Published:Updated:

அதிமுக-வின் பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணமா... உண்மை என்ன?!

அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

உண்மையில் அதிமுக-வின் தேர்தல் தோல்விகளுக்கும், கட்சியின் பின்னடைவுகளுக்கும் இரட்டைத் தலைமைதான் காரணமா?

அதிமுக-வின் பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணமா... உண்மை என்ன?!

உண்மையில் அதிமுக-வின் தேர்தல் தோல்விகளுக்கும், கட்சியின் பின்னடைவுகளுக்கும் இரட்டைத் தலைமைதான் காரணமா?

Published:Updated:
அதிமுக தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

`அதிமுக-வுக்கு ஒற்றைத் தலைமை வந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். இரட்டைத் தலைமை இருப்பதால்தான் முடிவுகளைத் துரிதமாக எடுக்க முடியவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரைக்கும் கட்சியின் தோல்விக்கு இரட்டைத் தலைமைதான் காரணம்' என அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக கோரஸாக முழங்கிவருகின்றனர். கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னணித் தலைவர் சி.வி.சண்முகமும்,

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

``ஆளும் திமுக அரசையும், திமுக-வையும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் நாம் எதிர்த்து செயல்பட முடியாத நிலை இருக்கிறது. இதனால் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளிடையே மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றன. இரட்டைத் தலைமையின் முரண்பாடான செயல்பாட்டால் தொண்டர்களிடையே மிகுந்த சோர்வு ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டுக்காலம் ஆனாலும் அதிமுக நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் ஆசை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், ஜெயலலிதாவைப் போன்று வலிமையான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, இந்தப் பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்துசெய்துவிட்டு பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்குத் தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்துப் பதிவுசெய்ய வேண்டும்'' என்கிற கோரிக்கையை கட்சியின் அவைத்தலைவருக்கு முன்வைத்திருந்தார்.

உண்மையில் அ.தி.மு.க-வின் தேர்தல் தோல்விகளுக்கும், கட்சியின் பின்னடைவுகளுக்கும் இரட்டைத் தலைமைதான் காரணமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம்...

``எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வசீகரத் தலைமை இல்லாததால், இரட்டைத் தலைமை, ஒற்றைத் தலைமை என்பதில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. வெறும் ஒற்றைத் தலைமை மட்டுமே அதிமுக-வுக்கு ஒரு பிரமாண்டமான பிம்பத்தை நிச்சயமாகக் கொடுத்துவிடாது. ஆனால், ஆளுக்கு ஓர் அறிக்கை விடுவது, ஆளுக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பது, கட்சி இரண்டு கோஷ்டியாக இருப்பது உள்ளிட்ட சிக்கல்கள் ஒற்றைத் தலைமையாக மாறும்போது தவிர்க்கப்படும். அதிமுக-வின் பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணம். அதை மாற்றினால் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதையெல்லாம் இப்போது நாம் கணிக்க முடியாது. தேர்தல் தோல்விக்கும் பத்தாண்டுக்கால அதிமுக ஆட்சி மீதான அதிருப்தி, அவர்கள் எடுத்த தவறான முடிவுகள், தி.மு.க கூட்டணியின் பலம் உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன. இரட்டைத் தலைமை மட்டுமே அதற்குக் காரணம் என்பதை ஏற்க முடியாது'' என்கிறார்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லஷ்மணன் பேசும்போது,

``இரட்டைத் தலைமை மிகச் சரியாகச் செயல்படுகிறது என ஜூன் 8-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கருத்துத் தெரிவிக்கிறார். இரு அணிகள் இணைந்த நாள்முதல் இரட்டைத் தலைமை இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படுகிறது என்றார்கள். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, அப்போதே நடந்த இடைத்தேர்தலில் பாதிக்குப் பாதிகூட ஜெயிக்க முடியவில்லை. 23 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையாக திமுக-தான் வெற்றிபெற்றது. சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய வெற்றி இல்லை. ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக வரலாற்றில் சந்திக்காத ஒரு தோல்வி என இரட்டைத் தலைமையாகச் சந்தித்த ஒரு தேர்தலில்கூட வெற்றிபெறவில்லை. ஆனால், இதற்கெல்லாம் இரட்டைத் தலைமை மட்டும்தான் காரணம் என்பது சொத்தையான வாதம்.

அதுமட்டுமே காரணம் என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், இரட்டைத் தலைமையில் ஒரு தலைமையாக இருந்த எடப்பாடி பழனிசாமியும்தான் அந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அப்படித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வந்து அவர் வெற்றிப் பாதையில் கட்சியை அழைத்துச் செல்வார் என்பதை எப்படி ஏற்க முடியும்... எல்லோரும் இரட்டைத் தலைமை வேண்டாம் என்றபோது தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க இரட்டைத் தலைமையைக் கொண்டு வந்தார்கள். ஆனால், ஆட்சி அதிகாரம் இல்லை என்பதால், கட்சியில் முழு அதிகாரம் தனக்கு வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இது முழுக்க முழுக்க சர்வாதிகாரம்.

எஸ்.பி.லட்சுமணன்
எஸ்.பி.லட்சுமணன்

அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரக் கூடாது என்று சொல்ல நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அது அவர்களின் கட்சி விவகாரம். ஆனால், கட்சியின் ஒற்றைத் தலைமையாக வர நினைக்கிற எடப்பாடி பழனிசாமிக்கு, எனக்கு இந்தத் திறமை இருக்கிறது எனச் சொல்லிக்கொள்ள ஒரு விஷயமும் இல்லை. இது ஒருபுறமிருந்தாலும், கட்சியில் தனக்கு இருக்கிற அதிகார பலத்தால், அவர் நினைக்கிற தீர்மானத்தைக் கொண்டுவர முடியும். ஓ.பி.எஸ்-ஸைத் தூக்கியெறிய முடியும். ஆனால், தொண்டர்கள் அதை ரசிக்க மாட்டார்கள். வரவேற்க மாட்டார்கள். நீடித்த ஆதரவு அவர்களிடமிருந்து கிடைக்காது. இது எல்லாவற்றையும் தாண்டி தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு சர்வாதிகாரியாகச் செயல்படாமல், ஏற்கெனவே பலரும் சுட்டிக்காட்டியபடி, ஓர் உயர்மட்டக்குழுவை அமைத்து, அந்தக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுத்து, அவர்களின் அறிவுரைப்படி நடந்தால் ஒருவேளை அதிமுக வெற்றியை நோக்கிப் பயணிக்கலாம். ஆனால், தான் மட்டுமே எல்லாம் என எடப்பாடி பழனிசாமி நினைத்தால் அதிமுக-வின் அழிவு வெகுதூரத்தில் இல்லை'' என்கிறார்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

இந்த விவகாரம் குறித்து, அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம்,

``ஒரு உடம்புக்கு ஒரு தலைதான் இருக்கவேண்டும். இந்தியா முழுவதும் எந்தக் கட்சியிலும் இரட்டைத் தலைமை என்பது இல்லை. தேர்தல் தோல்விகளுக்கும் நாம் இரட்டைத் தலைமையைக் காரணம் சொல்லமுடியும். உதாரணமாக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்தல் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கின்றன. இ.பி.எஸ் மாஸ் லீடராக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ் தரப்பில் சில நெருக்கடிகளைக் கொடுத்தனர். கூடுதலாக இருபது, முப்பது தொகுதிகளின் தோல்விக்கு அது காரணமாக இருந்தது. ஒற்றைத் தலைமை வந்து துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொய்வழக்குகளை துணிந்து நின்று கேள்வி எழுப்பவேண்டும். அதைச் செய்தால் கட்சி வளர்ச்சிப் பாதையில் நிச்சயமாகப் பயணிக்கும்'' என்கிறார் நம்பிக்கையாக.