Published:Updated:

வழிவிடும் காங். ‘வியூகம்' - மத்தியில் பாஜக-வுக்கு எதிரான தலைவராக உருவெடுக்கிறாரா மம்தா?

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அதற்கு காங்கிரஸ் விலகியிருந்து ஆதரவு தருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாஜக-வுக்கு எதிரான தலைவராக மம்தா உருவெடுப்பாரா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நான் எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் தலைவராக இருக்க விரும்பவில்லை. ஒரு சாதாரணத் தொண்டராகத் தெருவில் இருக்கும் சாமானியனாக இருந்து அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நான் உதவவே விரும்புகிறேன். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். அதை நோக்கி மட்டுமே என்னுடைய அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கும்.” - டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதுதான் இந்த வாசகம். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மாவைச் சந்தித்தவர் ராகுல், சோனியா காந்தியையும் சந்தித்திருக்கிறார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்திருக்கிறார். சரத் பவாரையும் மம்தா சந்தித்திருக்கிறார். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைப்பதும் மம்தாவுக்கு எளிதானதுதான்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள். ஆனால், அது எப்படிச் சாத்தியமாகப்போகிறது என்பதைத்தான் இனி நாம் பார்க்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் இந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் காங்கிரஸ் விலகியிருப்பதற்கான காரணம் என்ன... பா.ஜ.க-வுக்கு எதிரான மிகப்பெரிய தலைவராக உருவெடுக்கிறாரா ‘வங்கத்துப் புலி’ மம்தா பானர்ஜி?

ஓரணியில் திரளும் எதிர்கட்சிகள்.. பா.ஜ.க-வின் பலம் பெருகுவதைக் காட்டுகிறதா? - ஒரு பார்வை

``மக்கள் போதுமான அளவுக்கு `அச்சே தின்’ (நல்ல நாள்) பார்த்துவிட்டதால் மோடி அரசுக்கு மக்கள் `சச்சே தின்’ (உண்மையான நாள்) என்றால் என்ன எனக் காட்டுவார்கள். நாட்டு மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு அதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வன்முறையைத் தூண்டிவிடுவதிலும், மக்கள் மீது, பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஏன் உட்கட்சி தலைவர்கள் மீது சர்வாதிகாரம் செலுத்துவதிலும், பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடுவதிலும் ஆர்வமாக இருக்கிறது. என்னுடைய விமர்சனமெல்லாம் உங்கள் மீது இல்லை... உங்கள் கட்சி மீதுதான் என்பதால், நீங்கள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகத் தள்ளாடிக்கொண்டிருக்கும்போது மத்திய அரசு ஏதும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. ஆனால், எங்களால் அப்படி இருக்க முடியவில்லை” எனப் பொருளாதாரரீதியிலும் அரசியல்ரீதியிலும் தொடர்ந்து மோடியை விமர்சித்துவருகிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

‘மன் கி பாத்' நிகழ்ச்சி நடத்துவதற்கு பதிலாக ‘பெட்ரோல் கி பாத்', ‘டீசல் கி பாத்', ‘தடுப்பூசி கி பாத்' நிகழ்ச்சிகளைப் பிரதமர் மோடி நடத்தலாம் எனத் தொடர்ந்து அவருக்கு நெருக்கடிகளைக் கொடுத்துவருவதோடு, தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள பெகாசஸ் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்றையும் அமைத்து, தான் மட்டுமே அவருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அதை நிலைநிறுத்திக்கொண்டேயிருக்கிறார்.

`ஒன்றிய அரசு விவகாரம்'- பாஜக-வுக்கு ஆதரவாக திமுக-வுடன் ஓ.பி.எஸ் மோதுவது ஏன்?'

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பா.ஜ.க-வின் கருத்தியலுக்கு ஒட்டுமொத்தமாக எதிர்நிலையில் இருக்கும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், நட்பாக இருந்து தற்போது பரம எதிரியாக இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேகூட இந்த அளவுக்கு மோடியையும் மத்திய அரசையும் எதிர்க்கவில்லை. எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது அவ்வப்போது தலைதூக்கி, அவ்வப்போது முடிவதாகத்தான் இருந்திருக்கிறது. தேசிய அளவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத் தலைவரின் தலைமையை ஏற்குமா என்பது சந்தேகம்தான் என்றாலும், தற்போது பலகீனமாக இருப்பதால் மம்தாவின் தலைமையை ஏற்பது போன்ற பிம்பத்தை காங்கிரஸ் கட்டமைக்கலாம். ஆனாலும், அது எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. தற்போதைக்கு பா.ஜ.க-வுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும். ஆனால், அது தங்களால் சாத்தியப்படாது என்பதால் தற்போதைக்கு காங்கிரஸ் விலகியிருந்து மம்தாவின் நடவடிக்கைக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கத்தான் செய்வார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் தாங்கள்தான் பிரதான கட்சியாக இருக்க வேண்டும். தங்கள் கட்சியிலிருந்துதான் பிரதமர் வேட்பாளர் வர வேண்டும் என்று நிச்சயம் தலைமையைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள்” என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்
எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

எல்லோரும் சொல்வதுபோல அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டணி முயற்சி எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை மோடிக்கு எதிராகத் தன்னை ஒரு தலைவராக மம்தா நிலைநிறுத்த என்னவெல்லாம் செய்கிறார் என்பதையும், அதை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்கிறது என்ற அரசியல் விளையாட்டையும் வரும் காலங்களில் நாம் வேடிக்கை பார்க்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு