Published:Updated:

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல்: ஆளுநர் ரவி நகர்வுகளால் பாஜக-வுக்குப் பின்னடைவா?!

ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

“ஒன்றிய அரசிடம் போனால், தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அனுப்பிவைத்தார்கள். இது மாநில பாஜக-வுக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது.” - திமுக-வின் தமிழ் கா.அமுதரசன்

Published:Updated:

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல்: ஆளுநர் ரவி நகர்வுகளால் பாஜக-வுக்குப் பின்னடைவா?!

“ஒன்றிய அரசிடம் போனால், தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அனுப்பிவைத்தார்கள். இது மாநில பாஜக-வுக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது.” - திமுக-வின் தமிழ் கா.அமுதரசன்

ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

2020-ம் ஆண்டு, அப்போதைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசரத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு, தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கின் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான போதிய காரணங்கள் இல்லை’ என்று கூறி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ரத்துசெய்தனர்.

 ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

இதையடுத்து ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக அவசரச் சட்டம் கொண்டுவந்தது. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, அக்டோபர் 19-ம் தேதி சட்ட மசோதாவை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதா குறித்த விளக்கங்களை ஆளுநர் கோரிய நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்தது.

ஆனாலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் டிசம்பர் 2-ம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரைச் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். இதற்கிடையே ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட மசோதாவை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி மார்ச் 6-ம் தேதி மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பினார். மார்ச் 23-ம் தேதி அந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில் தற்போது அரசிதழில் அது வெளியிடப்பட்டிருக்கிறது.

`மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம்’ - தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை இந்திய குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன், `எண்ணித் துணிக’ என்று நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது ஆளுநரின் பணி குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்தார். அதில், சட்டமன்ற அதிகாரம் முதல் ஸ்டெர்லைட் வரை பல கருத்துகளை ஆளுநர் பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சட்டமன்றம்
சட்டமன்றம்
ட்விட்டர்

இந்த நிலையில் ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. இதன்படி, ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். இதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும் அரசின் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டுவந்தார்.

சட்டமன்றத்தில் இந்தத் தீர்மானம் குறித்தான விவாதம் நடைபெற்ற நிலையில், அதே நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதாவில் கையெழுத்திட்டார் என்கிற செய்தி வெளியாது. இதைத் தொடர்ந்து தி.மு.க-வின் அழுத்தம் காரணமாகவே ஆளுநர் அடிபணிந்து வந்திருக்கிறார் என்று தி.மு.க தரப்பிலும், சட்டத்தைப் பின்பற்றியே ஆளுநர் நடந்திருக்கிறார் என்று பா.ஜ.க தரப்பிலும் கூறப்பட்டுவருகிறது.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

நிலைமை இவ்வாறு இருக்க, ஆளுநர் ரவியின் நகர்வுகளால் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``ஆளுநர் கடந்த முறை நிராகரித்ததற்கும், இந்த முறை ஒப்புதல் அளித்ததற்கும் சட்டரீதியான விவகாரங்கள் மட்டுமே காரணம். இந்த ஒப்புதலை அரசியல்ரீதியானதாக எடுத்துக்கொண்டு, ஆளுநர் பயந்துவிட்டார் என்றும், பணிந்துவிட்டார் என்றும் தி.மு.க கூறுவது ஏற்புடையது இல்லை. 2019-ல் ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, ஆஃப் லைன் ரம்மியையும் சேர்த்து அ.தி.மு.க அரசு தடைசெய்தது. இதையடுத்து இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, ‘திறமையின் அடிப்படையில் விளையாடக்கூடிய விளையாட்டு’ என்று சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

திறமையின் அடிப்படையில் இருந்த விளையாட்டு, சூதாக மாறியதுதான் இத்தனை மரணங்களுக்குக் காரணம். சூதாக மாறாமல் இருக்க உரிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்துகிறது. அதைப் பின்பற்றாமல் சட்டம் இயற்றியதே ஆளுநரின் நிராகரிப்புக்குக் காரணம். 45 பேர் இறந்துபோனதற்காக ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்கிறோம் என்று சொன்னால், 45 லட்சம் பேர் பாதிக்கப்படுகிற டாஸ்மாக்கை ஏன் தடை செய்யவில்லை... தமிழக மக்கள்மீது உண்மையான பற்று இருக்குமானால் முதலில் தடை செய்ய வேண்டியது டாஸ்மாக்கைத்தான். தி.மு.க அதைச் செய்யுமா?

ஆளுநரை வைத்து அரசியல் சதுரங்கத்தை அரங்கேற்றுகிறது தி.மு.க. இதன் மூலம் ஆளுநரையும், பா.ஜ.க-வையும் வில்லனாக்க தி.மு.க தொடர்ச்சியாக முயன்றுவருகிறது. இதற்கு முன்பும் மசோதாக்கள் தாக்கல் செய்து அனுப்பியிருப்பார்கள் இல்லையா... அவற்றில் சில மசோதாக்களுக்கு ஒப்புதலும், சில மசோதாக்கள் நிலுவையிலும் இருக்கிறதல்லவா... அவற்றுக்கு ஏன் ஒப்புதல் தரப்பட்டது, சில ஏன் நிலுவையில் இருக்கின்றன என தி.மு.க அரசு வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?” என்கிற கேள்வியை முன்வைக்கிறார்.

தமிழ் கா.அமுதரசன்
தமிழ் கா.அமுதரசன்

இது தொடர்பாக தி.மு.க மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா.அமுதரசன், “ஒருபக்கம், `நாங்களும் இந்தச் சட்டத்துக்கு ஆதரவு’ என்று பாஜக தெரிவித்தாலும்கூட, அவர்களின் முழு ஆதரவு ஆளுநருக்கானதாக இருந்தது. விவாதங்கள், ஊடகங்களில் சொன்ன பதில்களாகட்டும்... தடை வேண்டும் என்று சொன்னதைவிட ஆளுநர் சொன்னதுதான் சரி என்பதில் உறுதியாக இருந்தார்கள். எனவே, மறைமுகமாக ஆளுநரின் போக்குக்கு பா.ஜ.க-வினர் உடந்தையாக இருந்தார்கள். எனவேதான் ஆளுநரின் கருத்து, பா.ஜ.க-வின் கருத்து என்கிறோம். பொதுமக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள், என்கிற நெருக்கடியின் காரணமாகத்தான் பா.ஜ.க-வினர் ஆதரித்தார்களே தவிர, மற்றபடி மக்கள் நலன் சார்ந்து கிடையாது.

ஆளுநர், ‘தமிழ்நாடு அரசுக்கு சட்டமியற்றக்கூடிய அதிகாரம் இல்லை’ என்று சொன்னதும், தமிழக பா.ஜ.க-வும் அதேதான் சொன்னது. ஒன்றிய அரசிடம் போனால், தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அனுப்பிவைத்தார்கள். இது மாநில பாஜக-வுக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது. தமிழ்நாட்டில் அதிமுக-வுக்குத்தான் இரட்டைத் தலைமை என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், பாஜக-வுக்கும் இரட்டைத் தலைமைதான். ஒருவர் அண்ணாமலை, மற்றொருவர் ஆர்.என்.ரவி. காலை அண்ணாமலை என்ன அறிக்கை கொடுக்கிறாரோ, அதையேதான் ஆளுநரும் வெளிப்படுத்துவார். எனவே, இப்போது தமிழக அரசு எடுத்திருக்கும் அதிரடியான நடவடிக்கைகளுக்கு பயந்து ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருப்பது, ஆளுநருக்கான பின்னடைவோ இல்லையோ, நிச்சயம் பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவு” என்றார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “இதனால் பா.ஜ.க-வுக்கு எந்த ஒரு பின்னடைவும் ஏற்படாது. தி.மு.க-வைப் பொறுத்தவரை மாநில உரிமைக்காகத் திறம்படச் சண்டை போடுகிறார்கள் என்று அதன் தொண்டர்கள் மத்தியில் ஒரு போராட்ட குணம் உருவாகும். இதன் மூலம் தி.மு.க-வுக்கு மத்திய அரசு எதிர்ப்பு, மாநில உரிமைக்காக இருக்கிறது என்கிற இமேஜ் உயர்கிறது. அவ்வளவே” என்றார்.