Published:Updated:

குஜராத் மாடல்?!: கொரோனா மரணங்களில் தப்புக் கணக்கு!

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில், கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான கணக்கு குறைத்துக் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ``இதுதான் இவர்கள் சொன்ன குஜராத் மாடலா?” என்று சமூக ஊடகங்களில் பலரும் இதை விமர்சித்துவருகின்றனர்.

குஜராத் மாநிலத்தை 1998-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க ஆட்சி புரிந்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது சாலை வசதிகள், மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்புகளில் மிகப்பெரிய வளர்ச்சியை குஜராத் அடைந்துவிட்டதாகவும், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக அது விளங்குவதாகவும் பா.ஜ.க தரப்பினர் பெருமையுடன் கூறிவந்தனர். ஆனால், 2014-ல் நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு, குஜராத் மாநிலத்தின் பெருமைகள் என்று யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. மேலும், குஜராத் வளர்ச்சி குறித்துப் பொய்யான பிம்பம் ஏற்படுத்தப்பட்டதாகவும், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட பலவற்றில் பின்தங்கிய நிலையில்தான் குஜராத் இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்களுடன் பல ஆய்வுக்கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

தற்போது, கொரோனா 2-வது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்துவரும் நிலையில், குஜராத் மாநிலம் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை போன்ற பிரச்னைகள் பல வாரங்களுக்கு முன்பாகவே எழத் தொடங்கிவிட்டன. கொரோனா மரணங்கள் குறித்து அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களில் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவும், உண்மையில் அதைவிட இரண்டு மடங்குக்கு மேல் அந்த எண்ணிக்கை இருக்கிறது என்று கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலேயே செய்திகள் வந்தன. குஜராத் மாநிலப் பத்திரிகைகளும் ஊடகங்களும்கூட குஜராத்தில் பொது சுகாதார முறையின் தோல்விகள் பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

அப்போது தொடங்கி, குஜராத்தில் சுடுகாடுகளும் இடுகாடுகளும் 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கிவருகின்றன. அகமதாபாத், வடோதரா, சூரத், பரூச், ராஜ்கோட், பாவ்நகர், மஹ்சனா, படன், புஜ் போன்ற இடங்களில் இடுகாடுகளிலும் சுடுகாடுகளிலும் சடலங்கள் வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்கள், பிணக்கிடங்குகளில் பல மணி நேரம் வைக்கப்பட்டதால், கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் சண்டை போட்ட சம்பவங்களும் ஒரு சில இடங்களில் நிகழ்ந்தன.

உடல்கள் எரிப்பு
உடல்கள் எரிப்பு

தற்போது அங்கு, கொரோனாவால் மரணடைவோரின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே இத்தகைய புகார்கள் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன என்றாலும், தற்போது அது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. குறிப்பாக, கடந்த மார்ச் 1-ம் தேதியிலிருந்து மே 10-ம் தேதிவரை சுமார் 1.23 லட்சம் இறப்புச் சான்றிதழ்களை அரசு வழங்கியிருக்கிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் 4,218 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

‘திவ்யா பாஸ்கர்’ என்ற குஜராத் நாளேடு இது குறித்துச் செய்தி வெளியிட்ட பிறகு, தேசிய அளவில் விவாதப்பொருளாக இது மாறியிருக்கிறது. கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரை சுமார் 1.23 லட்சம் இறப்புச் சான்றிதழ்களை அரசு வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 58,000 இறப்புச் சான்றிதழ்களையே அரசு வழங்கியிருக்கிறது. அப்படியென்றால், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் கூடுதலாக 65,000 இறப்புச் சான்றிதழ்களை அரசு வழங்கியிருக்கிறது. இது பற்றித்தான் ‘திவ்யா பாஸ்கர்’ நாளேடு கேள்வி எழுப்பியிருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

2020-ம் ஆண்டு, மார்ச் 1-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரையிலான 71 நாள்களில், அகமதாபாத் நகரில் 7,786 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டு, மார்ச் 1-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரையிலான 71 நாள்களில் 13,593 இறப்புச் சான்றிதழ்கள் அகமதாபாத் நகரில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 2021-ம் ஆண்டில் இந்த 71 நாள்களில் அகமதாபாத் நகரில் 2,126 பேர் மட்டுமே இறந்ததாக குஜராத் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. அதேபோல, 2021-ம் ஆண்டில் அந்த 71 நாள்களில் ராஜ்கோட்டில் 10,878 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 288 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறது. சூரத் நகரில் இந்த 71 நாள்களில் 2,769 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 1,074 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்ததாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. அதேபோல, வடோதராவில் இந்த 71 நாள்களில் 7,722 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 189 பேர் மட்டுமே கொரேனாவால் இறந்ததாக அரசுப் புள்ளிவிவரம் கூறுகிறது.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுவதாக குஜராத் மாநிலத்தில் வெளியாகும் 98 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட ‘சந்தேஷ்’ என்கிற நாளேடும் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. மரணங்களின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுகிறது என்பதை அறிந்து, அது உண்மைதானா என்பதை நேரில் உறுதிசெய்வதற்காக, அகமதாபாத்தில் 1,200 படுக்கைகள் கொண்ட `அரசு கோவிட் 19 மருத்துவமனை’க்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சந்தேஷ் நாளேட்டின் செய்தியாளர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து அங்கு நடப்பவற்றை கவனித்துள்ளனர்.

உறவினர்கள் துயரம்
உறவினர்கள் துயரம்

அந்தநேரத்தில், அந்த மருத்துவமனையின் பிண அறையிலிருந்து 17 மணி நேரத்தில் 69 உடல்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டு ஆம்புலன்ஸ்களில் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அதன் மறுநாள் அரசு வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில், அகமதாபாத்தில் 20 பேர் உட்பட மாநிலத்தில் மொத்தம் 55 பேர் இறந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோல, மருத்துவமனைகள், இடுகாடுகள், சுடுகாடுகள் ஆகியவற்றுக்குச் சென்று சடலங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அரசுப் புள்ளிவிவரத்துக்கும், உண்மை நிலைக்கும் உள்ள வித்தியாசங்களை சந்தேஷ் நாளேடு செய்திகளாக வெளியிட்டது. ‘குஜராத் சமாச்சார்’ என்ற முன்னணிப் பத்திரிகையும் கள ஆய்வுகளின் அடிப்படையில் பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்தது.

எந்த ஓர் அரசுக்கும் வெளிப்படைத்தன்மை என்பது மிக மிக அவசியம். இந்த கொரோனா காலகட்டத்தில் மருத்துவக் கட்டமைப்புகள், மருந்து இருப்பு, மரணங்கள் போன்றவற்றில் வெளிப்படையாக இருந்தால்தான், பிரச்னைகளைச் சரிசெய்ய வசதியாக இருக்கும். முக்கியமாக, மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். ஆகவேதான், எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மாநிலத்தில் மருத்துவமனைப் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஆகியவை குறித்தும், கொரோனா தொடர்பாக அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் குறித்தும் கவலை தெரிவித்துவருகின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பணியாளர்கள்
மருத்துவப் பணியாளர்கள்

ஆனாலும், கொரோனா மரணங்களை அரசு குறைத்துக் காண்பிக்கிறது என்கிற ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மறுத்துள்ளார்.

“ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல்கள்படி, இணைநோய் உள்ள ஒரு நோயாளி இறந்தால், அவரது இறப்பு குறித்து முதல் மற்றும் இரண்டாவது காரணங்களை நிபுணர்கள்குழு முடிவுசெய்யும். ஒருவரது இறப்புக்கான முக்கியக் காரணம் மாரடைப்பு என்றால், அவருக்குத் தொற்று இருந்தது என்றாலும்கூட, அது கொரோனாவால் ஏற்பட்ட இறப்பாகக் கருதப்படாது. இந்த முறைதான் நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது” என்று முதல்வர் குறிப்பிட்டார். ஆனால், கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவர் எந்தவொரு நோய் அறிகுறியும் இல்லாமல் இறந்தால்கூட, கொரோனாவால் இறந்ததாகவே பதிவுசெய்யப்பட வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல் தெளிவாகக் கூறுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

விஜய் ரூபானி
விஜய் ரூபானி

கடந்த ஏப்ரல் 22-ம் தேதியிலிருந்து கடந்த மூன்று வாரங்களாக தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். அந்த எண்ணிக்கை மே 1-ம் தேதி 4 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் ஒரு நாட்டில் ஒரு நாளைக்கு 4 லட்சத்தைத் தாண்டியது என்பது அதுதான் முதன்முறை. மே 7-ம் தேதி 4.14 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால், கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய ஆட்சியாளர்களாக வந்த பிறகும், குஜராத் தொடர்பான விவகாரங்களில் இருவருமே தனி கவனம் செலுத்துபவர்கள். ஆனால், தற்போதைய இந்தச் சர்ச்சையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு