Published:Updated:

பீகார்: பாஜக-வுடன் மோதல்; சோனியா காந்தியுடன் பேச்சு - ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா நிதிஷ்?

சோனியா - நிதிஷ் குமார்

`நிதி ஆயோக்' கூட்டம் புறக்கணிப்பு... ஜேடியூ கட்சிக் கூட்டம்... சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேச்சு - பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா நிதிஷ்?!

பீகார்: பாஜக-வுடன் மோதல்; சோனியா காந்தியுடன் பேச்சு - ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா நிதிஷ்?

`நிதி ஆயோக்' கூட்டம் புறக்கணிப்பு... ஜேடியூ கட்சிக் கூட்டம்... சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேச்சு - பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா நிதிஷ்?!

Published:Updated:
சோனியா - நிதிஷ் குமார்

பீகாரை ஆளும் பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் உண்டாகியிருப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆரம்பம் முதலே இரு கட்சிகளுக்கும் இடையே சிறு சிறு முட்டல் மோதல்கள் இருந்துவந்தன. தற்போது அந்த மோதல் அடுத்தகட்டத்துக்குச் சென்றிருப்பதால், பீகார் அரசியலில் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. பா.ஜ.க-வினர் வெளிப்படையாக ஐக்கிய ஜனதா தளத்தின் செயல்பாடுகளை விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர். முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அரசின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து புறக்கணித்துவருகிறார். பீகாரில் ஆளும் கூட்டணி முறியுமா? - விரிவாக அலசுவோம்!

மோதல் தொடங்கியது எங்கே?

2020-ல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க-வும் கூட்டணியாகச் சந்தித்தன. 115 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. 110 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., 74 இடங்களைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில், மத்தியில் பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருக்கும் சிராக் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சி, மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்த்து நின்ற லோக் ஜன் சக்தி, பா.ஜ.க-வை வெறும் மூன்றே இடங்களில் மட்டும் எதிர்த்து போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், நிதிஷ் குமாருக்கு எதிராகத் தீவிர பிரசாரங்களையும் மேற்கொண்டார். மாநில உரிமைகளை முன்னிறுத்திக் களமிறங்கிய லோக் ஜன் சக்தி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால், வாக்குகள் பிரிந்தன. சில பல இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவவும் இது காரணமாக அமைந்தது.

மோடி - நிதிஷ்
மோடி - நிதிஷ்

தேர்தல் முடிந்த பிறகு, ``சிராக் பஸ்வானைவைத்து, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை காலி செய்துவிட்டது பா.ஜ.க'' என்று செய்திகள் பரவின. இந்தச் செய்தி நிதிஷ் ஆதரவாளர்களை, பா.ஜ.க-மீது கோபம் கொள்ளச் செய்தது. இருந்தும், பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். துணை முதல்வர், சபாநாயகர், அதிகாரம்கொண்ட அமைச்சரவை இலாக்காக்கள் உட்பட முக்கியப் பொறுப்புகள் பா.ஜ.க-வுக்கு கிடைத்தன. இதனால், ஆரம்பம் முதலே தான் நினைத்ததைச் செய்ய முடியாமல் திண்டாடினார் நிதிஷ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டமன்றத்தில் முற்றிய மோதல்!

அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களில் பா.ஜ.க-வும், ஐக்கிய ஜனதா தளமும் மோதிக்கொண்டன. குறிப்பாக, 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியை, கூட்டணியில் சேர்க்க மறுத்தது பா.ஜ.க. இதையடுத்து, அந்தத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்த்து 51 இடங்களில் போட்டியிட்டது ஐக்கிய ஜனதா தளம். இரண்டு கட்சிகளின் மாநில நிர்வாகிகள் அடிக்கடி மோதிக்கொண்டனர். ஒருகட்டத்தில், முதல்வரும் சபாநாயகரும் வெளிப்படையாகச் சட்டமன்றத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

பீகார் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஆளுங்கட்சியே சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்த நிகழ்வும் அரங்கேறியது. கடந்த ஜூன் 28 அன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தின் இரண்டாம் பாதியில், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. `இது யதார்த்தமாக நடந்தது' என ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், ``சட்டமன்றத்தில் `சிறந்த எம்.எல்.ஏ' குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென பா.ஜ.க-வினர் கோரிக்கைவைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு நிதிஷ் குமாரை மீறி ஒப்புதல் வழங்கினார் சபாநாயகர் விஜய் சின்ஹா. இதனால்தான், `சிறந்த எம்.எல்.ஏ' விவாதம் நடைபெறவிருந்த சமயத்தில் சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டது ஐக்கிய ஜனதா தளம்'' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா

இப்படியாக இரு கட்சிகளும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 7) நடந்த மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார் நிதிஷ் குமார். மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நிதிஷ் குமார் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது தவிர, கடந்த சில தினங்களுக்குள்ளாக, மத்திய அரசு அழைப்பு விடுத்த மூன்று நிகழ்ச்சிகளையும் புறக்கணித்திருந்தார் நிதிஷ் குமார்.

ஜேடியூ கட்சிக் கூட்டம்!

இந்த நிலையில் ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்களை சிறப்புக் கூட்டத்துக்கு அழைத்திருக்கிறார் நிதிஷ் குமார். ``கிட்டத்தட்ட பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முறியும் நிலையிலிருக்கிறது. அது குறித்து விவாதிக்கத்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்'' என்கின்றனர் பீகார் அரசியலை உற்று நோக்குபவர்கள்.

இதற்கிடையில், ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆர்.சி.பி.சிங், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். ஆர்.சி.பி.சிங், சட்டவிரோதமாக நிலம் வாங்கியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கட்சியிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கட்சியிலிருந்து விலகினார்.

``டிசம்பர் 2020 முதல் ஜூலை 2021 வரை ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக இருந்தவர் ஆர்.சி.பி.சிங். ஜூலை 2021 முதல் ஜூலை 2022 வரை நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய இரும்புத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். நிதிஷ் குமாரிடம் அனுமதி பெறாமலேயே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார் சிங். இதனால், அப்போதிலிருந்தே அவருக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே பனிப்போர் நிலவிவந்தது. அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க-வினருடன் அதிக நெருக்கம் காட்டிவந்தார் ஆர்.சி.பி.சிங். இதுவும் நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை என்பதால், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கிறது ஐக்கிய ஜனதா தளம்'' என்கின்றனர் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

இஃப்தார் விருந்தில் நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்
இஃப்தார் விருந்தில் நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்

மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நிதிஷ் குமார் தொலைபேசியில் பேசியதாகவும், அவரை நேரில் சந்திக்க நேரம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனவே, நாளை நடைபெறும் கட்சிக் கூட்டத்தில், பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பா.ஜ.க கூட்டணியிலிருந்து நிதிஷ் வெளியேறினால், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணிவைத்து ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.