Published:Updated:

குட்பை டு காஷ்மீர்: கவர்னர் ஆலோசகர்கள் விஜயகுமார், ஸ்கந்தன் திடீர் ராஜினாமா?

விஜயகுமார்
விஜயகுமார்

காஷ்மீர் மாநில கவர்னரின் அட்வைஸரான விஜயகுமார், அடுத்த துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரைப் போலவே, ஸ்கந்தன் பெயரும் அடிப்பட்டது. ஆனால், புதியவர்கள் இருவரைத் துணைநிலை கவர்னர்களாக பிரதமர் மோடி நியமித்துவிட்டார். அதனால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15 -ம் தேதியன்று, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கவர்னராக சத்ய பால் மாலிக் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசகர்களாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஸ்கந்தன், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் என ஐந்து பேர் பதவி ஏற்றனர். கவர்னர் மாலிக் முதல்வர் போலவும், ஐந்து ஆலோசகர்கள் அரசுத் துறைகளின் அமைச்சர்கள் போலவும் செயல்பட்டுவந்தனர். மொத்தமுள்ள அரசுத்துறைகளை ஐவரும் பிரித்துக்கொண்டு நிர்வாகப் பணியைக் கவனித்துவந்தனர்.

விஜயகுமார்
விஜயகுமார்

இவர்களின் பதவிக் காலம், வருகிற அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது. கவர்னர் ஆட்சி முடிந்து நவம்பர் 1-ம் தேதி துணைநிலை கவர்னர் இருவர் புதிதாகப் பதவியேற்க உள்ளனர். அதையொட்டி, அக்டோபர் 26-ம் தேதியன்று, மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. தற்போதைய ஜம்மு -காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக், கோவா மாநில கவர்னராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நவம்பர் 1-ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை கவர்னராக கிரீஷ் சந்திர முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை கவர்னராக ஆர்.கே. மாத்தூர் ஆகிய இருவரை அறிவித்துள்ளது. இந்த இருவரும், அடுத்த சில நாள்களில் புதிய பதவிப்பிரமாணம் செய்துகொள்ளத் தயாராகி வருகிறார்கள்.

ஸ்கந்தன்
ஸ்கந்தன்

காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பான விவகாரங்களை விஜயகுமார் கவனித்துக்கொண்டார். அதுதொடர்பாக, மத்திய அரசின் உள்துறைக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில ராணுவம், துணை ராணுவப்படை, மாநில போலீஸ் ஆகியவற்றுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டார். குண்டு துளைக்காத கார், ஜாமர் பொருத்தப்பட்ட வாகனங்களில் முக்கியமான ஊர்களுக்கு விசிட் போய், அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு அட்வைஸ் வழங்கி வந்தார். ஏற்கெனவே, மூன்று வருடங்கள் (1998 - 2001) எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜி-யாக காஷ்மீரில் பணியாற்றியவர். சிஆர்பிஎஃப் தலைவராகப் பணியில் இருந்தவர். எஸ்.பி.ஜி என்று அழைக்கப்படும் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட விவிஐபி-கள் செக்யூரிட்டி பிரிவில் பணியாற்றியவர். மத்திய உள்துறையின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸராகவும் பணிபுரிந்தவர்.

விஜயகுமாரைப் போலவே ஸ்கந்தனும் அனுபவசாலிதான்!

தமிழக அரசுப் பணியிலிருந்து மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். அப்போது இணைச் செயலாளர் அந்தஸ்தில் காஷ்மீர் நிர்வாகத்தை டெல்லியில் இருந்தபடி பல ஆண்டுகள் கவனித்து வந்தவர். அந்த வகையில்தான், இவரை அட்வைஸர் பதவிக்குத் தகுதியானவர் என்று சீர்தூக்கிப்பார்த்து நியமித்தனர். பதவி ஏற்ற பிறகு, ஸ்ரீநகரிலும் ஜம்முவிலும் சமீபத்தில் மின்சாரத்தில் ஓடும் 40 அரசு பஸ்களைத் தொடங்கிவைத்தார். மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவை நீக்கும் ஆவணத்தில், மாநில சட்டத்துறையைத் தற்போது நிர்வகிப்பவர் என்கிற வகையில் இவர்தான் கையெழுத்திட்டார். 100-க்கும் மேலான சட்டத் திருத்தங்களைச் செய்திருக்கிறார்.

ஸ்கந்தன்
ஸ்கந்தன்
முன்பெல்லாம் அரசு நிலங்களைப் பொது மக்கள் உபயோகத்துக்குக் கொடுத்தால், அது தொடர்பான ஃபைல் கேபினெட்டுக்கு வரும். பிறகு, டெல்லிக்குப் போகும். அதையெல்லாம் மாற்றி, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். மின்கம்பம், பஸ் ஸ்டாண்டு, அரசுப் பள்ளி... எதுவானாலும், ஃபைல் ஓகே ஆகி வரவே நீண்ட காலம் ஆகுமாம்.

இது தேவையில்லை என்று தீர்மானித்த ஸ்கந்தன் எடுத்த நடவடிக்கை, ஜம்மு-காஷ்மீர் அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த இருவர் தவிர மற்ற மூவரும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவரவர் துறைகளில் எந்தெந்த திட்டங்களை அமல்படுத்தலாம் என்கிற ரிப்போர்ட்டை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இப்படி சுறுசுறுப்பாகச் செயல்பட்ட ஐவரில், இருவரைத் துணை நிலை கவர்னராகப் பிரதமர் மோடி நியமிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. ஆனால் ஐவரையும் தூக்கியடித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்த இருவரை நியமித்துவிட்டார்.

Meeting
Meeting

இதுபற்றி காஷ்மீரில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஒரு மாநிலமாக செயல்பட்டபோது கவர்னர் இருந்தார். அவருக்கு அட்வைஸ் வழங்க ஐந்துபேர் நியமிக்கப்பட்டடனர். இப்போது, இரண்டு யூனியன் பிரதேசமாகச் சுருங்கிவிட்டது. இவற்றுக்கு அட்வைஸர் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. ஐவரும் பதவியில் இருந்த காலகட்டத்தில், நிறைய வளர்ச்சித் திட்டங்களுக்கான ஐடியாக்களைக் கொடுத்துள்ளனர். சட்டத் திருத்தங்களையும் செய்துவிட்டனர். புதியதாகப் பதவி ஏற்பவர்கள், பழையவர்களின் ஐடியாக்களை செயல்படுத்துவதான் வேலை. அதிலும் விஜயகுமார், இனி துணை நிலை கவர்னர் லெவலில் உள்ள இருவரிடம் போய் ரிப்போர்ட் பண்ணுவதை விரும்பவில்லை. அவரைப்போலவே ஸ்கந்தனும், அவரைவிட ஜூனியரான ஐஏஎஸ் அதிகாரி முர்முவின் கீழ் பணியாற்றுவதை விரும்பவில்லை. மற்ற மூன்று அட்வைஸர்களும் இதே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். புதியவர்கள் பதவி ஏற்கும் வரை இருந்துவிட்டு, அட்வைஸர்கள் ஐவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். ஒருவேளை பிரதமர் மோடி விரும்பினால், ஐவரில் யாரையாவது மத்திய அரசின் சிறப்பு அட்வைஸர்களாக நியமித்து, காஷ்மீர் விவகாரங்களை ஸ்பெஷல் அசைன்மென்ட்டாக கவனிக்கச் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

விஜயகுமார்
விஜயகுமார்

இதற்கு முன்பு, விஜயகுமாருக்கு சீனியர் செக்யூரிட்டி அட்வைஸர் (மாவோயிஸ்ட்) என்கிற அசைன்மென்ட்டை கொடுத்திருந்தார் பிரதமர் மோடி. அதைப்போல, இப்போது மத்திய உள்துறையின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸர் (தீவிரவாதம்) என்கிற புதிய பதவியில் விஜயகுமார் நியமிக்கப்படலாம். அதேபோல், காஷ்மீர் மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுசேர்க்கும் மத்திய அரசின் முக்கிய துறைகளுக்கான சிறப்பு அட்வைஸர் என்கிற பேனரில் ஸ்கந்தன் அல்லது மற்ற மூன்று அட்வைஸர்களில் யாரையாவது நியமிக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதொடர்பான தீவிர ஆலோசனையில் பிரதமர் மோடி இருக்கிறாராம். ஆனால், 'ஐந்து பேர்களில் ஒவ்வொருவரிடம் கேளுங்கள்! டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு பணிபுரியும் மத்திய அரசின் புதிய பதவியை ஏற்க விருப்பம் உண்டா?’ என்று தான் அறிய விரும்புவதாக, பிரதமர் மோடி தனது சகாக்களிடம் கேட்டிருக்கிறாராம். இவர்களின் பதிலைப் பொறுத்து பிரதமர் முடிவுசெய்வார்" என்கிறார்.

யார் யாருக்கு என்னென்ன துறைகள்?

விஜயகுமார்
விஜயகுமார்

1. விஜயகுமார் (ஐபிஎஸ் ரிட்டயர்டு. தமிழ்நாடு கேடர்): உள்துறை. வனம், சுகாதாரம், சிவில் ஏவியேஷன் உள்ளிட்ட 10 துறைகள்.

2. ஸ்கந்தன் (ஐஏஎஸ் ரிட்டயர்டு. தமிழ்நாடு கேடர்): சட்டம் மற்றும் நீதித்துறை நிர்வாகம், பாராளுமன்ற விவகாரங்கள், தொழில் மற்றும் வணிகத்துறை, ஐ.டி, வருவாய்த்துறை, லடாக் விவகாரங்கள், போக்குவரத்துத்துறை, இயற்கைப் பேரழிவு நிர்வாகத்துறை போன்றவை உள்ளிட்ட 10 துறைகள்.

3. கே.கே. சர்மா (ஐஏஎஸ் ரிட்டயர்டு ஜம்மு-காஷ்மீர் கேடர்): பொதுப்பணித்துறை, மின்துறை, நிதித்துறை, வீட்டு வசதி, வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, அறிவியல் மற்றும் டெக்னாலஜி போன்ற துறைகள்.

4. குர்ஷித் கனாய் (ஐஏஎஸ் ரிட்டயர்டு. ஜம்மு-காஷ்மீர் கேடர்): உயர் கல்வி, உணவு, சிவில் சப்ளைஸ், கூட்டுறவு, டூரிஸம், தேர்தல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகள்.

5. பாரூக் கான் (ஐபிஎஸ் ரிட்டயர்டு. ஜம்மு-காஷ்மீர் கேடர்): பள்ளிக்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, பழங்குடியினர் விவகாரம், கலாசாரம், விவசாயம் மற்றும் தோட்டக்கலை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் ஆகிய துறைகள்.

யார் இந்த புதிய துணைநிலை கவர்னர்கள்?

முர்மு
முர்மு

1. முர்மு (மத்திய அரசின் நிதித்துறையின் செலவினப் பிரிவு செயலர் பதவியில் தற்போது இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி. குஜராத் கேடர்):

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை கவர்னராகப் பதவி ஏற்க உள்ள முர்மு, 1985-ம் வருட ஐஏஎஸ் அதிகாரி. மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் வரும் செலவினப் பிரிவின் செயலராகப் பணியில் இருக்கிறார். குஜராத் கேடர் ஐஏஎஸ் என்பதால், குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது உள்துறை செயலர் பதவியில் இருந்திருக்கிறார். மோடி, அமித் ஷா... இருவருக்கும் நெருக்கமான தொடர்பில் உள்ளவர். குஜராத்தில் முர்முவின் பணிச் செயல்பாடு பிடித்துப்போனதால், மோடி பிரதமர் ஆனதும் மத்திய அரசு பணிக்கு அழைத்துக்கொண்டார். விரைவில் ரிட்டயர்டு ஆக விருந்த முர்முவைத் தற்போது ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை கவர்னராக நியமித்துள்ளார்.

ஆர்.கே. மாத்தூர்
ஆர்.கே. மாத்தூர்

2. ஆர்.கே. மாத்தூர் (ஐஏஎஸ் ரிட்டயர்டு. திரிபுரா மாநில கேடர்): லடாக் யூனியன் பிரசேதத்தின் முதல் துணைநிலை கவர்னராகப் பதவி ஏற்க உள்ள ஆர்.கே. மாத்தூர், 1977-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி. திரிபுரா மாநில அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர். மத்திய அரசில் ராணுவத்துறையின் செயலராகவும் பணியாற்றியவர். 2016ல் மத்திய அரசின் தலைமைத் தகவல் கமிஷனர் பதவியில் அமர்த்தப்பட்டார். அவரைத்தான் தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக நியமித்துள்ளனர்.

ஜம்மு|காஷ்மீர்|லடாக்: புவியியல் முதல் பொருளாதாரம் வரை அறியவேண்டிய வேறுபாடுகள்!
அடுத்த கட்டுரைக்கு