Published:Updated:

சீமான், சரத்துக்கு அழைப்பு... கமல்ஹாசனால் 3-வது அணியைத் திரட்டுவது சாத்தியமா? #TNElection2021

கமல்
கமல்

கமல், சீமான், சரத்குமார் மூவரும் ஓரணியில் இணைவார்களா, மூன்றாவது அணி சாத்தியமா?

``மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் யாரும் எங்களுடன் வரலாம். அதன்படி, சீமான், சரத்குமார் விரும்பினால் எங்கள் அணிக்கு வரலாம். நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்''

என நடிகர் கமல்ஹாசன் பேசியிருப்பது வரும் தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான தொடக்கப்புள்ளியா என அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டுவருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்கவிழா சென்னை, தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு விநியோகத்தை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கிவைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக, அப்துல் கலாம் லட்சிய இந்தியக் கட்சியின் தலைவர் பொன்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கமல்
கமல்

தொடர்ந்து, கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா'' என்று கமலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ``அமையும் என்று தோன்றுகிறது. அதற்கான மேகங்கள் கூடிவருவதாகத் தெரிகிறது. விரைவில் மழைக்கும்'' என்றார். தொடர்ந்து, ``சீமான், சரத்குமார் போன்றவர்கள் உங்களுடன் வரலாம் என பொன்ராஜ் அழைப்புவிடுத்திருக்கிறாரே?'' எனக் கேட்க, ``மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் எங்களுடன் வரலாம்'' என பதிலளித்தார் கமல். ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கமல் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்தநிலையில், கமலின் இந்த அழைப்பு குறித்து, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாக்கியராசனிடம் பேசினோம்.

``மக்கள் நீதி மய்யம் எங்களின் நேச சக்திதான். எங்கள் கட்சிக்குப் பின்னால் மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டாலும், இருவரின் பயணமும் மாற்றத்தை நோக்கியதுதான். கமலின் அழைப்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் பிரசாரத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். வரும் மார்ச் 20-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நடைபெறவிருக்கிறது. இனிமேல் அதை மாற்றுவது என்பது சாத்தியமில்லை. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என மக்களிடம் சொல்லித்தான் வாக்குச் சேகரித்துவருகிறோம். அதனால், இந்தத் தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. நேரம் கடந்துவிட்டது'' என்கிறார் அவர்.

பாகீரதி
பாகீரதி

சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர், பாகீரதியிடம் பேசினோம்:

``கமல் அவர்கள் திறந்த மனதுடன் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், அவர்கள் கட்சியில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. அப்படி வந்தால் எங்கள் தலைவரும் அதனை மறுக்கமாட்டார் என நினைக்கிறேன். நல்லவர்கள் அனைவரும் இணைவது தமிழகத்துக்கு நல்லதுதான்'' என்கிறார் அவர்.'' என்கிறார் அவர்.

கமல் தலைமையில் 3-வது அணி:
யார் இணைவார்கள்... என்ன தாக்கம் ஏற்படும்?

கமல், சீமான், சரத்குமார் மூவரும் ஓரணியில் இணைவார்களா, மூன்றாவது அணி சாத்தியமா... அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்:

``சீமான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 3.8 சதவிகித வாக்குகளை எடுத்திருக்கிறார். கமல், 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். சீமான், அனைத்து இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். ஆனால், கமல், இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடவில்லை. மக்கள் நீதி மய்யத்தைவிட, நாம் தமிழர் கட்சி பெரிய கட்சி. அப்படியிருக்க சிறிய கட்சியின் தலைமையை பெரிய கட்சி எப்படி ஏற்றுக்கொள்ளும்... சரத்குமார் வேண்டுமானால் கூட்டணிக்குச் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. சீமான் நிச்சயம் செல்ல மாட்டார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

தமிழகத்தில், தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற கட்சிகள் தங்களின் வாக்குவங்கியை வேண்டுமானால் அதிகப்படுத்திக்கொள்ளலாமே தவிர, சீட் பிடிப்பது கடினம். அதனால், கமல், சீமான், தினகரன் போன்றவர்களுக்குக் கூட்டணி வாய்ப்பு என்பது இல்லை. அடையாளத்துக்காக, இஸ்லாமிய, தலித் அமைப்புகளை உடன் சேர்த்துக்கொண்டு போட்டியிடலாம். கணிசமான வாக்குகளைப் பெறலாம். சீமான் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு தனிவழியில் சென்றுகொண்டிருக்கிறார்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு