Published:Updated:

பண மோசடி வழக்கில் மீண்டும் விசாரணை... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?!

செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் தொடரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்கைப் புதிதாக விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பண மோசடி வழக்கில் மீண்டும் விசாரணை... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் தொடரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்கைப் புதிதாக விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
செந்தில் பாலாஜி

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையுடனான மோதல் தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக, தொடர்ச்சியாக லைம்லைட்டில் இருந்துவருபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. தற்போது தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் வேலைவாங்கித் தருவதாகப் பலரிடம் லஞ்சம் வாங்கினார் என்கிற வழக்கு இன்றுவரை செந்தில் பாலாஜியைத் துரத்திக்கொண்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தார் என்று செந்தில் பாலாஜி மீது காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் நண்பர்களான பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகள் பதிவுசெய்தனர்.

அந்த வழக்குகள் சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில், மத்திய அமலாக்கப் பிரிவு தனியாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருக்கிறது. தன்மீது இருக்கும் மூன்று வழக்குகளையும் ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்குகள் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள், பணம் கொடுத்து ஏமாந்த புகார்தாரர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்த மூன்று வழக்குகளும் தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்’ என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன், “செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க நபராக இருக்கிறார். ஏற்கெனவே அவர் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து அப்பட்டமான மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். அவர்மீதும், அவரின் நண்பர்கள்மீதும் இருக்கும் பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அவருக்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. எனவே, அவர் மீதான வழக்குகளை ரத்துசெய்யக் கூடாது" என்று வாதிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ஏழ்மை நிலையில் இருக்கும் பல இளைஞர்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகள் ரத்துசெய்யப்பட்டுவிட்டால் கொடுத்த பணம் பறிபோய்விடும். எனவே, இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கூடாது. தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டனர். காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கைப் புதிதாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும், தன் மீதான வழக்குகளை ரத்துசெய்யக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

``இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராகத் தீர்ப்பு எதுவும் வழங்கப்படாதது, அவருக்குச் சாதகமான ஓர் அம்சம்தான். அதே நேரம், மத்திய குற்றப்பிரிவு புதிதாக அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருப்பதையும் செந்தில் பாலாஜிக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கலாம். ஏனென்றால், மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் மத்திய குற்றப்பிரிவு செயல்படுகிறது. எனவே, மாநில அமைச்சருக்கு எதிராக அந்த அமைப்பு செயல்பட வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில், அமலாத்துறையும் ஏற்கெனவே வழக்கு பதிந்திருப்பதால் இந்த வழக்கு, செந்தில் பாலாஜியின் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும் கத்திதான்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.