Published:Updated:

ஆளுநர் விதித்த கெடு; முன்வராத 3 கட்சிகள்! -மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை?

மகாராஷ்டிராவில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முன்வராத நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தவ் தாக்கரே - ஃபட்னாவிஸ்
உத்தவ் தாக்கரே - ஃபட்னாவிஸ்

பா.ஜ.க-வும் சிவசேனாவும் கிட்டத்தட்ட ஒரே கொள்கை , ஒரே சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள். கடந்த 25 வருடங்களாக இந்த இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது, ஆட்சியமைப்பது எனத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் நட்பு பாராட்டி வருகின்றன. இத்தனை வருட நட்பு, கடந்த 15 நாள்களில் பெரும் சண்டையாக உருவெடுத்துள்ளது.

சிவசேனா - பா.ஜ.க
சிவசேனா - பா.ஜ.க

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க-வும் சிவசேனாவும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி, தலா இரண்டரை ஆண்டுகள் இரு கட்சிகளும் மகாராஷ்டிராவை ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான். முன்னதாக இதனை ஏற்றுக் கூட்டணி வைத்துக்கொண்ட பா.ஜ.க, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட்டணி ஒப்பந்தத்தை மீறியது. இரண்டரை வருட ஆட்சியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது. தன் மகனை எப்படியாவது முதல்வராக்கியே ஆக வேண்டும் என்ற கனவில், இரண்டரை வருட ஆட்சியைக் கேட்டு பிடிவாதம் காட்டினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

இப்படி இரு கட்சிகளுக்கு உள்ளேயும் நீடித்து வந்த இழுபறி தற்போது கூட்டணி முறிவு வரை சென்றுவிட்டது. மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வந்த பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், இரு நாள்களுக்கு முன்பு தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ஆட்சி தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சிவசேனா எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க வாங்க நினைப்பதாக அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

சிவசேனா - பா.ஜ.க
சிவசேனா - பா.ஜ.க

ஃபட்னாவிஸ் பேசிய `பொய்’ என்ற ஒருவார்த்தை சிவசேனாவை கோபத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. ஃபட்னாவிஸ் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த உத்தவ் தாக்கரே, ``நான் பொய் சொன்னதாக அவர் கூறியதையடுத்து பட்னாவிஸுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். பா.ஜ.க எங்களுக்கு எதிரிக்கட்சி இல்லை. ஆனால், அவர்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். நாங்கள் ஆட்சியமைக்க அமித் ஷாவோ, பட்னாவிஸோ தேவை இல்லை” எனக் காட்டமாகப் பேசினார். இதனால் இரு கட்சிகளின் கூட்டணி உடையவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

`அலர்ட்’ சிவசேனா; தாக்கரேவின் நைட் விசிட்! - இறுதிக்கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்

இதை உறுதிப்படுத்தும்விதமாக, மத்திய அமைச்சரவையிலிருந்து சிவசேனா வெளியேறியது. மத்திய கனரக தொழில் துறையில் அமைச்சராக இருந்த சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் ராஜினாமாவால் பா.ஜ.க - சிவசேனா சண்டை உச்சத்தை அடைந்துள்ளது. எப்படியேனும் முதல்வர் அரியாசனத்தில் ஏறியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள சிவசேனா, பா.ஜ.க-வை புறம்தள்ளிவிட்டு நேரடியாக ஆளுநரைச் சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்துள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இன்னும் இரண்டு நாள்களில், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் தேவை எனவும் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆளுநர், பா.ஜ.க, சிவசேனாவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். `இன்றைய தேதி முடிவதற்குள் என்.சி.பி, தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் காங்கிரஸுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்.சி.பி தலைவர் சரத் பவார். இவர்களுடன் சிவசேனாவையும் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

உத்தவ் தாக்கரேவின் வலது கை போலச் செயல்பட்டு, `மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க வேண்டும்' என்ற நோக்கில் மிகவும் தீவிரமாகச் செயல்படுபவர் சஞ்சய் ராவத். கடந்த 15 நாள்களாக அங்கு நடக்கும் அரசியல் பிரச்னைகளில் இவரே முன்நின்று அனைத்தையும் பேசி வருகிறார். தொடர் மன அழுத்தத்தால் சஞ்சய் ராவத்துக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று சஞ்சய் ராவத் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார் சரத் பவார். அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், `மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாகக் காங்கிரஸுடன் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, அது உண்மையா?' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘ அப்படி எந்த ஆலோசனைக்கூட்டமும் நடக்கவில்லை. உங்களுக்கு யார் சொன்னது?’ என எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார் பவார்.

சரத் பவார்
சரத் பவார்

இன்றைக்குள் என்.சி.பி தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில் மகாராஷ்டிராவின் அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது. `குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டாம்' என நினைக்கும் என்.சி.பி, காங்கிரஸையும் சிவசேனாவையும் தன் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தும் இவர்களின் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க-வோ, அங்கு நடக்கும் அரசியல் பிரச்னைகளை அமைதியாகக் கவனித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன்வராத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டுவர, அம்மாநில ஆளுநர் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதில் மகாராஷ்டிரா விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.