக்கின்றனர். 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என வைத்திருக்கலாமே... ஆந்திராவில், 'தெலுங்கு தேசம்' என்றுதானே கட்சி இருக்கிறது... 'திராவிட தேசம்' என்று அவர்கள் பெயர் வைக்கவில்லையே. தி.மு.க-வுக்கு ஏன் இந்த இரட்டை வேடம்... 'தமிழ்நாடு' என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தி.மு.க-வினருக்கும் விருப்பமானது என்றால், 'தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்' என்று பெயரை மாற்றத் தயாரா... 'திராவிட மாடல்' என்பதை 'தமிழ்நாடு மாடல்' என்று சொல்லத் தயாரா..." எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.