சமீபகாலமாக, தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. கொரோனா பேரிடர் சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டிருந்ததால், டெல்லியில் காற்று மாசு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், மீண்டும் காற்று மாசு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லியில், காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியில்லாத அளவுக்கு மாசடைந்து காணப்படுகிறது. டெல்லியின் பல்வேறு இடங்களிலும் காற்றின் தரக்குறியீடு AQI 400-க்கும் அதிகமாக இருக்கிறது.

காற்று மாசு காரணமாக டெல்லியில் தீபாவளி பண்டிகைக்குப் பட்டாசு வெடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், தடையை மீறி சில இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டது. மேலும், டெல்லியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில், விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு வேளாண் கழிவுகளைத் தீவைத்து எரித்துவருவதாலும், காற்று மாசு அதிகரித்திருக்கிறது. தலைநகரில் காற்று மாசை, தண்ணீர் தெளித்துக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருந்தபோதிலும், கடந்த மூன்று தினங்களாகக் காற்று மாசின் அளவு அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.
டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ``காற்று மாசைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று மாசு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், பொதுமுடக்கத்தை அமல்படுத்துங்கள்" என்று கூறினார்கள்.

மேலும், `` இந்தக் காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது மட்டுமே காரணம் இல்லை. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், வாகனப் போக்குவரத்து போன்ற முக்கியக் காரணங்களும் உண்டு. வேளாண் பயிர்க்கழிவுகள் எரிப்பைப் பொறுத்தவரை, இரண்டு மாதங்களைத் தவிர அதிகம் இல்லை. இருந்தபோதிலும் தற்போது, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிக அளவில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. அவற்றை இரண்டு வாரங்களுக்கு எரிக்க வேண்டாம் என்று அரசு, விவசாயிகளை வலியுறுத்த வேண்டும். ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிப்பது தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும். மேலும், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உடனடியாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ``டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் பயிர்களை எரிப்பது முக்கியக் காரணமில்லை என்ற மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், டெல்லி காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது 10 சதவிகிதம்தான் காரணம். வாகன தூசு, தொழிற்சாலை, கட்டுமானப் பணி, மின்சாரம் போன்றவைதான் மாசுபாட்டுக்கு மிக முக்கியக் காரணங்கள்" என்று தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று தாங்கள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இன்று நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ``டெல்லியில், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும். மேலும், வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். டெல்லி புறநகர் ஒட்டிய பகுதிகளில் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிக்கக் கூடாது" என்று டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.