Published:Updated:

காஸ் சிலிண்டர் மானியம் ரத்தா... விலைக் குறைப்பா..?! - உண்மை என்ன?

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்படப் போகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு அரசுத் தரப்பில் மறுப்பு வராததால், எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்துசெய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இந்தியாவில் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது. இந்தநிலையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நுகர்வோராகிய மக்களின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்தவில்லை என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. அது மட்டுமல்லாமல், சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு முற்றிலும் ரத்துசெய்யப்போகிறது என்ற செய்திகளும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு பல ஆண்டுகளாக மானியம் கொடுத்து வருகிறது. உதாரணமாக, மானியத்துடன் கூடிய ஒரு சிலிண்டரின் விலை தோராயமாக 800 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 600 ரூபாய் என்ற விலையில்தான் மக்கள் அதை வாங்குவார்கள். மீதி 200 ரூபாய் மத்திய அரசின் மானியம். எண்ணெய் நிறுவனங்களுக்கு அந்த மானியத்தைக் கொடுத்துவிட்டு, 200 ரூபாய் குறைவாக எரிவாயு சிலிண்டரை மக்களுக்கு அரசு விநியோகிக்கும். 2013-ம் ஆண்டுவரை இதுதான் நடைமுறையாக இருந்தது.

மத்தியில், 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். மன்மோகன் சிங்கிடம் அவரின் மனைவி ஒரு கோரிக்கை வைத்தார். பிரதமரின் மனைவியாக அல்லாமல், ஒரு குடும்பத் தலைவியாக வைக்கப்பட்ட கோரிக்கை அது. ``சமையல் எரிவாயு விலை ஒருபோதும் உயராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்பதுதான் அந்தக் கோரிக்கை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தால், அதனால் ஏற்படும் கஷ்டம் குடும்பத் தலைவிகள் மீதுதான் விழும் என்ற உணர்வுடன் அந்தக் கோரிக்கையை அவர் வைத்தார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பத்தாண்டுக் காலம் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. மனைவியின் கோரிக்கையை மன்மோகன் சிங் நிறைவேற்றவில்லை அல்லது அவரால் நிறைவேற்ற முடியவில்லை. 2004-ம் ஆண்டு, ஜூன் மாதம் சென்னையில் ஒரு சிலிண்டர் விலை 261 ரூபாயாக இருந்தது. பத்தாண்டுக் கால ஆட்சி முடிவடைந்த 2014-ம் ஆண்டு, மே மாதம் சிலிண்டர் ஒன்றின் விலை 401 ரூபாயாக உயர்ந்திருந்தது. அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்துக்கு வேட்டுவைக்கும் வேலை ஒன்று அப்போது நடந்தது. அதன் பெயர், ‘நேரடி மானியத் திட்டம்.’

அதாவது, அதுவரை சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, நுகர்வோராகிய மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியத்தைச் செலுத்துவது என்பதுதான் அந்தத் திட்டம். சிலிண்டரை வாங்கும் மக்கள் சிலிண்டருக்கான முழுத் தொகையையும் கொடுத்து வாங்க வேண்டும். மானியத் தொகையை நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்திவிடும். இதற்கு, `நேரடி மானியம் வழங்கும் திட்டம்’ (Direct Benefit Scheme) என்று பெயர். அரசு வழங்கும் மானியம் இடைத்தரகர்களுக்குப் போகாமல், சம்பந்தப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக அப்போது காரணம் சொல்லப்பட்டது.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

இந்தத் திட்டத்துக்கு ஒரு தரப்பினரிடையே ஆதரவு இருந்தாலும், மறுபுறம் கடுமையான எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்தன. மானியத்தைக் காலி செய்வதற்காகவே இத்தகைய ஏற்பாடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் குற்றம்சாட்டினர். இந்தத் திட்டத்தை பா.ஜ.க அப்போது கடுமையாக எதிர்த்தது. இதை ,`பெண்களுக்கு எதிரான கொள்கை’ என்று விமர்சித்தார், தற்போதைய மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி. இந்தத் திட்டத்துக்கு எதிராக பா.ஜ.க-வின் பெண்கள் பிரிவின் சார்பில் நாடு முழுவதும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

எதிர்ப்புகளை மீறி, நேரடி மானியத் திட்டம் 2013-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, 18 மாவட்டங்களில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் ஆட்சி வந்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது நேரடி மானியத் திட்டத்தை எதிர்த்த பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பிறகு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. நேரடி மானியத் திட்டத்தைத் தொடர்வது என்று முடிவு செய்தது. அத்துடன், எரிவாயு சிலிண்டருக்கான வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது பா.ஜ.க அரசு.

எரிவாயு சிலிண்டர்
எரிவாயு சிலிண்டர்

இதற்கிடையில், வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படவில்லை என்கிற புகார்கள் பரவலாக எழுந்தன. மேலும், சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டம் ரத்துசெய்யப்படவிருப்பதாக 2017-ம் ஆண்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்திக்கு அரசுத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. சிலிண்டர் மானியம் ரத்துசெய்யப்படாது என்று உறுதியும் அளிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் அந்தப் பிரச்னை எழுந்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்திருப்பதால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்திருக்கிறது. இதனால், மானியத்துடன்கூடிய மற்றும் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் குறைந்திருக்கிறது. எனவே, கடந்த நான்கு மாதங்களாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மானியத்தொகை செலுத்தப்படாமல் மத்திய அரசு நிறுத்திவைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

எரிவாயு  சிலிண்டர்
எரிவாயு சிலிண்டர்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் பேசினோம். ``சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் போய்ச்சேர வேண்டிய பலருக்கும் கிடைக்கவில்லை. மானியத்தை வங்கியில் போடுவதாகச் சொல்லிவிட்டு, அதைப் போடவில்லை. அந்த வகையில், ஏற்கெனவே இந்த மானியத்தை ஒழித்துக்கட்டிவிட்டார்கள். எனவே, அதை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது, மத்திய அரசுக்கு பெரிய விஷயமாக இருக்காது. மாநிலங்களுக்கு சட்டப்படி மத்திய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு பாக்கியைத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

கேள்வி நேரம் இல்லை: `நாங்களெல்லாம் பொம்மைகளா?’ - கொதிக்கும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள்!

அதனால் பாதிக்கப்படப்போவது மக்கள்தானே... மத்திய அரசு தர வேண்டிய பணத்தைத் தரவில்லையென்றால், மாநில அரசு வேறு எங்காவது கடன் வாங்கும். அதற்காக முத்திரைத்தாள், கேளிக்கை வரி, கலால் வரி போன்றவற்றை மாநில அரசு உயர்த்தும். அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

கனகராஜ்
கனகராஜ்

மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசுக்குத் தெரியாதா என்ன? எனவே, இப்படிப்பட்ட ஆட்சியாளர்களுக்கு சிலிண்டர் மானியத்தை ரத்து செய்வதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. மானியங்களை ரத்துசெய்வதுதான் பா.ஜ.க அரசின் நிலைப்பாடு” என்றார் கனகராஜ்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். அவர், ``மத்திய அரசு சிலிண்டர் மானியத்தை ரத்துசெய்யவில்லை. மானியம் என்பது மக்களால் கொடுக்க முடிகிற தொகையைத் தாண்டி, அவர்களுக்கு அரசு கொடுக்கும் தொகை. உதாரணத்துக்கு, 600 ரூபாய் கொடுத்து மக்கள் சிலிண்டர் வாங்குகிறார்கள் என்றால், அதே 600 ரூபாயைத்தான் இப்போதும் கொடுக்கப்போகிறார்கள். ஒரு சிலிண்டரின் விலை 800 ரூபாய் என்றால், 200 ரூபாயை அரசு மானியமாகக் கொடுக்கும். இப்போது எண்ணெய் விலை குறைந்துவிட்டதால், 200 ரூபாய் மானியத்தை அரசு கொடுக்காது. ஆனாலும், மக்கள் முன்பு கொடுத்துக்கொண்டிருந்த அதே 600 ரூபாயைத்தான் இப்போது ஒரு சிலிண்டருக்கு கொடுக்கப்போகிறார்கள். விலை வெகுவாகக் குறைந்த காரணத்தால், மானியம் இப்போது தேவையில்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாராயணன்
நாராயணன்

மானியம் ரத்து என்று இதைப் பார்க்காமல், விலைக் குறைப்பு என்று பார்க்க வேண்டும். மானியம் ரத்து என்று பார்த்தால், அது அரசியல். விலைக் குறைப்பு என்று பார்த்தால், அது பாசிட்டிவ் ஆன விஷயம். இதன் காரணமாக, அரசுக்கு 20,000 கோடி ரூபாய் சேமிப்பு கிடைத்திருக்கிறது. அதை வைத்து தேசத்துக்கான கட்டமைப்புகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். இதுபோக, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த கொரோனா காலத்தில் இலவசமாக மூன்று எரிவாயு சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இதற்காக, 9,709 கோடி ரூபாய் அளவுக்கு அரசு ஒதுக்கியுள்ளது. மானியத்தை ரத்துசெய்வதாக கொள்கை முடிவு எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மானியம் ரத்து என்று இதைச் சொல்லக் கூடாது” என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, `சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுங்கள்’ என்று பல கோடி ரூபாய் செலவில் பெரும் பிரசாரத்தையும் மத்திய அரசு மேற்கொண்டது. பிரதமர் மோடியே நேரடியாக மக்களுக்கு அந்தக் கோரிக்கையை விடுக்கும் விளம்பரங்களும் வெளிவந்தன. அது போன்ற ஒரு வேண்டுகோள் மீண்டும் முன்வைக்கப்படலாம். தயாராக இருங்கள் மக்களே..!

அடுத்த கட்டுரைக்கு