Published:Updated:

பாஜக-வையும் அடித்து ஆடும் எடப்பாடி... அதிரடி நகர்வுகளின் பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமி

“டெல்லியில் நீங்கள் ஆட்சி அமைக்க, என் அரசியல் நலனை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற நிலைபாட்டுக்கு வந்துவிட்டார் எடப்பாடி.”- தராசு ஷ்யாம்

பாஜக-வையும் அடித்து ஆடும் எடப்பாடி... அதிரடி நகர்வுகளின் பின்னணி என்ன?

“டெல்லியில் நீங்கள் ஆட்சி அமைக்க, என் அரசியல் நலனை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற நிலைபாட்டுக்கு வந்துவிட்டார் எடப்பாடி.”- தராசு ஷ்யாம்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அமித் ஷா, செப்டம்பர் 12-ம் தேதி சென்னைக்கு வந்திருந்தார். அன்றைய தினம் எடப்பாடி சென்னையில் இருந்தும், அமித் ஷாவைச் சந்திக்காமலிருந்தது அரசில் களத்தில் பேசுபொருளானது. இதற்கு விளக்கம் அளிக்கும்விதமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி, ``அதிமுக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுவருகிறது. பாஜக என்பது தேசியக் கட்சி. ஒவ்வொரு முறையும் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் வரும்போது சந்திக்க வேண்டும் என்பதில்லை. அதிமுக - பாஜக என்பது இரு வேறு கட்சிகள். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும்” என்று கூறியிருந்தார்.

எடப்பாடியின் இந்தப் பேச்சுக்கு பின்னால் அதிமுக நிர்வாகிகள் சிலர் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விவாதித்திருக்கிறார்கள் என்கிறார்கள். அப்போது, “அம்மா இருந்தபோது யாராக இருந்தாலும் போயஸ் கார்டன் வீடு தேடிப் போய்ப் பார்ப்பார்கள். இன்று தமிழ்நாட்டில் நாம்தான் திமுக-வுக்கு இணையான பெரிய கட்சி. இந்த நிலைமையில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் உங்களைச் சந்திக்க நேரம் கொடுத்திருந்தால் நீங்கள் போயிருக்கலாம்.

பன்னீர், எடப்பாடி, மோடி
பன்னீர், எடப்பாடி, மோடி

ஆனால், ஏர்போர்ட்டில் காத்திருந்து மோடிக்கு பூ கொடுத்து, அதை வைத்து ‘பன்னீரையும் எடப்பாடியையும் பக்கத்து பக்கத்துல நிப்பாட்டிவெச்சாரு’னு செய்திகள் கிளம்பியதுதான் மிச்சம். அமித் ஷா நிகழ்ச்சியை எப்படித் தவீர்த்தீர்ங்களோ அதேபோல் மோடியை வரவேற்பதையும் தவிர்த்திருக்க வேண்டும். இப்போது வரை அதிமுக -பாஜக அதிகாரபூர்வ கூட்டணி என்று ஏதும் கிடையாது.

நம்மிடம் மக்கள் பலமும், தொண்டர் பலமும் இருக்கின்றன. அதனால் நாம் இனி மோடி, அமித் ஷாவின் பின்னால் ஓட வேண்டாமென்று கட்சிக்காரர்கள் நினைக்கிறார்கள். இனிமேல் பாஜக-வோடு நீக்கு போக்கா, பாலிஷா போகவேண்டிய தேவையும் நமக்கு இப்போது இல்லை. பாஜக-விடமிருந்து விலகினால்தான் மற்ற கட்சிகளின் முடிவுகள் மாறும். அதைவைத்து நாமக்கல்லில் சொன்னதுபோல் மெகா கூட்டணி அமைத்து வெற்றிபெறலாம்” என்று ஆலோசித்திருக்கிறார்கள்.

அமித் ஷா
அமித் ஷா

“கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்போது ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்ய, கஷ்டப்பட்டால் வளரலாம்... நாங்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இப்படித்தான் வளர்ந்தோம். இன்று வெற்றியும் பெற்றுவருகிறோம். வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், களத்திலும் கீழ் மட்ட அளவிலும் வேலை செய்யவில்லை என்றால் நம் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது. எனவே வெற்றியை உறுதிப்படுத்த உழைப்போம். கூட்டணி பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட வேண்டாம். அதில் குழப்பமும் வேண்டாம்” இது தமிழகம் வந்திருந்தபோது அமித் ஷா பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கிய அறிவுரை. இதனால் , “அதிமுக-வினர் பேசுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கட்சியை வளர்க்க வேலை செய்வோம் என்று தமிழக பாஜக முன்னெடுத்துவருகிறது” என்கிறார்கள் கமலாய வட்டாரத்தில்.

இவ்வாறாக பாஜக, அதிமுக இடையேயான உறவில் சற்று விரிசல் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் வரும் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடருமா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் முன்வைத்தோம். “அதிமுக-வில் இபிஎஸ்-ஓபிஎஸ் 50-50 என்பதை மோடி, அமித் ஷா நம்புகிறார்கள். அதை எடப்பாடி ஒப்புக்கொள்ள மறுக்கிறார். எடப்பாடியுடன் கூட இருப்பவர்கள் அவருடன் முழுமையாக நிற்பார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கொங்குப் பகுதிகளிலேயே ஓபிஎஸ்-க்கு செல்வாக்கு இருக்கிறது என்கிற ரிப்போர்ட் மோடியிடம் இருக்கிறது. அதனால் சீட் கன்வெர்ட் ஆக இருவரும் வேண்டுமென்று பாஜக கணக்கு போடுகிறது.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

2024-ல் தமிழ்நாட்டில் சில சீட்கள் ஜெயிக்கலாம் என்று மோடி திட்டமிடுகிறார். ஆனால், எடப்பாடியின் எண்ண ஓட்டமோ 2024 தேர்தலைப் பயன்படுத்தி 2026-ல் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்பதாக இருக்கிறது. இரட்டை இலை எடப்பாடியிடம் போய்விட்டால் சந்திர சேகர் ராவ் மாதிரி ஏமாற்றிவிட்டுப் போய்விடுவார் என்று பாஜக-வினர் நினைக்கிறார்கள். அதனால் இரட்டை இலை எடப்பாடியிடம் போவது கஷ்டம். எனவே சிவசேனா பாணியில் சின்னத்தை முடக்கிவிட்டு, எடப்பாடி தலமையில் ஒரு கட்சி, பன்னீர் தலைமையில் ஒரு கட்சி என்று பாஜக செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து அதில் அதிக சீட் எடப்பாடிக்குக் கொடுக்கும்போது ஸ்டாலினை எதிர்கொள்ள முடியும் என்று பாஜக நினைக்கிறது. இது வெற்றிபெறுமா என்பது வரும் நாள்களில் தெரியும்” என்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது எப்போதும் தலைமை என்.டி.ஏ அல்லது யூ.பி.ஐ-தான். 1998-ல் கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருக்கும்போது, எப்படிக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான வரைமுறை ஒன்று கொண்டு வந்தார். அதன்படி யாருக்குமே பெரும்பான்மை இல்லையென்றால் முதலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி. இரண்டாவது தேர்தலுக்கு பிறகு உள்ள கூட்டணி, இல்லையென்றால் தேர்தலுக்கு முந்தைய பெரும்பான்மைக் கூட்டணி. இரண்டுமே மெஜாரட்டி இல்லை என்றால் தனிபெரும்பான்மையான வெற்றி. இப்படித்தான் 1999-லிருந்து 2014 வரை பின்பற்றப்பட்டது.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

2014, 2019-ல் பாஜக-வுக்கு தனி மெஜாரட்டி கிடைத்துவிட்டது. எனவே இந்தக் கேள்வி எழவில்லை. ஆனால், 2019-ல் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று இவர்கள் வந்தபோது, ‘என்.டி.ஏ என்றுதான் பின்னாடி பேனரே வைக்க வேண்டும்’ என்று அமித் ஷா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். அது எடப்பாடிக்கும் அப்போது தெரியும். எனவே இப்போது அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று சொல்கிறார் என்றால், அங்கு பாஜக-வுக்கு இடம் இல்லை என்றுதான் அர்த்தம். அதிமுக-வின் எதிர்காலம் தேர்தல் ஆணையம், வழக்கு ஆகியவற்றில்தான் இருக்கிறது. ஒரு போராட்டம் இருந்தாலும், இப்போது எடப்பாடியின் ரிமோட் கன்ட்ரோல் பாஜக-விடம் இல்லை என்பது அவரின் ஒவ்வொரு செயலிலும் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி, எடப்பாடி ஆதரவாளர்கள் ‘இலை’ இல்லை என்றாலும் பரவாயில்லை. எங்களால் குறிப்பிட்ட இடங்களைப் பிடிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அதற்குக் காரணம் ஒன்பது மாவட்டங்களில் 62 சட்டமன்றத் தொகுதிகள், அவற்றில் 41 தொகுதிகளில் ஜெயித்திருக்கிறார்கள். அவற்றில் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகள் வந்துவிடுகின்றன. அவற்றில் ஐந்து இடங்களில் வந்துவிடலாம் என்று நம்புகிறார்கள். ஒருவேளை மத்தியில் ஆட்சி அமைக்க யாருக்கும் மெஜாரட்டி இல்லாத சூழல் வந்தால் அந்த ஐந்து தொகுதிகள் மத்திய அரசுக்கு முக்கியத்துவமாகிறது. எனவே, நமக்கு ஐந்து இருந்தாலே போதும் என்று எடப்பாடி நினைக்கிறார். அதோடு பாஜக-வுக்கு மெஜாரட்டி வரும் தேர்தலில் வராது என்பதையும் நடப்பு அரசியலைவைத்து கணக்கிடுகிறார். அடுத்து பாஜக அழுத்தத்துக்குப் பணிந்து ஓபிஎஸ்-ஸை உள்ளே கொண்டு வந்தால் பழைய நிலைமையாகும். இவ்வளவு நாள் பாடுபட்டதெல்லாம் வீணாகும். பாஜக-வுக்காக எதற்கு நம் கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும் போன்ற காரணிகளில் தெளிவாக இருக்கிறார் எடப்பாடி. அதோடு `டெல்லியில் நீங்கள் ஆட்சியமைக்க என் அரசியல் நலனை ஏன் விட்டுகொடுக்க வேண்டும்... உங்களுக்குப் பணியவில்லை என்றால் ரெய்டு நடத்துவீர்கள்... அதில் எனக்கென்ன நஷ்டம். எனக்குச் சிம்பத்திதானே’ என்கிற நிலைக்கு துணிந்துவிட்டார் எடப்பாடி” என்றார்.