Published:Updated:

முறுக்கிய முதல்வர்கள்... முடங்கிய நிதித்துறை - 20 லட்சம் கோடி மோடி மேஜிக் பலிக்குமா?

மோடி
News
மோடி

நம்பிக்கை வார்த்தைகளுடன் மோடியின் அரைமணிநேர உரை அமைந்திருந்தது. ஆனால் இந்த உரை, இதற்குப் பிறகு இந்தியாவில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகும் என்கிற கேள்வி அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.

``தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. கொரோனாவுக்குப் பின் உலகை வழிநடத்துவதில் இந்தியா முன்னிற்கும்” என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் மோடியின் அரைமணிநேர உரை அமைந்திருந்தது. ஆனால் இந்த உரை, இதற்குப் பிறகு இந்தியாவில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகும் என்கிற கேள்வி அனைத்து தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இந்தியாவில் தற்போது மூன்றாவது ஊரடங்கு வரும் மே 17-ம் வரை நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி நேற்று ஊரடங்கை நீடிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாகக் கலந்துரையாடலை நடத்தினர். அப்போது ஒவ்வொரு மாநில முதல்வர்களும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சு பிரதமர் உட்பட பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவரது பேச்சில், “கொரோனா விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசுக்குழு மேற்கு வங்கத்துக்கு வரும்போது அவர்களை விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டும் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. இந்தியா என்பது தனி தேசம் அல்ல. கூட்டாட்சி அமைப்புகளைக் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டில் மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு உதாசீனப்படுத்திவருகிறது. கொரோனா விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மத்திய அரசு இதுவரை என்ன எதிர்வினை ஆற்றியுள்ளது? அதை நான் சுட்டிக்காட்டினால் என்மீதும் என் மாநில மக்கள் மீதும் பழி சுமத்துகின்றீர்கள்” என்று கடுமையாகப் பேசினார். சுமார் 15 நிமிடம் மம்தா பானர்ஜி சீற்றமாகப் பேசிக்கொண்டிருந்ததை பிரதமரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடி - மம்தா பானர்ஜி

அதே போல் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ``ஊரடங்கை முழுமையாகக் கைவிட வேண்டாம். ரெட் அலர்ட் பகுதிகளில் தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்க வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அடுத்த இரண்டு மாதங்கள் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவுறுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு தொழில் துறையினர் பாதிக்கப்படாத வண்ணமும் நமது ஊரடங்குத் திட்டங்கள் இருக்க வேண்டும்” என்றார். எடப்பாடி பழனிசாமி, ``ரயில்களையும் விமானங்களையும் உடனடியாக இயக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதிகளையும் உடனடியாக வழங்குங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இதே போல் பல மாநில முதல்வர்களும் பிரதமரிடம் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஒரு மாதமாகவே தொழில்துறையின் கூட்டமைப்பினர் சார்பில் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்குத் தொடர்ந்து அழுத்தங்கள் வந்துள்ளன. அதாவது, தொழில்துறை முடங்கியுள்ளதால் அதை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று சொல்லி வந்தது. ஏற்கெனவே மார்ச் 27-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ரிசர்வ் வங்கி இந்தியப் பொருளாதாரத்தில் 2,80,000 கோடியை உட்புகுத்தும் என்றும், வங்கி டெபாசிட்களுக்காக ரிசர்வ் வங்கி வழங்கி வந்த வட்டியின் மதிப்பு 4% குறைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்தியாவின் பொருளாதாரத்தை கொரோனா நோய் பெரிய அளவில் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். இதன்பிறகு தொடர்ந்து மத்திய அரசு பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டே வந்தது. அதே நேரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 26-ம் தேதி அன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அதில் “பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜன திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படும் என்றும் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் 8.69 கோடி விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 500 - அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது என்றும் அறிவித்தார். இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 1,70,000 கோடி ரூபாய் ஆகும். இப்போது பிரதமர் பேசும்போது, `ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அதாவது, சுயசார்பு பாரதத் திட்டம். இதை அவரது உரையில் திரும்பத் திரும்ப உபயோகப்படுத்தினார்.

தன் உரையில், ``ஏற்கெனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த அறிவிப்புகளும் அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகளும் சேர்த்து எடுக்கப்பட்ட தொகுப்பு நிதியே இந்த 20 லட்சம் கோடி” என்று மோடி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, 20 லட்சம் என்று வாயால் சொல்லியிருந்தாலும் அது நடைமுறைக்கு வரும்போது 12 லட்சம் கோடியாக மட்டுமே கணக்கு காட்டப்படும். குறிப்பாக, மத்திய ரிசர்வ் வங்கி சில திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளது. அது போக மத்திய நிதி அமைச்சகம் 1,70,000 கோடிக்கான திட்டங்களை அறிவித்தது. அவற்றையும் இந்த 20 லட்சம் கோடியில் சேர்த்துச் சொல்லி மிகப்பெரிய தொகையை மக்களுக்கு வழங்க இருப்பது போன்ற தோற்றத்தைப் பிரதமர் உருவாக்கிவிட்டார் என்று இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் பொருளாதார நிபுணர்கள்.

வெளிமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர்
வெளிமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர்

அதே நேரம் பிரதமர் இந்த அறிவிப்புகளை வெளியிட முக்கிய காரணங்களில் ஒன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த சிக்கல்கள். அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல ரயில் போக்குவரத்து வசதியை அறிவித்தது. ஆனால், கடந்த 40 நாள்களுக்கு மேலாக வேலையின்றி வாழ்ந்துவரும் அவர்கள் ரயிலுக்குரிய தொகையை செலுத்தினால் மட்டுமே பயணிக்க அனுமதி என்று மத்திய அரசு அறிவித்தது பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பிரதமரின் இன்றைய உரையில் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு இந்தத் தொகுப்பு நிதியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இறுதியாக மாநில அரசுகளின் பரிந்துரை அடிப்படையில் புதிய ஊரடங்கு அறிவிப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், அது வரும் மே 18-க்கு முன்பாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துளார்.

இது குறித்து டெல்லித் தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், "அடுத்த ஊரடங்கு இருக்கப்போகிறது. ஆனால், அதில் சில விலக்குகள் கண்டிப்பாக இருக்கும். பொருளாதாரச் சிக்கல்களை இந்த 20 லட்சம் கோடியை வைத்து எப்படி சமாளிப்பார்கள் என்பது கேள்விக்குறியே. மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்பதே அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாகக் கொடுத்துவிடுங்கள் என்பதைத்தான். ஆனால், நிதி அமைச்சகம் அதை முழுமையாகக் கொடுக்க முடியாது என்பதை பிரதமருக்குச் சொல்லிவிட்டது.

மோடி
மோடி

ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த சில தொகுப்புத் திட்டங்கள் முழுமையாக இன்னும் பயனாளர்களைச் சென்றடையவில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போதும் உள்ளது. புதிய திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்தாலும் அதனால் சிறு தொழில், குறு தொழில் நிறுவனங்கள் பயனடையுமா என்கிற சந்தேகம் உள்ளது. எனவே, பிரதமரின் இந்த அறிவிப்பு ஏட்டுச்சுரக்காய் போன்று மாறினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். காரணம் 20 லட்சம் கோடியை ஒரே நேரத்தில் செலவு செய்யும் அளவுக்கு இந்தியாவில் நிதி கைவசம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்” என்று ஓர் எச்சரிக்கையுணர்வோடு சொல்கிறார்கள்.