Published:Updated:

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன் தி.மு.க-வில் இணைகிறாரா?!

மகேந்திரன்
மகேந்திரன்

மக்கள் நீதி மையத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், நாளை மாலை தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராகப் பதவிவகித்தவர் கோவையைச் சேர்ந்த மகேந்திரன். கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இவர், கோவையில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் 1.4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் தோல்வியைத் தழுவினாலும், மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

மகேந்திரன்- கமல்
மகேந்திரன்- கமல்

கட்சியின் முக்கிய உறுப்பினராகப் பார்க்கப்பட்ட மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகினார். தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல்வேறு முக்கிய உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வெளியேறினார்கள். ``ம.நீ.ம கட்சியில் ஜனநாயகம் கிடையாது என்றும், தேர்தலுக்குப் பிறகு கமல் மாறுவார் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் மாறவே கிடையாது" என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கமலும் அறிக்கை வெளியிட்டார்.

கமலுடன் மகேந்திரன்
கமலுடன் மகேந்திரன்

இந்தநிலையில், மகேந்திரனும் மற்றும் பல முக்கிய உறுப்பினர்களும் நாளை மாலை 5 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் கொங்கு மண்டலத் தொகுதிகளில் தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, கொங்கு மண்டலத்தில் திமுக-வை வலுப்படுத்தவும், வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தவும் மகேந்திரனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்களால் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு