Published:Updated:

அதிமுக: ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் இணைந்து செயல்படுவது சாத்தியமா?!

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்தாலும், அவரால், அண்ணனின் கையெழுத்தில்லாமல் பொதுக்குழுவை நடத்தமுடியாது. எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது'' என நெஞ்சை நிமிர்த்துகின்றனர்.

அதிமுக: ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் இணைந்து செயல்படுவது சாத்தியமா?!

``எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.பி.எஸ்ஸின் கோரிக்கையை நிராகரித்தாலும், அவரால், அண்ணனின் கையெழுத்தில்லாமல் பொதுக்குழுவை நடத்தமுடியாது. எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது'' என நெஞ்சை நிமிர்த்துகின்றனர்.

Published:Updated:
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு முன்பு நடந்த அனைத்து கசப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுபட வேண்டும்'' என ஓ.பி.எஸ் அழைப்புவிடுக்க, ``அவருக்குப் பதவி வேண்டுமென்றால் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். அவரால் பதவி இல்லாமல் இருக்கமுடியாது. மற்றவர்களைப் பற்றி அவருக்குக் கவலை கிடையாது'' என ஒருமணி நேரத்திலேயே அதை நிராகரித்தார் இ.பி.எஸ். அதேவேளை, அ.தி.மு.க-வின் பொதுக்குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலும் தேவை என்பதால் மீண்டும் இரட்டைத் தலைமை வருவதற்கான சூழல்தான் அதிகமாக இருக்கிறது என ஓ.பி.எஸ் தரப்பும், `இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரும். அதனால் அந்தத் தேவையே இருக்காது' என இ.பி.எஸ் தரப்பும் மல்லுக்கட்டுகின்றனர். இந்த நிலையில், சட்டரீதியாக அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை நீடித்து வந்தாலும், நடைமுறையில் இருவரும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?

ஓ.பி.எஸ் பிரஸ்மீட்
ஓ.பி.எஸ் பிரஸ்மீட்

``அ.தி.மு.க-வில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்'' என அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம். `எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்படியே தொடரும்' என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சமாக இருந்தது. தொடர்ந்து தீர்ப்பு வந்த மறுநாள் காலை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ், "கழகம் ஜனநாயகரீதியில் ஒன்றுபட்டால் யாராலும் வெல்ல முடியாது என்பது நிரூபணமான ஒன்று. எங்களுக்குள் நடந்த கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.க-வுக்குள் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதில் எங்களுக்குப் பெரும் பாதிப்புதான், இருந்தாலும் பரவாயில்லை. அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு முன்பு நடந்த அனைத்துக் கசப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுபட வேண்டும். அம்மாவின் மரணத்துக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவருடன் முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தோம். அந்த ஒற்றுமை நிலை மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்'' என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைக்கு விடுத்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், பன்னீர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஒரு மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பன்னீரின் அழைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப,

``அ.தி.மு.க இயக்கத்தைச் சிலர் தங்கள்வசம் கொண்டு செல்ல முயல்கின்றனர். அதைத் தடுக்கும்போதுதான் சில பிரச்னைகள் உருவாகின்றன. பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அ.தி.மு.க-வில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் இரட்டைத் தலைமை பதவி காலாவதியாகிவிட்டது. ஒற்றைத் தலைமை வேண்டும் என மக்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகின்றனர். ஓ.பி.எஸ்-ஸின் மகனும், எம்.பி-யுமான ரவீந்திரநாத், ஸ்டாலினைச் சந்தித்து `சிறப்பான ஆட்சி’ என வாழ்த்து சொல்வது எப்படிச் சரியாகும்...

டி.பி.எஸ் பிரஸ்மீட்
டி.பி.எஸ் பிரஸ்மீட்

அ.தி.மு.க தொண்டர்கள் அதை எப்படி ஏற்பார்கள்... ரெளடிகளை வைத்து அ.தி.மு.க அலுவலகத்தை ஓ.பி.எஸ் தாக்கினார். அ.தி.மு.க அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை ஓ.பி.எஸ் தரப்பினர் திருடிச் சென்றனர். உயர்ந்த பொறுப்பில் இருக்கிற ஓ.பி.எஸ் இப்படித் தாழ்வாக, அநாகரிகமாக நடந்துகொண்டால் எப்படி அவருடன் இணைந்து பணியாற்ற முடியும்... ஒற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் ஓ.பி.எஸ்-ஸுடன் 15 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓ.பி.எஸ்., ஏன் நீதிமன்றங்களை நாடிச் சென்றார்?'' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதோடு, `இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை' என்கிற ரீதியில் பதிலளித்திருந்தார். அதேநாளில், சென்னை உயர் நீதிமன்றத்தில், துரைசாமி, சுந்தர்மோகன் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில், எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், ``எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.பி.எஸ்-ஸின் கோரிக்கையை நிராகரித்தாலும், அவரால், அண்ணனின் கையெழுத்தில்லாமல் பொதுக்குழுவை நடத்தமுடியாது. எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது. அதனால், நீதிமன்ற உத்தரவுப்படி இரட்டைத் தலைமையின்கீழ்தான் செயல்பட முடியும்'' என நெஞ்சை நிமிர்த்துகின்றனர் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.

இது குறித்து நம்மிடம் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் ஓ.பி.எஸ் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் பேசும்போது,

``எடப்பாடி தரப்பினர் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். ஆனால், அங்கும் நியாயமான தீர்ப்புதான் வரும். நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் எங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் கட்சி நலனுக்காக அண்ணன் ஓ.பி.எஸ் இணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தி, தகுதியில்லாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி பேசியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பின்படி, இனி கட்சியில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றாலும், அண்ணன் ஓ.பி.எஸ்-ஸின் கையெழுத்தும் வேண்டும். அந்த ஆத்திரத்தில்தான் எடப்பாடி பழனிசாமி தவறாகப் பேசுகிறார். அவரின் பேச்சை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் ரசிக்கவில்லை. கூட்டுத்தலைமையாகச் செயல்பட்டதால்தான் கழகத்துக்கு நல்லது என்கிற அண்ணன் ஓ.பி.எஸ்-ஸின் கருத்தை தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் பல முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் இப்போது அவரின் கருத்தை ஏற்காமல் மதில்மேல் பூனையாகத்தான் இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற இரட்டைத் தலைமை முறைதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மீண்டும் அவர்கள் பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டாலும், அண்ணனின் கையெழுத்து கண்டிப்பாக இருக்கவேண்டும். நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் அண்ணனின் ஒப்புதல் பெறப்படவேண்டும். அப்படி அண்ணன் ஓ.பி.எஸ்-ஸைப் புறக்கணித்துவிட்டு அவர்கள் ஏதும் செய்ய முற்பட்டால், மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்படும். கட்சியின் பை லா படி, நீதிமன்ற உத்தரவுப்படி, தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படி இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மீண்டும் அ.தி.மு.க செல்வாக்குள்ள இயக்கமாக வரும்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் இ.பி.எஸ் ஆதரவாளருமான பாபு முருகவேலிடம் பேசினோம்..,

``நீதிமன்ற விவகாரங்கள் குறித்து நாம் எதுவும் கருத்துச் சொல்லமுடியாது. கட்சியில் ஒற்றைத் தலைமைக்கான தேவை என்ன, இரட்டைத் தலையால் ஏற்பட்ட பின்னடைவுகள், ஓ.பி.எஸ்-ஸுடன் ஏன் இணைந்து பயணிக்க முடியாது உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கான பதிலையும் எடப்பாடியார் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார். கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், 2,634 பொதுக்குழு உறுப்பினர்களில், 2585 உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை, அண்ணன் எடப்பாடியார்தான் வேண்டும் என கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கின்றனர்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

ஒற்றைத் தலைமைதான் காலத்தின் கட்டாயம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பிரசாரத்துகே ஓ.பி.எஸ் போகவில்லை. எடப்பாடியார் முதல்வராக நாம் ஏன் பிரசாரம் போகவேண்டும் என யோசித்ததாலேயே அவர் போகவில்லை. இது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு. அதனால், இனிமேல் அவருடன் இணைந்து பயணம் செய்வதற்கு வாய்ப்பேயில்லை'' என்கிறார்.