Published:Updated:

சாட்டை துரைமுருகன் கைது: `கருத்துச் சுதந்திரம்’ என நாம் தமிழர் முன்னிறுத்துவது சரியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்
கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்

சாட்டை துரைமுருகன் கைதை கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என நாம் தமிழர் கட்சியினரும் தனிமனிதத் தாக்குதலும் பெண்கள் குறித்தான அவதூறுப் பேச்சுகளும்தான் கருத்துச் சுதந்திரமா என தி.மு.க-வினர் பேசிவருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குறித்துத் தவறாகப் பேசியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் வெளியில் வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி, பாறைத்தூள் உள்ளிட்டவற்றைச் சட்ட விரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து, அக்டோபர் 10-ம் தேதி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய `சாட்டை’ துரைமுருகன், ``கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியதோடு, ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். துரைமுருகன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தி.மு.க அளித்த புகாரின் பேரில் கைதும் செய்யப்பட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன்

“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது” என நாம் தமிழர் அறிக்கை வெளியிட்டது. அதே நேரத்தில் “மிரட்டும் தொனியில், வன்முறைத் தூண்டுவது, சமூக அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது, தனிமனித தாக்குதல், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் கருத்துச் சுதந்திரமா என கடும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன... நாம் தமிழர் முன்னிறுத்தும் கருத்துச் சுதந்திரம் சரியா..?

தலைவர்கள் பற்றி அவதூறுப் பேச்சு; நாங்குநேரியில் தடுத்து நிறுத்தம் - சாட்டை துரைமுருகன் கைதான பின்னணி

நாம் தமிழர் முன்வைக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது சரியா என அக்கட்சியின் தலைமை நிலைச் செயலாளர் கு.செந்தில்குமாரிடம் பேசினோம்... “தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினரும் இதைவிட மோசமாகப் பேசியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் தி.மு.க-வினர் எப்படிப் பேசினார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஹெச்.ராஜா எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரியும். பிடி வாரண்ட் கொடுத்தும் இன்னும் ஹெச்.ராஜாவைத் தமிழ்நாடு காவல்துறை எதுவும் செய்யவில்லை. கோபத்தில் பேசும்போது சில வார்த்தைகள் வெளிப்படத்தான் செய்யும். அதற்காக, பேசி முடித்து ஆறு மணி நேரத்தில் துரை முருகன் மட்டும் கைது செய்யப்படுகிறார் என்றால் சட்டம் பாரபட்சத்தோடு இருக்கிறது என்பதுதானே இதன் பொருள். கருத்துச் சுதந்திரம் மட்டுமல்ல அனைத்துச் சுதந்திரங்களும் சட்டத்தின் இந்த பாரபட்சமான பார்வையால்தான் பறிக்கப்படுகின்றன. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கைது நடவடிக்கையின் மூலம் அச்சுறுத்துவது மட்டுமே அரசின் நோக்கமாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

கு.செந்தில்குமார்

நாம் தமிழர் தலைமை நிலைச் செயலாளர்
கு.செந்தில்குமார் நாம் தமிழர் தலைமை நிலைச் செயலாளர்

நாம் நினைப்பதைப் பேசுவது மட்டுமே இப்போது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரே சுதந்திரம். துரைமுருகன் பேசியதால் என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டது. எங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது. இல்லை காங்கிரஸ் கட்சியினர் மீதோ அதன் அலுவலகங்கள் மீதோ நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்களா?” எனக் கேள்வியை முன்வைத்தவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``துரைமுருகன் கைதுக்குப் பிறகும்கூட காங்கிரஸ் கட்சியினர் எங்களைத்தான் மிக மோசமான வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். இன்றைக்கு ஒரு சில வார்த்தைகளை எடுத்துக்காட்டித் தவறு நடந்திருக்கிறது எனப் புகார் சொல்லலாம். ஆனால், எதிர்காலத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லையென்றாலும் கூட நாம் தமிழர் கட்சியினர் கைதுசெய்யப்படலாம். ஒரு ரூபாய் காசு இல்லாமல் மக்கள் மீது, மண் மீது, சுற்றுச்சூழல் மீது அக்கறையைக் காட்டி 30 லட்சம் வாக்குகள் வாங்கிவிட்டோம் என்ற காழ்ப்புணர்ச்சிதான். இத்தனை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சிகள் பணம் கொடுக்காமல் தங்களின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டியதுதானே.

எச்.ராஜா
எச்.ராஜா

அ.தி.மு.க., தி.மு.க என யார் வந்தாலும் ஒரே மாதிரியான ஆட்சியைத்தான் தருவார்கள். சாராயக் கடை முதலாளிகளுக்கும், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும்தான் லாபம். நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றிவிடுவோம் என்ற அச்சம்தான் இந்த அடக்குமுறைகளுக்கு ஆதாரம்” என்றார்.

தி.மு.க குறித்தான விமர்சனங்கள் பற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், கவிஞர் மனுஷ்ய புத்திரனிடம் பேசினோம், “நாம் தமிழர் கட்சியைப் பார்த்து தி.மு.க காழ்ப்புணர்ச்சி கொள்கிறது என்பது சீமான் சொல்லும் ஆமைக் கதை, முதலைக் கதைகளைவிட மோசமானது. மிகப்பெரிய தலைவர்கள், இயக்கங்களை எதிர்கொண்டு அரசியல் செய்து வளர்ந்த கட்சி தி.மு.க. இதன் வரலாற்றின் பாதி கூட சீமானின் வயது இருக்காது. தமிழ்நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளில் சீமான் ஈடுபட்டிருக்கிறார். எதிர்க்கருத்துகளோடு விவாதித்து எது சரி, எது தவறு என்பதைப் பகுத்துப் பார்க்கும் திறனைப் பெரியார், அண்ணா, கலைஞர் என எங்களின் அனைத்துத் தலைவர்களும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எங்கள்மீது கடும் விமர்சனங்களும் அவதூறுகளும் பரப்பப்பட்டிருக்கின்றன. அவர்கள் அனைவரையுமா தமிழ்நாடு அரசு கைது செய்திருக்கிறது. முதலமைச்சரைப் பார்த்து கற்பனையாக, தரக்குறைவாகப் பேசுவது எப்படிக் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வரும். சீமானைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் எந்தக் கருத்தும் இருந்தது இல்லை. சமூக வலைத்தளங்களில் சுற்றும் இளைஞர்களைத் தன்பக்கம் ஈர்க்கும் விதமாகச் சொல்லும் கேவலமான கதைகள்தான் அவரிடம் இருக்கும் கருத்துகள்.

கவிஞர் மனுஷ்ய புத்திரன்

செய்தித்தொடர்பாளர் (தி.மு.க)
கவிஞர் மனுஷ்ய புத்திரன் செய்தித்தொடர்பாளர் (தி.மு.க)
Jerome

அரசியல் ரீதியிலான எந்த விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் தி.மு.க எப்போதும் பதிலளித்துக் கொண்டிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி கொலையை வைத்து எச்சரிக்கை விடுக்கிறீர்கள். நாம் தமிழர் கட்சிக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது” என்றவர்...

“சீமானுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, எப்படிக் கட்சி நடத்துகிறார். அதன் வரவு செலவு என்ன? யாருடைய அடியாளாக அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் சீமானின் நோக்கம் வெளிப்படும். எழுவர் விடுதலைக்காக தி.மு.க கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கும்போது இப்படியெல்லாம் பேசுவதன்மூலம் ஒன்றிய அரசின் கருத்தை வலுப்படுத்தி அவர்களின் விடுதலையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அ.தி.மு.க-வின் கையாளாக இருந்துகொண்டு தி.மு.க-வை எதிர்த்ததுபோல இப்போது ஒன்றிய அரசின், உளவுத்துறையின் கையாளாக இருந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் தனிமனிதனைத் தாக்கும் எல்லோர் மீதும் தி.மு.க அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். வரையறைக்குட்பட்டு தி.மு.க-வை என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்.

கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும் சீமான் உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பானை ஓராண்டாகச் சிறையில் அடைத்திருக்கிறது அம்மாநில அரசு. என்றைக்காக இதுகுறித்துப் பேசியிருப்பாரா? அந்தப் பத்திரிகையாளரின் பெயராவது அவருக்குத் தெரியுமா? ஆனால், ‘எங்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்’ என்று முதல்வரே சொல்கிறார். தன் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் தலைவராகப் பத்திரிகையாளராக, கருத்துச் சுதந்திரத்தின்மீது நம்பிக்கை உடையவராக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

சீமான்
சீமான்

தமிழ்நாட்டில் இருக்கும் ரெளடிகளை ஒடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் நாம் தமிழர் கட்சியினரைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் தி.மு.க-காரனாகவே இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சீமான் போன்றவர்கள் அ.தி.மு.க ஆட்சியிலிருந்ததுபோல இப்போதும் குளிர் காயலாம் என நினைத்தால் அது நடக்காது” என விமர்சனங்களுக்கு விடையளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு