Published:Updated:

`ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கினாரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ்?! - மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

பா.ஜ.க தலைவர் பட்னாவிஸின் இந்தச் செயல் மனிதாபிமானமற்ற ஒரு செயல் என்று குறிப்பிட்டதோடு பட்னாவிஸ் போலீஸ் நிலையம் சென்று போலீஸாருடன் வாதிட்ட வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா காந்தி.

``மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மற்றொரு புறம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா காட்டுத்தீயாகப் பரவிவருகிறது. கொரோனா குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்க உடனே நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்” என்று சிவசேனா தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ``நாட்டின் பல தலைவர்களுடன் கொரோனா பரவல் குறித்து விவாதித்தேன். நாடு போர் போன்ற ஒரு நிலையைச் சந்தித்திருக்கிறது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

எனவே, கொரோனா பரவல் குறித்து விவாதிக்க உடனே நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். கொரோனா குறித்து மத்திய அரசுடன் விவாதித்து ஆதரவு பெற வேண்டிய நிலையில் மாநிலங்கள் இருக்கின்றன. ஆக்ஸிஜன், தடுப்பூசி மற்றும் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சில மாநிலங்கள் கொரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டின. ஆனால் இப்போது சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் ஆக்ஸிஜன், படுக்கை, அத்தியாவசிய மருந்துகள் போன்ற உதவிகள் கேட்டு தங்களுக்கு போனில் அழைத்துகொண்டேயிருப்பதாக அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர். பிணவறைகள் நிரம்பியிருக்கின்றன. எனவே, நாடாளுமன்றத்தின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் கொரோனாவைத் தடுப்பது குறித்து விவாதிக்கம், மத்திய அரசிடம் உதவி கேட்கவும் வசதியாக இருக்கும்.

கொரோனா தடுப்பு மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தில் அரசியல் செய்யக் கூடாது” என்று தெரிவித்தார்.

சிவசேனா பத்திரிகையான சாம்னாவிலும் இது தொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. `கொரோனாவைக் கையாளும் விவகாரத்தில் மாநில அரசு கவிழ வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதிலாவது அரசும் எதிர்க்கட்சியும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். கொரோனா மருந்து விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா மருந்தைப் பதுக்கிய பா.ஜ.க?

இதற்கிடையே ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கிவைத்திருந்ததாக குஜராத் அருகிலுள்ள தாமனைச் சேர்ந்த மருந்து கம்பெனி இயக்குநர் ராஜேஷ் என்பவரை மும்பை போலீஸார் ஞயிற்றுக்கிழமை இரவு போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும், எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸும் மற்ற பா.ஜ.க தலைவர்களும் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று வாக்குவாதம் செய்தனர்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

ராஜேஷ் மருந்து கம்பெனியிலிருந்து ரெம்டெசிவிர் மருந்தை பா.ஜ.க விலைக்கு வாங்கியுள்ளது. அதை மகாராஷ்டிரா அரசுக்காகத்தான் வாங்கினோம் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் உயிர்காக்கும் மருந்தை வாங்க எந்தவித அனுமதியும் பா.ஜ.க பெறவில்லை. மொத்தம் 60,000 டோஸ் மருந்தை பா.ஜ.க வாங்கிப் பதுக்கி வைத்திருந்தது. இது குறித்துத் தகவல் கிடைத்ததும், அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால், அந்த மருந்தை மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சகத்தில் கொடுக்கவிருந்தோம் என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசினோம் என்றும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த மருந்து பதுக்கல் தொடர்பாக எந்தவித விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மருந்தைப் பதுக்கிவைத்த செயலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பா.ஜ.க தலைவர் பட்னாவிஸின் இந்தச் செயல் மனிதாபிமானமற்ற ஒரு செயல் என்று குறிப்பிட்டதோடு பட்னாவிஸ் போலீஸ் நிலையம் சென்று போலீஸாருடன் வாதிட்ட வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் கூறுகையில், `பட்னாவிஸ் போலீஸாருக்கு நெருக்கடி கொடுக்க முயன்றுள்ளார். அதோடு போலீஸாரின் செயல்பாட்டில் தலையிட முயன்றுள்ளார். மருந்து பதுக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்தைp பதுக்கிவைத்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க செயல்பட்டதாகக் கூறப்படுகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு