Published:Updated:

``குஷ்பு காங்கிரஸிலிருந்து ஓரம்கட்டப்படுகிறாரா?'' - காங்கிரஸ் தரப்பு என்ன சொல்கிறது?

இ.லோகேஷ்வரி

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு சொந்தக்கட்சியிலேயே ஓரம் கட்டப்படுவதாக, குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத, விஷயம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது.

Khushbu
Khushbu

''குஷ்பு இன்னும் தகுதியான இடத்துக்குப் போகலை. எல்லா இடத்திலேயும் அவங்க வளரக்கூடாதுன்னு நினைக்கிற மனிதர்கள் இருக்காங்க. குஷ்பு ரொம்ப சின்சியரா அரசியல் வேலைகளைப் பார்த்துக்கிட்டிருக்காங்க. ஆனா, எந்தவிதமான செல்வாக்கும் இல்லாத சிலர், இவங்க வளர்ச்சியைத் தடுத்துக்கிட்டிருக்காங்க. இது எனக்கு வருத்தமாதான் இருக்கு. கட்சிக்காக எந்த வேலையும் செய்யாத சிலர், தேர்தல்ல சீட்டு வாங்கிட்டு வந்திடுறாங்க. குஷ்புவுக்குக் கிடைக்கல.

Khusbhu Sundar
Khusbhu Sundar

‘உன் உரிமைக்காகப் பேசு’ன்னு சொன்னா, குஷ்பு கேட்கமாட்டாங்க. உழைப்பைப் பார்த்து, அவங்களா கொடுக்கணும்னு நினைப்பாங்க. ஆனா, இப்போ இருக்கிற அரசியல்ல அது நடக்கிற காரியமில்லை. ஏன்னா, குஷ்பு வளர்ந்துட்டா பலபேருக்கு ஆபத்து இருக்கு. இப்போ அவங்க இருக்கிற கட்சியும் குஷ்புவின் வளர்ச்சியை விரும்பலை. ஆனா, நல்ல எண்ணத்தோடு அரசியலுக்கு வந்திருக்காங்க குஷ்பு. அவங்க நோக்கம் நிறைவேறட்டும்!” என குஷ்பு குறித்து சமீபத்திய ஆனந்த விகடன் இதழில் பேசியிருந்தார் இயக்குநரும் குஷ்புவின் கணவருமான சுந்தர்.சி.

 “குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை!”

''குஷ்பு வளர்ந்துட்டா பலபேருக்கு ஆபத்து இருக்கு. இப்போ அவங்க இருக்கிற கட்சியும் குஷ்புவின் வளர்ச்சியை விரும்பலை. எந்தவிதமான செல்வாக்கும் இல்லாத சிலர், குஷ்பு வளர்ச்சியைத் தடுத்துக்கிட்டிருக்காங்க. கட்சிக்காக எந்த வேலையும் செய்யாத சிலர், தேர்தல்ல சீட்டு வாங்கிட்டு வந்திடுறாங்க. குஷ்புவுக்குக் கிடைக்கல'' என்ற சுந்தர்.சி பேச்சு தற்போது காங்கிரஸ் வட்டாரத்தில் அனல் கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு சொந்தக்கட்சியிலேயே ஓரம் கட்டப்படுவதாக, குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத, விஷயம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ''எந்தவிதமான செல்வாக்கும் இல்லாத சிலர்'' என்று சுந்தர்.சி யாரைக் குறிப்பிடுகிறார் என்று குஷ்புவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சுந்தர்.சி
சுந்தர்.சி

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், குஷ்பு தேர்தலில் போட்டியிட விரும்பியதாகவும், அதை வேண்டுமென்றே சிலர் தடுத்து நிறுத்தியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தபோதுதான் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதற்குமுன், தி.மு.க-வில் இருந்த குஷ்பு, மனக்கசப்போடு வெளியேறினார்.

அதன்பின், காங்கிரஸ் கட்சியில் அவருக்குத் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைமைக்கு ஆதரவாக பல தேசிய செய்தி ஊடகங்களில் அவர் தொடர்ந்து பேசி வந்தார். 2014 தேர்தலில் போட்டியிடலாம் என நினைத்தபோது, தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இதனால் வெற்றி வாய்ப்பு குறித்து யோசித்த குஷ்பு, அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமை திருநாவுக்கரசரிடம் சென்றது. அதிலிருந்தே குஷ்பு, கட்சியில் ஓரம்கட்டப்பட்டதாகத் தகவல் வந்தது. கட்சிப் பணிகளில் சுணக்கம் காட்டிவந்தார். அவருக்கும் கட்சியில் வேறு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதன்பிறகே, சீரியல்களில் பிஸியானார் குஷ்பு.

EVKS ELANGOVAN
EVKS ELANGOVAN

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பல மாற்றங்கள் நடந்தன. திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, கே.எஸ்.அழகிரி தலைவர் பதவிக்கு வந்தார். அதோடு, செயல் தலைவர்களாக ஐந்துபேர் நியமிக்கப்பட்டார்கள். இந்த மாற்றத்திலாவது, காங்கிரஸில் தன்னை நிலைநிறுத்துவதுபோல் ஒரு பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார் குஷ்பு. ஆனால், எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. அதோடு, நாடாளுமன்றத் தேர்தலில், சென்னை அல்லது திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என நினைத்தார். சென்னையில் படித்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அதனால், தன்னால் அவர்களிடம் எளிதாக அவர்களின் மனதைவெல்ல முடியும் என நினைத்தார்.

திருச்சி தொகுதியில்தான், குஷ்புவுக்கு அவரது ரசிகர்கள் முதலில் கோயில் கட்டினர். இங்கு ரசிகர் பலம் அதிகம் எனக் கடைசியில் திருச்சியைத் தேர்ந்தெடுத்தார். தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான அலைவீசுகிறது, பலமான கூட்டணி இருக்கிறது, கண்டிப்பாகத் தேர்தலில் நின்றால் வெற்றி பெற்றுவிடுவேன் என நினைத்தார் குஷ்பு. ஆனால், அவர் கேட்ட திருச்சி தொகுதி முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த குஷ்பு, பெரிதாக பிரசாரத்துக்குச் செல்லவில்லை. அப்போதே, இது ஊடகங்களில் விவாதமானது. ஆனால், தேனி தொகுதியில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பலத்த போட்டி நிலவிய தேனி தொகுதியில், இளங்கோவன் இரண்டாம் இடம்பிடித்தார்.

THIRUNAVUKKARASAR
THIRUNAVUKKARASAR

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடிகை ஊர்மிளா, கட்சியில் இணைந்ததுமே தேர்தலில் போட்டியிட்டார். அதுபோல், தனக்கும் போட்டியிட அனுமதி கிடைக்கும் என நினைத்தார். குஷ்பு பல மொழிகள் சரளமாகப் பேசுவார், ட்விட்டரில் தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசிவருபவர், திறமையானவர், மக்கள் செல்வாக்கு இருக்கிறது குஷ்புக்கு. ஆனால் அவருக்கு ஏன் தொடர்ந்து பதவிகள் மறுக்கப்பட்டு வருகிறது என அவரது ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதைத்தான் சுந்தர்.சி-யும் ஆனந்த விகடன் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்தார். அப்போது, குஷ்பு இவர்களின் கட்சியில் இணையப்போகிறார் என சர்ச்சை எழுந்தது. அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ''காங்கிரசிலிருந்து நான் விலகுவேன் என்ற பேச்சுக்கு வாய்ப்பே இல்லை. இனிமேல் அரசியலைவிட்டு விலகினாலும் காங்கிரஸைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லவும் மாட்டேன்'' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது இந்த முடிவு மாறுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சுந்தர்.சி பேசியது குறித்து, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டதற்கு, ''குஷ்பு திறமையானவர். அவர் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சி பேசியது அவரது கருத்து. இதற்குமுன் எப்படி இருந்தது எனத் தெரியவில்லை. ஆனால், எனக்கும் அவருக்கும் சுமுகமான நட்பு இருக்கிறது. அவரை ஒருபோதும் யாரும் ஓரம்கட்ட நினைக்கவில்லை'' என்றார்.