பா.ஜ.க-வின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாளின் 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வானது, தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் ஃபார்முலா என்ற ஃபார்முலாவை உலகத்தில் முதன் முறையாக அரசியலில் கொண்டுவந்து புகுத்தியது திராவிட முன்னேற்ற கழகம்தான். தற்போது 100 திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சக்கூடிய அளவுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா அமோகமாக நடக்கிறது.

பொதுமக்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று செய்திகள் மூலம் அறிந்தேன். இப்படி ஒரு தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்குத் தேவைதானா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. இந்தத் தொகுதியில் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான, அ.தி.மு.க-வும் போட்டியிடுகிறது. ஆகவே, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சிந்தித்து முடிவு எடுப்பார். அ.தி.மு.க பிளவுப்பட்டு நிற்பதற்குக் காரணம் பா.ஜ.கதான் என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல.
அ.தி.மு.க-வின் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.ம.மு.க கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் யாரும் இது குறித்து எந்தக் கருத்தும் சொல்லவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்த தி.மு.க-வினர் சொல்லியிருந்தால் முதலில் உங்க கட்சியைப் பாருங்கள் என்றுதான் பதில் சொல்லவேண்டியதிருக்கும். தி.மு.க எத்தனை கூறாகப் பிரிந்தது, பிரியத் தயாராகயிருக்கிறது என்பதை அவர்கள்தான் கவலையுடன் பார்க்க வேண்டும். இல்லையென்றால் தி.மு.க-விலிருந்து பிரிந்த அ.தி.மு.க, ம.தி.மு.க போல பல கட்சிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

ராணுவ வீரர்கள் நாட்டுக்க்காக உழைக்கக்கூடியவர்கள், குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள், அவர்கள் மேல், பிரச்னை இருந்தால் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையே எடுக்காத நடவடிக்கைகளை தி.மு.க கவுன்சிலர் எடுத்திருக்கிறார் என்றால், இதற்கு தி.மு.க பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.