Published:Updated:

இந்தியா தன் ஜனநாயகத்தன்மையை இழந்து வருகிறதா... வி-டெம் அறிக்கை சொல்வது என்ன?

ஜனநாயகம்
ஜனநாயகம்

சமீபத்தில் வி-டெம் (V-Dem) நிறுவனம், அது வெளியிட்டிருக்கும் தகவலில் உலகின் மாபெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் ஜனநாயகம் குறைந்துவருவதாகத் தெரிவித்திருக்கிறது.

ஸ்வீடன் நாட்டில் இயங்கிவரும் வி-டெம் இன்ஸ்டிட்யூட் சமீபத்தில் `ஜனநாயக அறிக்கை-2020' என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் 176 நாடுகளுக்கான, `பரந்த கொள்கையுடைய மக்களாட்சிக் குறியீட்டு'ப் பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 90-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. நமது அண்டை நாடுகளான இலங்கை 70-வது இடத்திலும். நேபாளம் 72-வது இடத்திலும் இருக்கின்றன. அதேநேரத்தில் பாகிஸ்தான் 126-வது இடத்திலும், வங்காளதேசம் 154-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

வி-டெம் இன்ஸ்டிட்யூட் அதிகாரிகள், ஸ்வீடன் நாட்டில் இயங்கிவரும் கோதன்பெர்க் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள். மேலும், இந்த ஆய்வறிக்கையைத் தயார் செய்ய, 165 நாடுகளைச் சேர்ந்த 665 வல்லுநர்கள் பங்காற்றியிருக்கிறார்கள்.

V-Dem Democracy Report-2020
V-Dem Democracy Report-2020

இந்த அறிக்கையில், இந்தியா குறித்துத் தனியாக எந்தத் தகவலும் இல்லாதபோதும், ஆளும் அரசை விமர்சிக்கும் போக்கு சமூகத்திலும் ஊடகங்களிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் குறைந்துவருவதாகத் தெரியவந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், `ஜி-20 ன் பல முக்கிய நாடுகளிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சர்வாதிகாரத்தின் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அடங்கும்' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் ஜனநாயக வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை ஸ்வீடனில் வசிக்கும் வி-டெம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன் லிண்ட்பெர்க்கிடம் கேட்டறிந்தோம்.

``இந்தியாவில் ஜனநாயகம் சரிந்துகொண்டிருக்கிறது. விரைந்து அதைச் சரிசெய்யாவிட்டால் இந்தியா தன் ஜனநாயகத் தன்மையை இழந்துவிடும். இந்தச் சரிவு அனைத்துமே தற்போதைய ஆளும் பி.ஜே.பி அரசாளும், பிரதமர் மோடியின் செயல்களாலும் ஏற்பட்டவைதான். இந்தியாவின் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மாறுபட்ட கருத்துகளின் சுதந்திரம், மக்கள் சமூகத்தின் சுதந்திரம், நடைபெறும் தேர்தல்களின் தரம், சுதந்திரமான கல்வி போன்ற பல காரணிகளில் இந்தியா சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. முக்கியமாகக் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஊடக சுதந்திரம் பறிபோய்வருகிறது. பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கைதுசெய்யப்படுகிறார்கள், அரசாங்கம் ஊடகங்களை அடிபணியவைக்க முயல்கிறது. அரசை விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

ஸ்டீபன் லிண்ட்பெர்க்
ஸ்டீபன் லிண்ட்பெர்க்

தற்போது ஆட்சியைக் கவிழ்த்தோ, ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தோ அவசரநிலையைக் கொண்டுவரத் தேவையில்லை. மாறாக, அரசியலமைப்பிலும், சட்டத்திலும் மாற்றம் கொண்டு வந்து சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியே அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். உதாரணமாக, துருக்கியின் அதிபர் எர்துவான் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். துருக்கி மற்றும் போலந்தில் நடந்த அதே செயல்கள்தான், தற்போது இந்தியாவில் நடந்துவருகின்றன. இந்தியாவில் இந்தநிலை நீடித்தால், விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும். இந்த அரசு செய்த தவறான செயல்களை விரைந்து சரிசெய்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டினால் மட்டுமே இந்த நிலை மாறும். இந்தியா ஜனநாயக நாடாக நீடிக்கும். இந்தியா தற்போது இருக்கும் நிலையிலிருந்த நாடுகளில் 80 சதவிகித நாடுகள் சர்வாதிகார நாடக மாறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது'' என்றார் அவர்.

`அது இந்தியாவின் பகுதி... உங்களுக்கு உரிமை இல்லை!’ - பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா
நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்த ஆய்வறிக்கை தொடர்பாக, தமிழக பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியைக் கேட்டபோது, ``இந்தியா போன்ற ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டை இன்னொரு நாட்டின் நிலையோடு ஒப்பிடுவது சரியா... இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் ஆய்வுகளைப் புறம்தள்ளிவிட வேண்டும் , நம் தேசம் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மற்றொரு நாட்டைச் சேர்ந்த நிறுவனம் நம் நாட்டை பற்றிக் கூறுவதைப் புறம்தள்ள வேண்டும். இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு