Published:Updated:

`குடியரசு தினத்துக்குள் விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு' - மத்திய அரசின் திட்டம் பலிக்குமா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெல்லி சலோ - விவசாயிகள் போராட்டம்
டெல்லி சலோ - விவசாயிகள் போராட்டம்

``உலக கவனத்தை ஈர்த்த விவசாயிகள் போராட்டம் வெற்றியில்தான் முடிய வேண்டும். இந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்குச் சமர்ப்பணமாக அந்த வெற்றி இருக்க வேண்டும்.''

மத்திய அரசை மிரளவைக்கும் விவசாயிகளின் `டெல்லி சலோ' போராட்டம் தொடங்கி 60 நாள்களுக்கு மேல் கடந்துவிட்டன. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களிலேயே புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. விவசாயிகளின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு செப்டம்பர் மாத இறுதிக்குள் மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதில் குறியாக இருந்தது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

செப்டம்பர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கும், செப்டம்பர் 27-ம் தேதி ஒப்புதல் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே மோடி அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஹர்சிம்ரத் கௌர், (பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர்) வேளாண் சட்டங்களை எதிர்த்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க கூட்டணியிலிருந்தும் அக்கட்சி விலகிக்கொண்டது. தொடர்ந்து பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக, பஞ்சாபில் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது.

செப்டம்பர் 25-ல் விவசாயிகளின் நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கான (பாரத் பந்த்) அழைப்பை ஏற்று பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. செப்டம்பர் 28-ம் தேதி டெல்லி இந்தியா கேட் பகுதி அருகில் டிராக்டர் ஒன்றைத் தீயிட்டுக் கொளுத்தி வேளாண் சட்டங்களுக்குப் பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தது இந்திய அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயப் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

அந்தந்த மாநிலங்களில் போராடிவந்த விவசாயிகளை மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்பதால், டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்து, `டெல்லி சலோ' போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். நவம்பர் 25-ம் தேதி டிராக்டரில் டெல்லி நோக்கிப் பயணம் செய்தவர்களை போலீஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைக்குண்டு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்த முயன்றனர். இந்தச் சம்பவத்தில் மூன்று விவசாயிகள் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின.

விவசாயிகள் போராட்டம், டெல்லி
விவசாயிகள் போராட்டம், டெல்லி
டெல்லி சலோ!

பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தத் தொடங்கினர். கூடாரங்கள் அமைத்து அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் தலைநகரில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய பின்னர், உலக அளவில் கவனம் பெற்றது `டெல்லி சலோ' போராட்டம்.

அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடுபவர்களுக்குக் கனடா என்றும் துணை நிற்கும்.
ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோவைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எம்.பி-க்கள் சிலரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளித்தனர். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சுற்றுச்சூழலியலாளர் பாபா சேவா சிங் (Baba Sewa Singh) ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தங்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுகளைத் திருப்பியளித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரையில், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே 11 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன. இதில் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை தவிர மற்ற பேச்சு வார்த்தைகள் அனைத்தும் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தன. 6-ம் கட்ட பேச்சு வார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான உத்தரவாதம் ஆகிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக முடிவுகள் எட்டப்படவில்லை.

டெல்லி சலோ
டெல்லி சலோ

இதற்கிடையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்த விவசாயிகள், அதற்கான முன்னோட்டத்தை ஜன. 7-ம் தேதி டெல்லியின் நான்கு எல்லைகளிலும் நடத்தினர். ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் ஒத்திகை பார்த்தனர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இன்றைய தேதி வரையிலும், சாலை விபத்து, தற்கொலைகள், கடும் குளிர், உடல்நலக் குறைவு, போலீஸாருடனான மோதல் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். இருந்தும், இந்தச் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்பதில் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் கைகோத்து நிற்கின்றனர் விவசாயிகள்.

இந்தநிலையில், கடந்த ஜன. 21-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், `18 மாதங்கள் வரை புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம்' என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. விவசாயிகள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படுவதாகவும், இந்தக் குழு ஒரு முடிவை எட்டும் வரை (அதாவது 18 மாதங்களுக்குள்ளாக) மூன்று சட்டங்களும் செயல்படுத்தப்படாது என்றும் மத்திய அரசு தரப்பில் விவசாயிகளிடம் உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றன. இதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றிருப்பதாகவும் சொல்லப்பட்டன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்...

பேச்சுவார்த்தையில், ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகள் வரை வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க அரசு தயாராக இருக்கிறது என்று நாங்கள் கூறினோம். விவசாயச் சங்கங்கள் இது குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாகத் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கலந்தாலோசனைக்குப் பிறகு ஜனவரி 22 அன்று தங்கள் முடிவைக் கூறுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர்
ஜோகீந்தர் சிங்
ஜோகீந்தர் சிங்
ANI
`டெல்லி சலோ’ போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான்! - அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருக்கிறார் விவசாயச் சங்கத் தலைவர்களுள் ஒருவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் (Joginder Singh Ugrahan)...

மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்திவைப்பதாக மத்திய அரசு கூறியிருப்பதை ஏற்க முடியாது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். நாளை மத்திய அரசுடன் நடைபெறும் 11-ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் நிச்சயம் பங்கேற்போம்.
ஜோகிந்தர் சிங் உக்ரஹான், விவசாயிகள் சங்கம்

இந்தநிலையில், ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் விவசாயிகளைப் பாராட்டும் அரசியல் நோக்கர்கள், இது குறித்த சில கருத்துகளையும் முன் வைக்கிறார்கள். ``விவசாயிகளின் இந்த முடிவு பாராட்டுக்குரியது. அவர்களின் ஒற்றுமையைக் கலைக்கப் பல சதித் திட்டங்கள் நடந்தன. பல விவசாயிகள் உயிரிழந்தனர். `விவசாயப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எழுத்து வடிவில் உத்தரவாதம் தருகிறோம்' என்றுகூட மத்திய அரசு உறுதியளித்தது. இருந்தும், எந்தவொரு விஷயத்துக்காகவும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை. மூன்று சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்பதில் அவர்கள் உறுதியாகவே இருந்தனர். தற்போது ஒன்றரை ஆண்டுவரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதற்கும் விவசாயிகள் பணியவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

விவசாயிகளின் `டெல்லி சலோ’ போராட்டம்
விவசாயிகளின் `டெல்லி சலோ’ போராட்டம்

ஒருவேளை மத்திய அரசின் முடிவை ஏற்று விவசாயிகள், போராட்டத்தைக் கைவிட்டால், ஒன்றரை ஆண்டுக்குள் எப்படியாவது மீண்டும் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படும். காரணம், மத்திய அரசுக்கு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் எண்ணம் துளிக்கூட இல்லை. விவசாயிகள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டுக்குழு பேச்சுவார்த்தைகளெல்லாம் வெறும் கண்துடைப்புக்காகவே இருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர் மெரினாவில் கூட்டமாக 10 பேர் நடப்பதற்கே தடை விதித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். ஒருவேளை விவசாயிகள் இப்போது போராட்டத்தைக் கைவிட்டால், மீண்டும் கூட்டம் சேர விடாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும். எனவே, இதே ஒற்றுமையோடு விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும்'' என்கிறார்கள்.

மேலும், ``சில நாள்கள் இடைவெளிவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட விவசாயிகள், தற்போது அடுத்தடுத்த நாள்களில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுகின்றனர். குடியரசு தினம் நெருங்கி வருவதுதான் இந்தத் தொடர் பேச்சு வார்த்தைகளுக்கும், மத்திய அரசு சற்று இறங்கி வந்திருப்பதற்கும் காரணம். குடியரசு தினத்தன்று உலக நாடுகளின் கவனம் முழுவதும் இந்தியாமீது இருக்கும். அந்த நாளில், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினால், சர்வதேச ஊடகங்கள் இரண்டையும் சேர்த்துவைத்து கட்டுரைகள் வெளியிட வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் அது மத்திய அரசுக்கு உலக அரங்கில் பின்னடைவாக அமையும். டிராக்டர் பேரணியின் ஒத்திகைக்கே மிகப்பெரிய கவனம் கிடைத்தது. குடியரசு தினத்தன்று பேரணி நடந்தால் இன்னும் பெரிய கவனம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்: `பறவைக் காய்ச்சலைப் பரப்ப சிக்கன் பிரியாணி!’- சர்ச்சையில் பா.ஜ.க எம்.எல்.ஏ
குடியரசு தினத்துக்கு முன்பாக எப்படியாவது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்பதுதான் மத்திய அரசின் திட்டம். இன்னும் மூன்று நாள்கள் இருப்பதால் அதற்குள்ளாக ஏதாவது செய்து போராட்டத்தை நிறுத்துவதற்கு மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்யும். ஆனால், உலகத்தின் கவனத்தை ஈர்த்த விவசாயிகள் போராட்டம் வெற்றியில்தான் முடிய வேண்டும். இந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்குச் சமர்ப்பணமாக அந்த வெற்றி இருக்க வேண்டும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு