ஒரு மகாபாரதக் கதை... நிடத நாட்டின் அரசன் நளன். அவனது உறவினன் புஷ்கரன். அவன், நிடத நாட்டுக்கு உட்பட்ட ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்டு வருகிறான். புஷ்கரனுக்கு ஆரம்பத்தில் இருந்தே நளன் ராஜ்ஜியத்தின் மீது ஒரு கண்ணல்ல, இரண்டு கண்களுமே. அதனால், நளனை வீழ்த்துவதற்கு தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான். ஆனால், நளனுக்கு புஷ்கரன் மீது அளவுகடந்த பாசம். அவனுக்காக எதையும் செய்வான்.

நளனின் வாழ்க்கையில் விதி விளையாடியது. புஷ்கரனை நளனுக்கெதிரான ஆயுதமாக மாற்றுகிறார்கள், வடவரசர்கள் சிலர். நளன் மீது புஷ்கரன் கொண்டிருக்கும் பகையை ஊதிப் பெருக்கி, ‘நாங்கள் இருக்கிறோம்... அவன் ராஜ்ஜியத்தின் மீது போர் அறிவிப்பு செய்..’ என்று தூண்டுகிறார்கள். புஷ்கரனும் அப்படியே செய்கிறான். நளன் உடைகிறான். ‘எதுவாயினும் நமக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்வோம். அந்நியர்களை இதில் அனுமதிக்காதே. அது நம்குடிக்கு தீங்கென்றே முடியும்’ என்று தூது விடுகிறான். புஷ்கரன் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. நளனே நேரடியாக சமாதானம் பேசப்போக, அங்கே அவன் அவமதிக்கப்படுகிறான். ஆனாலும், அவன் கோபம் கொள்வதில்லை. ‘எப்போதும் என் மனத்துக்கு உகந்த இளவல் நீ...’ என்று சொல்லி மீள்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநளன், அமைச்சரவை கூட்டி ஆலோசிக்கிறான். அமைச்சர்கள், ‘அரசே... அவனுக்குப் பின்னால் வடவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கையில் அவன் கைப்பாவையெனச் சுழல்கிறான்’ என்று சொல்கிறார்கள். நளன், ‘அதுதான் என் அச்சமும். அவனுக்கு நாட்டை அளிப்பதில் எனக்கு எந்தத் தாழ்வும் இல்லை. இது நம் நிலம். நான் ஆண்டால் என்ன, என் இளவல் ஆண்டால் என்ன...’ என்று சொல்கிறான். ‘ஆனால், இப்போதைய நிலையில் அவர் கைகளுக்கு அரசு செல்வது அந்நியர் கைகளுக்கு அரசு செல்வதேதான்...’ என்பது அமைச்சர்களின் கருத்தாக இருக்கிறது. நளனும் அதை உணர்கிறான். ‘ஆனால், அவனது முதிராமனம் அதை உணர மறுக்கிறதே’ என்று வேதனைப்படுகிறான். அமைச்சர்கள், ‘அவர் விரும்புவது இந்நிலத்தைக்கூட அல்ல. உங்களின் வீழ்ச்சியை...’ என்று சொல்கிறார்கள். ‘ஆம், அதை நான் அறிவேன்’ என்று சொல்லி எழும் நளன், ‘நமக்குள் நாமே போரிட்டு அழிவதை நான் விரும்பவில்லை. நிகரிப்போருக்கு உடன்படுகிறேன்’ என்று அறிவிக்கிறான்.

நிகரிப்போர் நடக்கிறது. அதாவது, நாற்கள ஆட்டம்! நளன் சுதாரிப்பதற்குள், அனைத்தும் கைவிட்டுப்போனது. எதிராடிய புஷ்கரன், எக்களித்துச் சிரித்து, சிறிதும் தாமதிக்காமல் அரியணை ஏறுகிறான். நளனையும் அவன் துணைவி தமயந்தியையும் காட்டுக்கு அனுப்ப முடிவெடுக்கிறான். ‘உடன் உடமையென எதையும் கொண்டுசெல்லக் கூடாது’ என்றும் ஆணையிடுகிறான். நளனின் பிள்ளைகளையும் ‘அடிமைகள்’ என அறிவிப்பு செய்கிறார். ஒரு முதியவர் அவையெழுந்து, ‘எதற்காக இதெல்லாம்...’ என்று புஷ்கரனைக் கேட்கிறார். அவன் ஒரே வரியில் பதில் சொல்கிறான், ‘இது வஞ்சம்’!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவ்வளவு நீளமான கதை எதற்கு? காரணமிருக்கிறது. ஆந்திரத்தில், ’பிரஜா வேதிகா’ கட்டடத்தை இடித்து, சந்திரபாபுவை வீட்டைவிட்டு வெளியேற்றி, புஷ்கரவேடம் பூண்டிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. விந்தை என்னவென்றால், 2010 - 12-க்குப்பின், நளனைப் போலவே நிர்க்கதியாக நிறுத்தப்பட்டிருந்தார் ஜெகன். ‘பாவம்... பையன் நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறான். அவனை ஜெயிக்க வைப்போம்’ என்று ஆந்திர மக்கள் முடிவெடுத்தார்கள். இதோ... இப்போது ஜெகன் ஆந்திரா முதல்வர். இப்போதல்ல, 2014-ம் ஆண்டிலேயே ஜெகனுக்கு 44.5 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கக் காரணமும்கூட, அதே ‘நள சிம்பதி’ தான். ஆனால், நளன் வேடம் ஜெகனுக்கு போரடித்துவிட்டதுபோல. புஷ்கரனாக புறப்பட்டிருக்கிறார்.

’பிரஜா வேதிகா’ அரசு கட்டடம். கிருஷ்ணா நதிக்கரையில் உண்டேவளி எனும் பகுதியில் அமைந்திருந்தது அது. ஆந்திரத் தலைநகர் அமராவதியில் முதன்முதலாகக் கட்டப்பட்ட கட்டுமானம் அதுதான். ஆக, சந்திரபாபு கட்டிய கட்டடத்தை மட்டுமல்ல, ஒரு வரலாற்றையும் சேர்த்தே இடித்திருக்கிறார் ஜெகன். கடந்த மாதம், அதிகாரிகள் புடைசூழ புல்டோசரின் ராட்சசக்கரங்கள் அதைத்தீண்டியபோது, ஜெகனின் ஆதரவாளர்களே கண் திருப்பினர். ’இதை அரசே வேறு பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாமே’ என்று எழுந்த குரல்கள், இடிபுழுதியில் கரைந்துபோயின. 10 கோடி ரூபாய் கட்டடம், மொத்தமாய் நொறுக்கப்பட்டது.
’பிரஜா வேதிகா கட்டடம், ஆற்றுப்பரப்பில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் அமைந்திருக்கிறது. இது, சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பானது. எனவே, இடிக்கிறோம்’ என்று காரணம் சொன்னது, சி.ஆர்.டி.ஏ (Capital Region Development Authority). அதே சி.ஆர்.டி.ஏ தான் சில மாதங்களுக்கு முன்னால் ’என்னது விதிமீறலா... அப்படி எதுவும் இல்லையே’ என்றும் சொன்னது. ஆட்சி மாற காட்சியும் மாறிவிட்டது!

பிரஜா வேதிகாவின் அருகில்தான் சந்திராபாபுவின் வீடும் இருக்கிறது. அது, குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீடு. ’லிங்காமனேனி’ எனும் தனியார் நிறுவனம் கட்டிய வீடு அது. அலுவல் வசதிக்காக அங்கே குடியேறியிருந்தார் சந்திரபாபு நாயுடு. அதையும் இடித்துத்தள்ள நேரம் குறித்திருக்கிறார், ஜெகன். காரணம், பிரஜா வேதிகாவுக்கு சொல்லப்பட்ட அதே விதிமீறல்தான். சந்திரபாபு கனிவோடு கடிதம் எழுதியும் பணியவில்லை ஜெகன். விஜயவாடா பக்கம் வீடு தேடிக்கொண்டிருக்கிறார் நாயுடு. தேர்தல் முடிவுகளுக்கு முன்னால், ‘எவர் மீதும் எனக்கு பழியுணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லை’ என்று பேட்டி கொடுத்தார் ஜெகன். அதை அவருக்கு நினைவுபடுத்தவேண்டிய அவசியத்தை, அவரே ஏற்படுத்திவிட்டார். It's unfortunate!
‘ஏன் பிரஜா வேதிகா மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா... கிருஷ்ணா நதிக்கரையில் எத்தனையோ சொகுசு விடுதிகள், விதிமீறல் புகார்களுக்கு ஆளாகியிருக்கின்றன. சச்சிதானந்தா ஆசிரமம், இஸ்கான், காகதியா அகுவா டெக், பிரகுருதி ஆசிரமம் என ஏகப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் அங்கு இருக்கின்றன. அதையெல்லாம் எப்போது இடிக்கப்போகிறீர்கள் ஜெகன்?’ என்று கேட்கிறார்கள் ஆந்திர இளைஞர்கள். ஆம், கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகாவைத் தவிர்த்து, 60-க்கும் அதிகமான கட்டடங்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றன.

முன்னாள் பாஜ.க எம்.பி கோகராஜூ கங்கா ராஜூவுக்கு சொந்தமான கட்டடங்கள்கூட உண்டேவளி பகுதியில் நிறைய உண்டு. இதையெல்லாம் இடிப்பதற்கான எந்த அறிகுறியையும் ஜெகன் அரசு இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஆனால், சந்திரபாபு கட்டிய கட்டடத்தை இடித்தாகிவிட்டது, சந்திரபாபுவின் வீட்டை இடிக்கவும் தேதி குறித்தாகிவிட்டது. தெலுங்குதேசம் கட்சியின் மாநிலத்தலைவர் காலா வெங்கட் ராவ் சமீபத்தில் மனமுடைந்து சொன்ன வார்த்தை இது... ‘எங்கள் பொருளை எடுப்பதற்கு அவகாசம் கேட்டோம். அதுவும் வழங்கப்படவில்லை’. உறுதியாகிவிட்டது, ஜெகன் ‘புஷ்கரன்’ ஆகிவிட்டார்!
இது மட்டுமல்ல. ஆந்திரத்தின் பல இடங்களில் ஒய்.எஸ்.ஆரின் சிலைகளும், ஒய்.எஸ்.ஆர் பவன்களும் கூட ஆக்கிரமிப்பு புகார்களில் சிக்கியவைதான். சந்திரபாபு இதையெல்லாம் சட்டமன்றத்திலேயே கேள்வியாகக்கேட்டார். ஆனால், புஷ்கரனிடம் இருந்து ஒரு புன்முறுவல் மட்டுமே பதிலாகக் கிடைத்தது. இன்னொரு விஷயம். இப்போது ஜெகன் இடிக்கக் காத்திருக்கும் ’லிங்கமனேனி’ வீட்டுக்கு அனுமதி அளித்தது சந்திரபாபு அரசு அல்ல, ராஜசேகர ரெட்டியின் அரசு. 2007-ம் ஆண்டே கட்டப்பட்டுவிட்டது அந்தக் கட்டடம். அதுகுறித்து வாய் திறக்க மறுக்கிறார் ஜெகன்.
விசாகப்பட்டினத்தில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகத்துக்கும்கூட நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார், ஜெகன். நகராட்சி நிர்வாகம் அனுப்பிய அந்த நோட்டீஸில் இருக்கும் வரிகள் இவை... ‘கட்டட ஆவணங்களை ஏழு நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க மறுத்தால், கட்டடம் இடிக்கப்படும்’. எப்படியிருக்கிறது இது! விசாகப்பட்டினத்தில் ஆயிரம் கட்டடங்கள் இருக்க, சரியாக தெலுங்கு தேசத்தின் கட்சி அலுவலகம் மட்டும் ஜெகனின் கண்களுக்குத் தெரிவது எப்படியென்றுதான் தெரியவில்லை.
ஒன்று தெரியுமா... ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு இணையாகவே ஜெகனின் குடும்பத்துக்கும் சொத்து இருக்கிறது. நாயுடுவைவிட அதிகமாகவே சொத்து வைத்திருக்கிறார், ஜெகன். சந்திரபாபு குடும்பம் ’ஹெரிடேஜ்’ நடத்துகிறது என்றால், ஜெகன் குடும்பம் ’பாரதி சிமென்ட்ஸ்’ நடத்துகிறது. சும்மா சொல்லவில்லை. ஜெகன் மீது இப்போதும் 31 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதில், சொத்துக்குவிப்பு வழக்குகளே அதிகம். இன்றும், ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை போய்க்கொண்டுதானிருக்கிறது. தென்னிந்திய அரசியலில், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கு ஜெகனுடையது என்பது பதிவு செய்யப்பட்ட செய்தி.

இந்த ஆண்டு மார்ச் 22-ம் தேதி, ஜெகன் மோகன் ரெட்டி தனது சொத்துக்கணக்கு விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். அந்த நாள், திருப்பதி பெருமானே ஜெகனை ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்த நாள். தொகை எவ்வளவு தெரியுமா... 510 கோடி ரூபாய்! அதே, 2014-ம் ஆண்டு தேர்தலின் போது, அவர் தாக்கல்செய்த பத்திரத்தில் சொல்லியிருந்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. 416 கோடி ரூபாய்! கணக்கிட்டுப் பார்க்கவும். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் அளவுக்கு அவரது சொத்துமதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் உயர்ந்திருக்கிறது. இதற்கு ஜெகன் குறிப்பிட்டிருக்கும் தொழில்கள் என்னென்ன தெரியுமா... அரசியல் மற்றும் மக்கள் சேவை (Politics and Public service) மட்டுமே.
தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும்போது ஹைதராபாத்தில் இருந்து தாதேபள்ளியில் வீடுகட்டி குடியேறினார், ஜெகன். அதை வீடு என்று சொன்னால் ஆந்திராவில் அடிப்பார்கள். அது அரண்மனை! 'Palatial House’ என்றே அதை வர்ணிக்கின்றன ஊடகங்கள். ஜெகனின் ஹைதராபாத் இல்லமும்கூட அரண்மனைதான். ஜெகனுக்கு பெங்களூருவிலும் ஓர் அரண்மனை இருக்கிறது. பக்கிங்ஹாம் அரண்மனையையே ‘வர்ரீயா சண்டைக்கு...’ என சவால் விடுக்கும் அளவுக்கு பெரியது அது. ’இரண்டு கிரிக்கெட் மைதானங்களின் அளவு கொண்டது அது’ என்று விளையாட்டாகச் சொல்வார்கள். இவைகளின் மொத்த மதிப்பே, 500 கோடியைத்தொடும் என்பது கணக்கு.

வேறு வேறு பெயர்களில் கம்பெனிகளைத் தொடங்குவது, ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு நிதியைப் பரிமாற்றம் செய்வது என, பண ஆட்டத்தில் ’பயங்கரன்’ ஜெகன். ஆந்திராவில் முக்கிய சேனலாக இருக்கும் ’சாக்ஷி’ ஜெகனுக்கு சொந்தமானதுதான். அது, கட்சித் தொலைக்காட்சி அல்ல. அதாவது, அந்தத் தொலைக்காட்சியை 2008-ம் ஆண்டே தொடங்கிவிட்டார் ஜெகன். இவ்வளவுக்கும், 2002-ம் ஆண்டு ஜெகனிடம் இருந்த சொத்துமதிப்பு வெறும் 9 லட்சம் ரூபாய் மட்டுமே!
இப்படிப்பட்ட ஜெகன்தான், ‘ஆந்திரத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். எப்படிப்பட்ட முரண் இது! 2012-ம் ஆண்டு, இந்தியாவின் பணக்கார வேட்பாளராக ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர் அறிவிக்கப்பட்டார். அவர் சந்திரபாபு நாயுடு இல்லை, ஜெகன் மோகன் ரெட்டி! உண்மையில், ஜெகன் நடத்திவருவது ஆந்திரத்தின் காங்கிரஸ் கட்சியை. 2009-ம் ஆண்டு வாக்கில் காங்கிரஸில் இருந்த அத்தனை ஊழல் பெருமக்களும் ஜெகன் பின்னால் அணிதிரண்டார்கள். அவர்களே இப்போது மக்கள் மன்றத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களின் ஊழல் வலைப்பின்னல் எவ்வளவு பயங்கரமானது என்பதை நாடே அறியும். ஆகவே, அதைத் தனியாக விளக்கவேண்டியதில்லை.

ஒருவேளை, ’என் வெற்றி எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்’ என்று ஜெகன் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், நீதிக்கு வெற்றி தோல்விகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ’சரியா... தப்பா...’ அதுவே பொருட்டு! ஜெயலலிதாவை மக்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வைத்தார்கள். ஆனால், அவர் மீதான ஊழல் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதா என்ன?! ஆகவே, ஜெகன் ஊழல் ஒழிப்பை தொடங்கவேண்டியது நாயுடுவிடம் இருந்து அல்ல, தன்னிடம் இருந்து தனது சகாக்களிடம் இருந்து! திருடியவனே ‘அதோ ஓடுகிறான் திருடன்...’ என்று கூவித் தப்பிப்பது கதைக்கு வேண்டுமானால் சரியாக வரும், நிஜத்தில் சரிவராது!
சந்திரபாபு அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் எத்தனித்திருக்கிறார், ஜெகன். ’சந்திரபாபு அரசு விலையை அதிகமாக வைத்து ஒப்பந்தம் போட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இப்படியில்லை. இதனால், 2636 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்று காரணம் சொல்கிறார், ஜெகன். கிட்டத்தட்ட மினி ’2ஜி’ வகையறா குற்றச்சாட்டுதான் இது. ஆனால் சந்திரபாபு, ‘ As per the central regularities...' என்று ஒரே அடி அடியாக அடித்தார். அடுத்த ஏழாம் நாள் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் இருந்து ஜெகனுக்கு கடிதம் வந்தது.

அதில், ’இது என்ன விளையாட்டென நினைத்தீர்களா... சூரிய சக்தி, காற்றாலைகளின் மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக்கூடியது. அந்த மாநிலங்களின் சுற்றுச்சூழல் அதில் முக்கியப்பங்கு வகிக்கும். ஆக, ஒரு மாநிலத்தின் ஒப்பந்தத் தொகையை இன்னொரு மாநிலத்தோடு ஒப்பிடுவதே அபத்தம். எனவே, உடனே மின் ஒப்பந்த ரத்து நடவடிக்கையை நிறுத்துங்கள்’ என்று தெளிவாகச் சொன்னார். ‘வெறும் குற்றச்சாட்டுகளை வைத்து மட்டுமே ஒரு நடவடிக்கையை நியாயப்படுத்திவிட முடியாது. ஆதாரங்கள் வேண்டும்’ என்பதும் அவர் வார்த்தையே. ஜெகனுக்கு இதெல்லாம் ஏற்கெனவே தெரியும். ஏனென்றால், அவரது தொழில்வாழ்க்கை ஆரம்பித்ததே மின்சாரத்துறையில்தான். சந்தூர் பவர், சரஸ்வதி பவர் என, ஆந்திரத்தின் உண்மையான ‘பவர் ஸ்டாராக’ வலம்வந்தவர் ஜெகன். ஆக, ஜெகனுக்கு நாடு மீது பற்றில்லை. நாயுடு மீது காண்டு!
நரா லோகேஷூக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் குறைத்திருக்கிறார், ஜெகன். இதை எவரும் விமர்சிக்கவில்லை. ஆனால், சந்திரபாபுவின் பாதுகாப்பையும் அவர் சேர்த்து குறைத்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆயிரம் இருந்தாலும், சந்திரபாபு ஆந்திரத்தை 14 ஆண்டுகள் ஆண்ட மூத்த தலைவர். ஒருங்கிணைந்த ஆந்திரத்தையே ஒன்பது ஆண்டுகள் வரை ஆட்சிசெய்தவர். அதுவும் இல்லாமல், ஏற்கெனவே அவர் மீது 2003-ம் ஆண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவரின் பாதுகாப்பைக் குறைத்து ஜெகன் அடையப்போவதென்ன என்றுதான் தெரியவில்லை. மீண்டும் அதே ‘புஷ்கரன்’ உதாரணத்தை பொருத்திப்பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஆந்திர அரசியலை கொரட்டாலா சிவா எடுக்கும் சினிமா படம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் ஜெகன். அமராவதி அவருக்கு ராமோஜி ராவ் திரைப்பட நகரமாகத் தெரிகிறது போல. ஆகையால்தான், ‘ஆறுமாதத்துக்குள் ஆந்திரத்தை மாற்றிக் காட்டுவேன். ஒரு வருடத்துக்குள் சிறந்த முதலமைச்சராக விருது வாங்குவேன்’ என்று கனவுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நடைமுறை என்று ஒன்றிருக்கிறது. அதை ஒரு ஆட்சியாளன் கருத்தில் கொள்ளாவிட்டால், விளைவுகள் விபரீதமானதாக இருக்கும்.
சமீபத்தில் ஒரு சங்கதி... ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததுதான் தாமதம், ’ஆஹா ஓஹோ’ என்று புகழ ஆரம்பித்துவிட்டார்கள் ஜெகன் கட்சிக்காரர்கள். ’அது என்ன, அதன் விளைவுகள் எப்படியிருக்கும்’ என்பதை ஆராயக்கூட அவர்கள் தயாராக இல்லை. ஆனால், சந்திரபாபு ‘அரசியலமைப்பை மாற்றுவது சம்பந்தமான எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக்கூடாது. முறையாக விவாதிக்க வேண்டும்’ என்று கருத்து சொன்னார். சட்டமன்ற முதல் கூட்டத்தில் ஜெகன் கேட்ட, ‘நாற்பதாண்டு அரசியல் அனுபவம் இருந்து என்ன பயன்’ என்ற கேள்விக்கு, சந்திரபாபு அந்த ஒற்றைக்கருத்தில் பதில் சொல்லிவிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக ஜெகன் இருந்தபோது, அவர் பேசிய பேச்சுக்கு அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் சுருட்டி எறிந்திருக்கமுடியும். ஆனால், ‘உன்னை மன்னிக்கிறேன். உனக்காக அல்ல, உன் அப்பாவுக்காக’ என்று கடந்துசெல்கிறார் நாயுடு. ஏனென்றால், 1980-களில் ராஜசேகர ரெட்டியும் சந்திரபாபுவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து களமாடிய நண்பர்கள். இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவர்களின் நட்பு இருந்தது. அதனால்தான், ஜெகனை மன்னித்தார். இந்தப் பண்பால் மட்டுமே, அவர் ‘நளன்’ ஆகிறார்!
அது சரி... அந்தக் கதையில் புஷ்கரன் என்ன ஆனான்? நளன் நாடு மீண்டான். புஷ்கரனை தோற்கடித்து மக்களிடம் அளித்துவிட்டான். அவர்கள் அவனை அடித்து விரட்டிவிட்டார்கள்!
இந்தக் கட்டுரையின் 'நளன்' 1990களில் செம்ம டெரர். 1995ம் ஆண்டு ஒரு 'கூவத்தூர்' ஸ்டைல் சம்பவம் ஆந்திராவில் நடந்தபோது ஜூனியர் விகடன் டீம் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தது அப்போது அவர் நம்மிடம் இப்படிச் சொன்னார்!

"தமிழ்ப் பத்திரிகையா? போங்கள்..... போய் எழுதுங்கள். தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர் பெயர் ராமாராவ் இல்லை! டிராமாராவ். அவரும் அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து கொண்டு கண்ணீர்விட்டு அழுது 'டிராமா' நடத்தி ஆட்சியையும் மக்களையும் தங்கள் பக்கம் நிறுத்தி வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இனிமேல் அது எடுபடாது என்று எழுதுங்கள்!"
உண்மையில் அன்று என்ன நடந்தது? ரஜினிக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒரு செம்ம பொலிட்டிக்கல் த்ரில்லர் உங்களுக்காக APPAPPO ஆப்ல வெயிட்டிங்! இன்ஸ்டால் பண்ணி ஃப்ரீயாவே படிங்க... உங்க ஹோம்பேஜ்ல இப்பவே அந்த த்ரில்லர் ரெடியா இருக்கு!
இங்க க்ளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க... APPAPPO! -> http://bit.ly/DramaRao1995